ஜெ,
வெளிவந்துகொண்டிருக்கும் அத்தியாயங்களில் திருதராஷ்டிரனின் பாத்திரப்படைப்பு மேலும் மேலும் துலக்கமாகிக்கொண்டே வருகிறது. இனிமையான அன்பான ராட்சதன். அவரது துயரத்தைப் பார்த்தபோது ஒன்று தோன்றியது ‘கண்மூடித்தனம்’ என்று சொல்வோமே அது இதுதான். அன்பு பாசம் பகை கோபம் எல்லாமே இப்படி கண்மூடித்தனமாக இருந்தால்தான் பிரம்மாண்டமாக ஆகிறது இல்லையா? கண்மூடித்தனமான அன்பு என்ற நிலையில் இருந்து கண்மூடித்தனமான துக்கத்துக்குப் போகிறார்
அவரிடம் ஒன்றுமே சொல்லமுடியாது. அவரை தேற்றமுடியாது என்பதெல்லாம் நினைக்க நினைக்க பயங்கரமாக இருக்கின்றன. அவரை அந்த உடலுக்குள் இருந்து வெளியே எடுக்கவே முடியாது என்பது போலத் தோன்றுகிறது
அவரை பீஷ்மர் ஆறுதல்படுத்தும் இடமும் அபாரமாக இருக்கிறது. அவரிடம் ஒன்றுமே பேசமுடியாது. தொட்டுத்தான் உணர்த்தமுடியும். பீஷ்மர் அதைத்தான் செய்கிறார். அவரிடம் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்கிறார். அவ்வளவுதான்
பீஷ்மரின் குணச்சித்திரமும் அழகாக உள்ளது. அவர் கம்பீரமாகவும் திமிராகவும் சிறந்த ஆட்சியாளனாக கணிகனை நடத்துகிரார். நுட்பமாக அனைத்தையும் ஊகிக்கிறார். ஆனால் பாண்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததுமே அப்படியே அப்பாவாக ஆகிவிடுகிறார். அந்த மாற்றம் மிகவும் நம்பகமாக இருந்தது. அந்த நிமிர்வை இழந்து அவர் கண்ணீர் விடும் இடத்தில்தான் அவர் துல்லியமாக தெரியவருகிறார்
சாரதி