Wednesday, December 17, 2014

பாஞ்சாலி மூத்தவளா?



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

//இவனுக்கு ஓர் தமக்கை இருப்பதாகச் சொன்னார்கள். அவள் கருநிறம் கொண்ட பேரழகி என்று சூதர்கள் பாடிப்பாடி மயங்கினார்கள்” என்றார்//-பிரயாகை-56

திருஷ்டத்யும்னன் பெரியவன் என்றும், பாஞ்சாலி இளையவள் என்பதுதான் நடைமுறை. ஏன் இங்கு  மூத்தவள் என்று காட்டுகின்றீர்கள்?.

துருபதனின் நோக்கம் துரோணரை கொல்லும் ஒரு ஆண்பிள்ளை. யாகப்பயனால் பாஞ்சாலியும் கிடைத்தாள். இதற்குபின்புதான் அவன் அர்ஜுனனை மருகனாக அடையவேண்டும் என்று மீன்பொறி அமைக்கின்றான்.

நீங்கள் பாஞ்சாலியை பெரியவள் என்றுகாட்டுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

“இளையவனே, நீ சென்று வெளியே ரதங்களைப்பார்” என்று திரௌபதி மெல்லிய உறுதியான குரலில் சொன்னாள். அக்குரலை அறிந்த திருஷ்டத்யும்னன் வணங்கிவிட்டு வெளியே சென்றதும்-பிரயாகை-27 ல் இந்த வரிகள் வந்தபோதே கேட்க நினைத்தேன்.

நன்றி
அன்புடன்
ரா.மாணிக்கவேல்.


அன்புள்ள மாணிக்கவேல்

மகாபாரதக்கதையின்படி இருவருமே வேள்வி நெருப்பில் முழுவளர்ச்சி அடைந்தவர்களாக ஒரே நாளில் தோன்றியவர்கள். மூத்தவர் இளையவள் என்று சொல்லமுடியாது. அப்படிச் சொல்லக் காரணம் திருஷ்டதுய்ம்னன் தோன்றிய உடனே தொடர்ந்து பாஞ்சாலி வந்தாள் என்று சொல்லப்பட்டிருப்பதாக இருக்கலாம்

மகாபாரதத்தில் பாஞ்சாலி முழுக்கன்னியாக நெருப்பில் தோன்றுகிறாள். அந்த ‘மாய’த்தை வெண்முரசின் புனைவு ஒருமை ஏற்காது. ஆகவே அவர்கள் இருவரும் வேள்வியின் பயனாக அரசியின் கருவில் இரட்டைப்பிள்ளைகளாக பிறந்ததாகவே வைத்திருக்கிறேன்

அப்படி வைக்கும்போது வியாசர் அளித்த ஒரு குணச்சித்திரத்தை மாற்ற விரும்பவில்லை. பிறப்பிலேயே அகம் முதிர்ந்தவளாக, சிறுமித்தன்மையே இல்லாதவளாக, இயல்பிலேயே சக்கரவர்த்தினியாக பாஞ்சாலியை படைத்தேன். அப்படி இருக்கையில் அவளை தங்கையாக அமைக்க முடியாது. திருஷ்டதுய்ம்னன் பிற மனிதர்களைப்போல சிறுவனாக இருந்து வளர்கிறான்

ஆகவே பாஞ்சாலி தமக்கை என்று கொண்டேன். மனநிலையால் தமக்கை

ஜெ