Thursday, July 30, 2015

வெண்முரசில் வாழ்வின் உணர்வுகள்:


இந்திரநீலம் 59,60 இரு அத்தியாயங்களிலும் நாயகி அமிதை தான். அவளின் எதிர்பார்ப்புகளை அவளின் உளமோட்டமாகவும், உடல்மொழியாகவும் மட்டுமே நம்மிடம் கடத்திவிட்டார் ஜெ. பொதுவாக நாவலின் இது போன்ற தருணங்கள் சாகசத்துக்கானவை. அதை நிகழ்த்துபவனின் திறனையறிய அவன் முன் இருக்கும் தடைகளை விலாவாரியாக விளக்கி, அதிலிருக்கும் ஒரேயொரு குறையை அவன் அதை உபயோகப்படுத்தித் தாண்டும் போதே நமக்கும் அறியத் தருவது தான் சாகச எழுத்தின் பலம். தடைகளின் விவரிப்பிலேயே நமது மனம் ஒரு எதிர்பார்ப்பை அடைந்துவிடும். அப்படியென்றால் இங்கே நமக்கெல்லாம் எதிர்பார்ப்பு ஏதுமில்லையா? ஆம், எதிர்பார்க்கிறோம். கிருஷ்ணன் எவ்வாறு ருக்மணியைக் கொள்ளப் போகிறான் என காத்திருக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு எவ்வாறு நமக்குள் வந்தது? நிகழ்வுகளின் நாயகியான அமிதையின் எதிர்பார்ப்புகள் நமக்குள் கடத்தப்பட்டதாலேயே.


மீண்டும் மீண்டும் சொற்களின் சாத்தியத்தில் உணர்வுகளை நம்மை அனுபவிக்கச் செய்கிறார் ஜெ. கிருஷ்ணனிடம் இருந்து தூது எப்படியும் வந்துவிடும். ஆனால் எப்படி அவளை வந்து  அடையப் போகிறது என்ற  எதிர்பார்ப்பை, "துயிலெழுகையில் வந்து மெல்ல தொட்டு பகல் முழுக்க காலமென நீண்டு, அந்தியில் இருண்டு சூழ்ந்து, சித்தம் அழியும் கணத்தில் மறைந்து, இருண்ட சுஷுப்தியில் உருவெளித்தோற்றங்களாகி தன்னை நடித்து, விழித்தெழுகையில் குனிந்து முகம் நோக்கி எப்போதும் உடனிருந்தது அந்த எதிர்பார்ப்பு. " என்ற வரிகள் எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறது. வாழ்வின் அதி முக்கியமான தருணங்களின் எதிர்பார்த்தலை  நிகழ்த்திய போதெல்லாம் நாள் முழுவதும் உடனிருக்கும், தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போலிருக்கும் அந்த உணர்வை எழுத்தில் கண்டு அடைந்தது மகத்தான அனுபவம். இதே போன்ற துல்லியமான உணர்வு விவரணம் என்றால் இதற்கு முன் மழைப்பாடலில் குந்திக்கு மணி மகுடம் அளிக்கப்படுகையில் அவளின் மகிழ்ச்சியை விவரித்ததைச் சொல்லலாம். 

"மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல".


இங்கே ஜெ காட்டும் மற்றொரு முக்கியமான அவதானிப்பு, நமது அகங்காரத்தின் நிறைவுக்காகவே நமது எதிர்பார்ப்புகள் என்பது. தன்னைச் சுற்றி நடப்பவற்றிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல அமர்ந்திருக்கும் ருக்மணியிடம் சினக்கும் அமிதை இறுதியாக, "அப்படியென்றால் இவை அனைத்தும் தான் கொண்ட துடிப்பின் விளைவே. இத்துயர் தன்னுடையது மட்டுமே. ஆம் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். விழைவது நான். என் மகள் அரசியாக வேண்டுமென்று. அவள் காதல் கனியென்றாவது என் நிறைவுக்கே." என்று சமாதானம் ஆகிறாள். 


இந்திரநீலம் 60 - மகிழ்வுடன் நடந்தேறும் பிரிவின் வேதனையை, அதனால் விழையும் சோர்வை, அது தரும் குழப்பத்தை அணு அணுவாக விவரித்திருக்கிறது இந்த அத்தியாயம். இன்று அமிதை இழக்கப் போவது என்ன? அது தரும் வலி என்ன? உயிர் போகும் வேதனை என்பார்கள்... இங்கு அதை அனுபவிக்கிறாள், "அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது அந்த நாளின் காலை என்றுணர்ந்தாள். குருதியின் வாசம் எழும் இருண்ட முன் புலரி." காலை புலர்வது குறைப்பிரசவத்தில் வெளியே வந்த குழந்தை போல துடிக்கிறதாம்...  நம் அகத்திணை பாடல்களைப் பற்றிச் சொல்லும் போது அதில் வரும் உவமானங்கள் பெரும்பாலும் புறத்தைப்  பற்றியதாகவே இருக்கும் என்பார்கள். இங்கே அவளின் வேதனையை காலை புலரும் வேதனையாகச் சொல்கிறார். இருளைக் கிழிக்கும் கிழக்கு.. ஏன் அவளுக்கு இருள் தேவைப்படுகிறது? இருண்டிருக்கும் காலம் வரை ருக்மணி அவளுடன் இருப்பாள் அல்லவா!!  திரும்பத் திரும்ப உளவியல் நாடகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை நம் கண் முன் விரிந்து கொண்டே செல்கிறது. இவையெல்லாம் தான் வெண்முரசை தனித்துவம் கொண்டதாக மாற்றுகின்றன.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்