Wednesday, December 17, 2014

பாஞ்சாலியின் ஆளுமை



நன்றி ஜெ.

பாஞ்சாலியை நீங்கள் படைக்கும் அந்த அற்புதத்தை கண்டு வியக்கின்றேன். ஒவ்வொரு சொல்லின் வழியாகவும் அவளை அகம் முதிர்ந்தவளாக அன்னையாக, சக்ரவர்தினியாகவே படைக்கின்றீர்கள் என்பதை அறிந்து பேரானந்தப்பட்டேன். பாஞ்சாலியின் அசைவு கூட அவளை பெரும் பிறப்பாக பெரும்தெய்வமாக காட்டுவதில் வானம் தொடுகின்றீர்கள். 


தமக்கை தங்கை என்ற சொல்வழி வரும் மனநிலையை இங்கு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இது உங்கள் புன்னகைக்காக மட்டும். 

நமது பாரதநாட்டினர் மனநிலையில் தங்கையை காக்கும் பொறுப்பில் அண்ணன் அந்த நாராயணனின் வடிவமாகவே தன்னை எண்ணுகின்றான். சிவலிங்கமாகிவிட்ட கணவனைத்தேடி பசுவாகிவிட்ட பார்வதிக்காக நாராயணன் மாடுமேய்ப்பவன் ஆகிவிடுகின்றான்.  இவன் தங்கைக்காக இவன் மாடுமேய்க்க சென்றது சரி. அவன் பத்தினி என்ன பாடு பட்டு இரு்பாள். அவளும் ஒரு கூடையை தூக்கிக்கொண்டு அவன் பின்னாடி கஞ்சி காச்சி ஊத்த போயி இருக்கணும். தங்கை பாசம் படுத்தும்பாடு. அதே நேரத்தில் தங்கையை சாட்சாத் பார்வதிதேவியாகவே எண்ணி வழிபடவும் வேண்டும் இப்பதான் மச்சான் காரணுக்கு நீ கட்டிக்கிட்டு வந்தது என்வீட்டு பொண்ணு இல்லடா  என்வீட்டு சாமி என்று காட்டமுடியும். கட்டிக்கொடுத்த பின்னும் அண்ணன் கடமை முடிந்துவிடவில்லை.  

நேப்பாலி நண்பன் ஒரு வீடியோ காட்டினான். அவன் வீட்டில் நடந்த கௌரி பூசை என்றான். 35 வயதுக்குமேல் இருக்கும் அவன்  ஏழு எட்டு வயது  இருக்கும் அவனது தங்கையின் காலில் விழுந்து  நெற்றி மண்பட வணங்கி புது துணி வெற்றிலைப்பாக்கு வரிசை எல்லாம் கொடுத்தான். அந்த சின்ன குழந்தையும் தன்னை சாட்சாத் கௌரியாக நினைத்து அவன் தலையில் பூபோட்டு, குங்குமம் வைத்து வாழ்த்தியது. அவன் தந்தையும் அவரின் தங்கைகளை வணங்கினார். அகிலாண்ட நாயகியாகிய அன்னையை பார்வதியை தனது தங்கை என்று வணங்க மறுத்த நாராயணன் சக்தியின் கோபத்திற்கு ஆளாகிய கதை நினைவுக்கு வந்தது. இந்த புராணத்திற்கு பின்னால் இருக்கும் நடமுறைவாழ்க்கை மனநிலை பற்றி ஓசித்தேன்.  

திருஷ்டாத்யும்னன் மனநிலையும் இதுபோல்தான் இருக்கும். அவன் கண்ணன் இல்லை என்றாலும் அவனும் தன்னை கண்ணன் என்றுதான் எண்ணிக்கொள்வான் அல்லவா? திருஷ்டாத்யும்னன் வளர வளர தங்கையான பாஞ்சாலியை தந்தை துருபதன் மனநிலைக்கு சென்றுப்பார்ப்பான் என்று நினைத்தேன்.  

நமது பண்பாட்டில் அக்கா அம்மாவின் இடத்திற்கு பிறந்தபோதே சென்றுவிடுகின்றாள் என்று நினைக்கின்றேன். தம்பி பாப்பாவை தூக்கி வைத்துக்கொள்ளும்போதே அது அவனுக்கு தான் அம்மா என்றே நினைத்துக்கொள்ளுமோ? அவனும் அம்மாவிடம் எதிர்பார்க்கும் அனைத்து பணிவிடையையும் அக்காவிடம் எதிர்ப்பார்க்கிறான். அது கையில் உள்ள தின்பண்டத்தை குற்ற உணர்வே இல்லாமல் பிடிங்கி தின்றுவிட்டுபோகின்றான்.  அவள் படும் கஷ்டம் எல்லாம் அம்மாபடும் கஷ்டம்போல அவனுக்கு வலிப்பதே இல்லை.  அவள் தாங்கிக்கொள்வாள் என்ற மனநிலைக்கு வந்தும் விடுகின்றான். திருநாவுக்கரசர் அக்கா, அருணகிரி நாதர் அக்கா. ராஜராஜன் அக்கா எல்லாம் நினைவுக்கு வருகின்றார்கள் ஜெ. 


தங்கைகள் மழலையாக இருந்தாலும் பெரும் தெய்வமாக இருப்பதையே எங்கும் காண்கின்றேன். அண்ணன்கள் எல்லாம் அவர்களுக்கு நாராயணனே. அவர்களுக்காக அவன் மலையை குடையாக பிடிப்பான் என்ற நினைப்போடு வாழ்வார்கள். அண்ணன்மீது முழு அதிகாரம் செலுத்துவார்கள். அண்ணிகள் எல்லாம் பணியாளனின் பணியாள் மட்டும்.  அதற்கு வயது வித்தியாசமே இல்லை என்று நினைக்கின்றேன். தங்கை பிறந்தவீட்டில் இருந்தாலும் புகுந்தவீட்டிற்கு சென்றாலும் ஒரு தெய்வத்தின் சாயாலோடு செல்கின்றாள், அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நினைக்கின்றேன். 

பாஞ்சாலின் துன்பத்திற்குபின் திருஷ்டாத்யும்னன் வலியை இந்த இடத்தில் அண்ணனின் வலியாக, அண்ணன்வழியாக ஒரு தந்தையின் வலியாக பார்க்கின்றேன். தம்பியின் வலி மகனின் வலிபோல் ஆகிவிடுவதால் அண்ணனின் வலி பெரியது என்கின்றது மனம். 

தவறாக நினைக்கவேண்டாம்.எனது உள்ளத்தை பகிர்ந்துக்கொண்டேன்.   உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். நீண்ட விளக்கம் தந்ததற்கு நன்றிகள் பல. 

வெண்முரசு ஒரு பெருவரம். அதற்கு எந்த ஒரு பாராட்டும் நன்றியும் இணையாகாது. பாராட்டுவது நன்றி சொல்வது மூலம் நானும் வெண்முரசில் இணைந்து கொள்கின்றேன் என்பதுதான் உண்மை. 

அன்புடன். 
ராமராஜன் மாணிக்கவேல்