Saturday, May 14, 2016

ஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)




ஜராசந்தனின் கதை ஒருவர் சிறுவர் கதை, சாகசக் கதை என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். அதில் தத்துவங்கள், உளவியல் நுட்பங்கள், மனித கும்பல் மனோபாவத்தைப்பற்றிய அலசல்கள், தந்தைமை, தாய்மை, போன்றவற்றின் உச்சங்கள், மனித இனக்குழுக்களுக்கிடையேயான அரசியல் உருவாகி வளரும் விதம் , இந்திய சமூக  வரலாறின் ஒரு பகுதி,  மனிதர்களுக்கிடையேயான  வஞ்சங்கள், குரோதங்கள், மனிதமனம் கொள்ளும் சிறுமைகள், மனிதர் அடையும் உயர்வு வீழ்ச்சி என இவ்வளவு க்கதையில் பொருத்தப்பட்டிருப்பது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.  உண்மையில் ஜராசந்தனின் ஆதி கதை என்ற எலும்புக்கூட்டின் மேல் தசைகளை உள்ளுறுப்புகளை, தோலை பொருத்தி, மேலும் ஐம்புலன்களை உருவாக்கி செயல்படவைத்து, வண்ணமும், வடிவமும் கொடுத்து ஒர் வலிமையான  உடலை உருவாக்கி உயிர்கொடுத்து உலவவிடுகிறார் ஜெயமோகன்.  இந்தக் கதையே ஒரு சிறு நாவலென விரிகிறது.
  

இறுதியிலான கிருஷ்ணன், ஜராசந்தனுக்கிடையிலான உரையாடல், ஒரு கீதை என ஆகிறது.  இவ்வுரையாடலின் முடிவிலேயே ஜராசந்தன் வீழ்ந்துவிடுகிறான். அங்கேயே சம்ஹாரம் முடிந்துவிடுகிறது. ஜராசந்தன் இதுவரை அவனுக்கு பேராற்றலையும் உறுதியையும் அளித்துவந்த கொள்கையை, தத்துவத்தை தகர்த்து எறிகிறான் கண்ணன். உள்ளம் உறுதியை இழந்த பின்னர், மறுநாள் வெறும் உடலை வீழ்த்துகிறான் பீமன்.
   இந்த உரையாடல் தொல்வேதத்தை திரும்பகொணர்வது ஏன் தவறாகிறது என விளக்குகிறது. ஒரு மனிதன் வளர வளர அதன் ஆடைகளின் வகை வடிவம் மாறுகிறது. குழந்தையாக இருக்கும்போது மிகப்பொருத்தமாக, வசதியாக, அழகாக இருந்த ஆடை வயது ஏற ஏற பொருத்தமற்று, வசதிக்குறைவாக, மாறிவிடுகிறது. ஒருகாலத்தில் பிடித்திருந்த ஆடை, அதை அணிந்திருப்பதில் பெருமை அளித்த ஆடை  இப்போது பிடிக்காது போகிறது. எல்லா வயதுக்கும் பொருத்தமான ஆடையை எவராலும் அடைய முடியாது.
  

அதைப்போல்தான் மனிதகுலம், தன்னை பாதுகாத்துக்கொள்ள, தன்னை மேம்படுத்திக்கொள்ள, தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள, பண்பாடுகள், சடங்குகள், மரபு,  போன்றவற்றினால் ஆன ஆடையை அணிந்துகொள்கிறது. மனித குலம் வளர வளர, அந்த ஆடைகள் மாற்றப்பட்டுக்கொண்டு வருவது இயல்பு.  இப்படி  தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவை மாற வேண்டியதன் அவசியத்தை கிருஷ்ணன் உணர்த்துகிறான். எப்படியாவது உயிர் வாழவேண்டும் என்பதே முதன்மையானது என்ற காலத்திய வேதம்,  பல்கிப் பெருக வேண்டுவது ஒன்றே நோக்கம் என்ற காலத்திய நோக்கத்திற்கு போதாததாகிறதுய். பின்னர் அதற்கென ஒரு வேதம் திரண்டு வருகிறது.  ஆனால் அந்த வேதம் பின்னர் மனிதர்கள் சமூகங்களாக உருவான பின்னர் தம் தம் குழவினரின் பாதுகாப்புக்கென  தன் விழைவுகளை கட்டுப்படுத்திக்கொண்டு சுயநலத்தை தாண்டி சிந்திப்பதற்கு தடையாக அமைகிறது. அந்தக் காலத்திற்கேற்ப மற்றொரு வேதம் கண்டெடுக்கப்படுகிறது.  மனிதர்கள் ஒன்றிணைந்து தம் வேறுபாடுகளை  களைந்து ஒன்றினையும் காலத்தில் அந்த வேதமும் சரிவராமல் போய் அனைவரையும் ஒன்றிணைக்கும் புது வேதம் உருவாகிறது.  அதற்கப்புறம் அதைவிட தனிமனித சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தும்  ஒரு வேதம் உருவாகி வரலாம்.
   

