Saturday, December 27, 2014

பகடைக்காய்



மீண்டும் ஒரு முறை தள்ளி போகிறது அவனின் மணிமுடி சூழ்தல். அல்லது அரசனாக வேண்டியதின் வாய்ப்பு 

இதுவரை துரியோதனன் செய்த தவறு என்ன? வயிற்றில் வளரும் போதே பெரும் கனவொன்றை ஏந்தி வந்து பிறந்தது ?  தன்னை சுற்றிலும் அறம் வழி நிற்பார் வழிகாட்டுதல் இன்றி தன் வேட்கை மட்டுமே முதன்மை என்பதை தூண்டும் படியாக வளர்ந்தது ? மாமனாக ஆனவன் சொன்ன விதைகள் மனதில் மரமாக வளர்ந்து நாடாள வேண்டும் என்று ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தது ? அவ்விதம் ஆள அனைத்து தரப்பிலும் வாய்ப்புகள் இருந்தும் அது தள்ளி  போவதும் பின் வரும் காலத்தில் தெளிவாக கையை விட்டு போவதும் கண்டு கொதித்து அளர்வது ? ஒரே தோள் கொண்டு தம்பியாக வளர்ந்து நின்றவன் தன்னை காப்பாற்றியதை தன் சுய அவமதிப்பாக கொண்டு விஷம் வைத்து ஆற்றில் வீசியது துரோகத்தின் முதல் வேர். மாளிகை எரி வைத்த சம்பவம் ஒரு பாவத்தின் முதல் துளி ... என்றாலும் இவை அனைத்தும் அவனின் முழு முதல் முடிவு அல்ல என்பதாக தான் உங்கள் வர்ணனை செல்கிறது. அப்படி இருக்கையில் அவனின் கனவுகள் தள்ளி போவது அயர்ச்சி தருகிறது. 

அவரவர் கைகளுக்கு முன் வரும் வாய்ப்பை கண்டு கொள்ளும் அரசியல் கூர்மையும், அதை தனது ஆக்கி கொள்ளும் வேகமும் விவேகமும் மட்டுமாக தெரிகிறது இந்த சதுரங்க வேக விளையாட்டு. அரசவையில் அன்று இறந்த பாண்டுவை தன் கடைசி அஸ்திரமாக குந்தி உபயோகித்து வென்றது அப்படி தோன்ற வைக்கிறது. குந்தியின் கைகளில் தருமன் மற்றும் பாண்டவர் என்றால் மாதுளனின் கைகளில் துரியன். எனில் அவனின் வலிகளுக்கு, ஏமாற்றத்திற்கு அர்த்தங்கள் இல்லை போல... 

அவரவர் வகையில் அனைத்தும் சரியே என்பதற்கு விதி சிரித்தபடி செல்வதை தளர்வாக பார்க்கிறேன். 

அன்புடன்,
லிங்கராஜ்