Thursday, July 23, 2015

நாம் ஏன் காதல்கொள்கிறோம்?


   திருஷ்டத்துய்மன் சுப்ரைமீது காதலில் இருக்கிறான் என்று தெரிகிறது.  ஏன்? சுப்ரை மீது காதல் ? அதற்கு அவள் அழகு காரணமா? அரசிளங்குமரனான திருஷ்டத்துய்மன் அவளைப்போன்ற அழகிகளை இதுவரை காணாமலா இருந்திருப்பான்.   அவர்கள் பழகியதில்லை, பேசிக்கொண்டதில்லை. ஒரு இரவின் குளறுபடியான சிறிய சந்திப்பு மட்டுமே. எதனால் அவனுக்கு அவள் மீது அப்படியொரு காதல்? அதுவும்  பார்க்கும் பெண்ணிலெல்லாம் அவன் அவளை காண்கிறான்.

   எந்த உணர்ச்சியும் கலக்காமல் அறிவுபூர்வமாக மட்டும் கொண்டும் சிந்தித்தால் காதலே ஒரு அபத்தம் போல் தொன்றுகிறது. வெறும் காமத்தில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இயற்கை இனப்பெருக்கத்திற்காக காமம் என்ற கயிற்றின் மூலம் நம்மை ஆட்டுவிக்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் இது பொதுவானது. சிந்தனை என்ற ஒன்றை கொண்ட மனித இனம் இந்த இயற்கையின்  லீலையை புரிந்துகொண்டு காமத்தின் பிடியிலிருந்து விலகியோ அல்லது காமம் துய்ப்பதற்கு ஒரு எளிதான வழிமுறையை கண்டிருக்க வேண்டும்.  ஆனால் மனிதர்கள் காமத்தில்  காதலை கலந்து மிகவும் சிக்கலாக்கிக்கொண்டிருக்கின்
றனர்.
     அல்லது காதல் காமம் மட்டும்தானா? காமத்தின் அலங்கரிக்கப்பட்ட வடிவம்தான் காதலென்பதா? காமத்தின் அடிப்படை எதிர் பாலினத்தவரின் உடலழகு என்பதால்  எதிர்பாலரின் உடல்மட்டும்தான் காதலை தீர்மானிக்கவேண்டும்.  அப்படியாகுமானால் அழகு அதிகமான மற்றொருவரை காணும்போதெல்லாம காதலும் மாறிக்கொண்டிருக்கவேண்டும். நம் துணையின் அழகு காலத்தால் விபத்தால் குறையும்போது காதல் குறைந்துவிடுவதில்லை. ஆகவே காதலின் வலிமை என்பது அழகில் அல்ல.  

      சிந்தனை ஒன்றி மனங்கள் கலப்பதுதான்  காதல் என்பதா?  காதலைச் சொல்லிக்கொண்ட அடுத்த நொடியிலிருந்து சண்டையை ஆரம்பித்துவிடும் காதலர்கள், திருமணத்திற்கு பின்னரும் தம் சண்டையை ஆயுட்காலம் முழுதும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் காதல் குறைவதில்லை என்று கண்டிருக்கிறேன். படு கஞ்சனான என் தாத்தாவும் சமயத்தில் யாருக்கும்  தெரியாமல் வீட்டு  பொருட்களை விற்கக்கூடிய   செலவாளியான  என் பாட்டியும் வாழ்ந்த வாழ்வில் இல்லாத காதலா? சில சமயம் ஒரு தம்பதியினரை அவர்களுக்குள் இருக்கும் சிந்தனை வேறுபாடுகளே அவர்களை   காதலில் மேலும் நெருங்க வைக்கிறது என்பதைக்கண்டிருக்கிறோம்.

     எது காதலாகிறது? காமத்திலிருந்து தோன்றும் காதலை எது உயர்த்துகிறது? ஒருவருக்கொருவர் தம்மை உடமையாக்கிக்கொண்டு அர்ப்பணித்துக்கொள்வதையே நான் காதல் என்று உணர்கிறேன். காதலன் தம்மை முழுமையாக தன்னிடம் சமர்ப்பித்துவிட்டதாக அறியும் பெண்னே அவனுக்கு தன் காதலை தெரிவிக்கிறாள். அப்போதே அவனுக்கு தன்னை அவனின் உடைமையென அறிகிறாள். காமத்தில் வெறும் உடலை மட்டுமே பகிர்ந்துகொள்கின்றனர்.  ஆனால் காதலிலில் ஒருவருக்கொருவர் உடல் உள்ளம் என முழுமையாக தன்னை கொடுத்துக்கொள்கிறனர். 

   சுப்ரை தன்  உடல் மட்டுமல்லாது  தன் உயிரையும்  கொடுக்கத் தயாராக இருப்பதை திருஷ்டத்துய்மன் அன்றைய இரவில் அறிகிறான். அவளின் முழுமையான இந்த அர்ப்பணிப்பு அவனிடம் அவளின்மேல் காதலை ஏற்படுத்துகிறது. அவள்   தன்னை அவனுக்கு உடமையாக்குவதன் மூலம் அவள் தன்னை அறியாமலேயே அவனை தனக்கு உடமையாக்கிக்கொண்டுவிட்டாள். அவன் உள்ளம் நிறைந்து அவன் கண்களில் காணும் காட்சிகளிலெல்லாம் அவளை அவன் காண வைத்துவிட்டாள். தன்னை கொடுப்பதன் மூலம் ஒருவரை தனக்கென பெறும் உயரிய காதல் இது.
தண்டபாணி துரைவேல்