இனிய ஜெயம்,
“ஆம், நான் அதை அறிவேன். என்னால் அதை செய்யமுடியாது. அதற்கும் ஒரு ஷாத்ர வல்லமை தேவை” என்றார் விதுரர்.
இன்றைய பீஷ்ம விதுர விவாதத்தில் விதுரர் வந்து சேர்ந்திருக்கும் சுய அளவீட்டின் எல்லை அழகு.
திருதுராராஸ்த்ரர் பத்ரசேனர் இருவரும் உணர்சிகளையே ஆயுதமாக்கி பொருதுகின்றனர். இரு சத்ரிய குணங்களும் விடாக் கண்டன், கொடாக் கண்டன் நிலை.
கிருஷ்ணன் உச்ச பட்ச ராஜ தந்திரி. சார்லி சாப்ளின் திரைப் படத்தில் ஒரு காட்சி வரும். கப்பல் கட்டும் இடம் ஒன்றில் சார்லி பணிக்கு சேர்வார். முதல் பணியாக அவருக்கு ஒரு சிறிய கட்டை ஒன்று பொறுக்கி வரும் பணி தரப்படும். சார்லி எடுத்துவரும் கட்டை, கட்டப் பட்டு வரும் கப்பல் கடலுக்குள் இறங்கி விடாமல் இருக்க அறையப்பட்ட ஆப்பு.
கிருஷ்ணனும் பலராமர் வழியே அதையே செய்கிறார். எதற்கு எங்கு ஆப்பு செருக வேண்டும், எந்த ஆப்பை எப்போது உருவ வேண்டும் இதுவே கிருஷ்ணன் செய்வது.
பலராமர் சீடன் செத்தே போனான் என கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறார். திருதாவோ ஆனந்தத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
உணர்சிகள் அத்தனயும் ஒன்றாக குவியும் ஒரு இடத்தில் அதன் காரணம் எதுவோ அதை ஒன்றுமே இல்லாமல் இல்லாமல் ஆக்கி விடுகிறான் கிருஷ்ணன்.
ஒரு மந்தையை 'வழிநடத்தும்' களிரை மட்டுமே திசை திருப்பினால் போதும் , மந்தை மொத்தமும் திசை மாறும். இதை திருதாவின் அருகிருந்து செய்ய கணிகன் என்ன பாடு படுகிறான். ஆனால் கிருஷ்ணன் எங்கிருந்தோ அதை செய்கிறான்.
பீஷ்மரும் விதுரரும் ஒருவரை ஒருவர் நோக்கி விழிகளால் புன்னகைத்துக் கொள்வது பேரழகு.
இன்னும் பீஷ்மர் கிருஷ்ணனை சந்திக்க வில்லை. கடும் பிரம்மச் சாரியும், காமவினோதாலீலனும் சந்திக்கும் அந்த முதல் நிகழ்வு எப்படி இருக்கும் என கற்பனை பறக்கிறது.
கடலூர் சீனு