Monday, May 2, 2016

கடக்கமுடியாதவை

விசுவாமித்திரர் தாண்டிய சிற்றோடைகளை, பூசகர் தாண்டமுடியாத சிற்றோடையை பீஷ்மர் தயங்கி நின்று பின்பு எளிதாக தாண்டிச்செல்கின்றார். அதே சிற்றோடையை குந்தி எந்த தயக்கமும் இன்றி, தாண்டுகிறேன் என்ற எண்ணமும் இன்றி தாண்டிச்சென்றுவிடுகிறாள். அதைத்தாண்டிப்பின்பு கன்னியென பூச்சூடி இளமைக்கொள்கிறாள். காற்றை காற்றால், நீரை நீரால், தீயை தீயால், வானை வானால் தடுத்துவிடுமுடியாது என்பதுபோல கன்னியை கன்னியால்,  மாயை மாயையால் தடுத்துவிடமுடியாது போலும். 

பீஷ்மர் எளிதாக தாண்டிவிட்டார் என்று ஏங்கும் பூசகர் அறியமாட்டார். கன்யாவனத்தின் எழுப்பத்தேழாவது சௌபர்னிகா சுனையின் நீலபாசியில் வழுக்கி விழவாய்ப்பு உள்ளது என்பதை. காரணம் கன்யாவனத்தில் பெண்கள் எல்லாம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற வரிசையில் ஏழு ஏழு என்று ஆனவர்கள். ஏழை ஏழுக்கு பக்கத்தில் வைத்தால் எழுபத்தி ஏழாகிவிடுகிறது. எழுப்பதி ஏழாவது சுனை சௌபர்னிகா என்று இருந்தால் அடுத்து எழுநூற்று எழுபத்தி எழாக இருக்கும். எழே எழுப்பதி என்று ஆகுவதால் எங்காவது ஒரு இடத்தில் வழுக்கி விழுந்தே ஆகவேண்டும். “தந்தையே” என்றசொல்மூலம் பீஷ்மர் துள்ளி கரையேறுவது அற்புதம். யாயாதி சந்தனு கரையேறமுடியத பெரும் வனம் அது. அமுதமே நஞ்சாய், நஞ்சே அமுதமாய் இலைசொட்டும் காடு அது.

கன்யாவனத்தில் நுழைந்த குந்தி அன்னையா? கன்னியா? அன்னையாக வந்து கன்னியாக நிற்பவள். கன்னியாக நின்று அன்னையாக நடிப்பவள்.

நீலப்பாசிகள் நிறைந்த சௌபர்னிகா சுனையில் துள்ளி ஏறிவிடும் பீ்ஷ்மன் இங்கு ஏறுவாரா? குந்தி பீஷ்மனுக்கு இங்கு ஒரு தேர்வு வைக்கிறாள்.
//நான் இங்கு வருவதை அஞ்சினேன். பிதாமகர் பெண்நோக்கா நோன்புகொண்டவர் இளையோனே, அவ்வச்சத்தாலேயே அவர் மறுத்துவிடக்கூடும் என்றேன்என்றாள்//

இந்த இடத்தில் பீஷ்மர் மௌனம் சாதித்து இந்திரபிரதஸ்தம் வரவில்லை என்றால் குந்தி வந்தகாரியத்தில் தோற்கிறாள் ஆனால் அவள் பெண் என்பதில் ஏழு பருவத்தில் ஏதோ ஒரு பருவத்தில் ஜெயிக்கிறாள். பீஷ்மர் தனது பெண்மை நோக்கா நோன்பில் வெல்கிறார் ஆனால் தனது ஆண்மையில் தோற்கிறார். இந்த இடத்தில் பீஷ்மர் தனது தோளில் ஒரு தொடுகை நிகழ்ந்ததுபோல் அசைகிறார். அற்புதம் ஜெ.

பீஷ்மர் குந்திக்கு வாக்கு அளிப்பதன் மூலம் அவளின் காரயசித்தியை உருவாக்கி அவள் பெண்மையை நசுக்கி எறிந்து போகிறார்.

//பீஷ்மர் இலைகளுக்குள் அமிழ்ந்து மறைவதை கூப்பிய கைகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்// அமிழ்தே நஞ்சாய், நஞ்சே அமுதாய் சொட்டு இலைகளில் அமிழ்ந்து மறைந்துபோதல் அற்புதம்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

மிகநீளமாக வளரும் மரத்தை வளைப்பதும் ஒடிப்பதும் மிக எளிதாக இருக்கும்போலும். பீஷ்மரைப்பார்க்க இப்படி தோன்றுகின்றது. 

ராமராஜன் மாணிக்கவேல்.