ஆனால் வேதங்கள் சமூக நலனுக்காக  அவை மேலான கொள்கைகளாக, தத்துவங்களாக கூறப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அதை பாதுகாப்பதே நோக்கமாக தம் வாழ்க்கையைய அர்ப்பணிக்கும் உயர் நெறியினர்  சிலர் இருக்கின்றனர். ஆனால் அவ்வேதம்  கால ஓட்டத்தில் பொருளற்று மனித முன்னேற்றத்திற்கு தடையென ஆகும்போது ஒரு புது வேதம் மனித சமூகத்தை முன்னின்று வழி நடத்துபவர்களின் மூலம் உருவாகிறது. அப்போது ஒரு கூரிய விவாதம் அவர்களுக்கும் பழைய வேதத்தை காத்துவருபவருக்கும் இடையில் நடைபெற்று அந்த காப்பாளர்கள்   விவாதத்தில் வெல்லப்பட்டு  புதிய வேதம் நிறுவப்படுகிறது.
 

  இங்கு வேதம் என்பது மதக்கோட்பாட்டை மட்டும் குறிக்காமல், பண்பாட்டு நிலைகள், சமூக நெறிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆண் பெண் இடையேயான உறவைப்பற்றிய சமூக நெறி எப்படி காலத்திற்கேற்ப மாறிவருகிறதுஎன்பதைக் காண்கிறோம். காலத்திற்கேற்ப இனக்குழுக்களுக்கிடையேயான அதிகாரப் பரவல்கள் மாறி அமைகின்றன.  மனிதகளுக்கிடையேயான உயர்வு தாழ்வுகளை உருவாக்கும் காரணிகள் மாற்றமடைகின்றன. 


   அப்படி புதிய வேதம் நிறுவப்பட்டபின்னும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பழைய வேதத்தை நிலை நிறுத்த சிலர் விடாப்பிடியாக முயன்றுவருகிறார்கள். அவர்களின் ஒரே வாதம், சென்ற காலத்தில் சரியாக இருந்தது , இந்தக் காலத்தில் ஏன் சரியாக வராது என்பதுதான்.  மனித நாகரீகத்தின் வளர்ச்சியை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.  அதற்காக சில அமயம் அவர்கள் தீவிர நிலையை எடுக்கும்போது மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளாக அமைகிறார்கள். அவர்களை நாம் அடிப்படைவாதிகள் என்று தற்போது கூறுகிறோம். அதில் மிகத்தீவிர நிலை எடுப்பவர்கள் அனைவருக்கும் தீங்கானவர்களாக மாறிப்போவதை அவர்கள் உணர்வதில்லை.  இந்த  அடிப்படை வாதத்தால் அது சரியென நினைக்கும் சிலர்களால் உலகில் தீங்குகள் நிகழ்கின்றன. அப்படி நிகழ்த்துபவர்கள் சுயநலம் கொண்டவர்களோ கெட்டவர்க்ளோ இல்லை. அவர்கள் தாம் மிகப்பெரிய நன்மை செய்வதாக நினைத்துகொண்டுதான அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
 

  ஜராசந்தன் ஆதி மக்களின்,  விழைவை நிறைவேற்றிக்கொள்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்ட தொல்வேதத்தை மீட்டுக் கொணர முற்படுகிறான்.ஒரு காலத்தில் மக்கள் பெருக்கம் நிகழவும், ஊக்கம் பெற்று சமூகத்தை கட்டி எழுப்பவும் தேவைப்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால் இது இப்போது மனிதர்களுக்கிடயே கடும் போட்டிகளை உருவாக்கி சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் வலியவர்கள் மெலியவர்களை அடிமைப்படுத்துவதில், கொன்றொழிப்பதில்  முடிவதாக ஆகிவிடுகிறது. ஜராசந்தனே அதற்கு ஒரு உதாரணம் என ஆகிறான்.   இது மனித குலத்தை மீண்டும் பின்னோக்கி செலுத்துவதாக அமையும். ஜராசந்தன் என்றவரின் கொடுஞ்செயல்கள் அவன் ஆயுட்காலத்தோடு முடிந்துவிடும். ஆனால் மீண்டெழுப்பப்படும் தொல்வேதக் கருத்துக்களை அழிப்பது மிகச் சிரமமான செயலென ஆகி  உலகத்தில் தீங்கான விளைவுகளை நெடுங்காலத்திற்கு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். ஆகவே தொல்வேதத்தை மீண்டும் கொணர்வதை தடுப்பது மிக முக்கியமான தேவையாக கிருஷ்ணன் கருதுகிறான். அதற்காகவே ஜராசந்தனின் வதம் நிகழ்த்தப்படுகிறது. 

தண்டபாணி துரைவேல்