ஆடிச்சுயத்தின் மரணம் (பன்னிருபடைக்களம் 55):
சிசுபாலனின்
காரணமேயற்ற கிருஷ்ணன் மீதான வெறுப்புக்கு அச்சாரம் இட்டவள் என்ற வகையில் அவன்
தாயான சுருதகீர்த்தியின் ஆளுமை மிக முக்கியமானது. வெண்முரசு ஒவ்வொரு
கதாபாத்திரத்திற்கும் அவற்றின் உப்பக்கத்தைக் காண்பிப்பதில் என்றுமே வெற்றி பெற்று
வந்துள்ளது. அவ்வகையில் இந்த விருச்சிக மாதத்தின் நாயகன் சிசுபாலனின் மறுபக்கமும்
மிகத் தெளிவாக, அட்டகாசமாக வந்துள்ளது. அவன் அவனுக்காக எதையாவது செய்கிறானா
என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவன் எண்ணங்கள், செயல்கள், ஆசைகள் ஏன் காமம் கூட
அவன் பெற்றோர்களின் நீட்சியாகவே உள்ளன.
அவன் நிலையுணர்வான
ஆணவம் அவன் அன்னையிடம் இருந்து அவனுக்கு வந்தது. உண்மையில் சுருதகீர்த்தியின்
கிருஷ்ணன் மீதான வெறுப்பின் ஊற்றுக்கண் எது? அவள் யாராக ஆக வேண்டும் என்று
ஆசைப்பட்டாளோ அவள் மீதான போட்டியுணர்வே அது. அவ்வுணர்வு தந்த போலி ஆணவமே அது. ஆம்.
அவளின் கம்சன் மீதான காதல் உண்மையில் அவள் தன் ஆளுமை மீது கொண்ட காமத்தின் புற
வடிவமே. அவள் கம்சனைக் காதலிக்கத் துவங்கும் முன் நடக்கும் நிகழ்வுகள் அதையே
காட்டுகின்றன. அவளை மையமாக வைத்து நடத்தப்படும் அரசியல் நாற்களத்தில் தன் எதிரில்
இருப்பவளைக் கண்டு கொள்கிறாள். ஒரு வகையில் அவளின் எல்லா காய்களையும் வெட்ட
வேண்டும் என்ற வகையிலேயே தன் கருக்களையும், காய்களையும் நகர்த்துகிறாள், அவளுக்குத்
தெரிந்த வகையில். குந்தி வெல்லக்கூடாது என்பதற்காகவே கம்சனை வேட்கிறாள் என்று
கூடச் சொல்லலாம். ஆனால் குந்தி இவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை அவள்
கம்சனைக் கடந்து செல்கையிலேயே புரிந்து கொள்கிறாள். அக்கணத்திலேயே அவளும் கம்சனை
நிராகரிக்கிறாள். குந்தியைப் போன்றே ஒரு ஷத்ரிய அரசுக்குச் செல்ல வேண்டும் என்ற
வகையிலேயே அவள் தமகோஷருக்கு மாலையிடுகிறாள். அத்தருணத்தில் அவள் இழந்த யௌவன வாழ்வை
அவளுக்கு நினைவூட்டுபவனாக கம்சன் இருக்கிறான். அவள் சென்று சேர வேண்டிய எல்லையாக
குந்தி அவளுடன் வருகிறாள்.
சூக்திமதியில்
சபரியின் மத்தகத்தில் இருக்கையில் அவளுக்குத் தெரிபவர்கள் இவர்கள் இருவருமே.
அவளின் உள்ளத்தில் தான் இல்லை என்ற நினைப்பே தமகோஷரை வெறித் தனமான காமத்தில் ஆடச்
செய்கிறது. ஒவ்வொரு முறையும் அவள் முன் தோற்றுச் செல்கிறார். அவள் மைந்தன் பால்
அவளுக்கு ஏற்படும் பாசம் கூட இளைய யாதவனால் அவன் ஒருங்கிணைக்கப்படும் போது தான்.
அது வரை அவனை தன் உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏதோ ஒன்றாக ஒரு அருவருப்புடன்
தான் காண்கிறாள். அவள் சிசுபாலனைக் கருவுற்றதை அறிந்த தினம் கம்சன் இறந்த தினம்.
ஒரு வகையில் அவள் அந்த கம்சனை உள்ளூற வெறுத்திருக்கக் கூடும். அவனைப் பற்றிய
எண்ணம் அல்லவா அவள் இளமையை துயர் உற்றதாக்கியது. பேரன்னையாகப் பரிணமித்திருக்க
வேண்டியவளை ஒரு தோல்வியுற்ற அரசியாகச் சுருக்கி விட்டது. அவன் இறப்பு அவளுக்கு ஒரு
மறுவாழ்வைத் தந்திருக்கக் கூடும். ஆனால் அதே தினத்தில் அவள் கருவுற்றது அவளை
நிலையழியச் செய்கிறது. எந்த வெறுப்பு வெளியேற வேண்டும் என்று நினைத்தாளோ அதே
வெறுப்பு அவளுள் சூல் கொண்டு விட்டது. மீண்டும் அவளை ஒரு அன்னையாக உணரச் செய்தவன்
சிசுபாலன் என்னும் தெய்வமே. விருச்சிகனான மகனை மனிதனாக்கிய இளைய யாதவன் இரண்டாமவன்.
ஒரு வகையில் அவளின் வெறுப்பை, அவள் விரும்பிய வாழ்வின் மறுதலிப்பை அவளுக்கு
உறுதிப் படுத்தியவர்கள் இவர்கள் இருவருமே. தெய்வத்திடம் கொள்ளச் சாத்தியமற்ற
வெறுப்பு கண் முன் உலவும் இளைய யாதவனிடம் திரும்புகிறது. அதையே தன் மகனிடமும்
ஊட்டி விடுகிறாள் அவள். அதன் வழியாக அத்தெய்வத்தையும் பழி வாங்குகிறாள்.
ஒரு வகையில் சபரியை இவளின்
ஆடிச்சுயம் (alter ego) என்று கூடச் சொல்லலாம். சபரி பேரன்னை, குல மூத்தாள், பேரரசி. இவள் ஆக
விரும்பிய ஒருத்தி. காலமெல்லாம் அவளாக விரும்பிய இவள் கடைசியில் அடைந்ததென்னவோ
அவள் தோல் நிறத்தை மட்டும் தான். அந்நிறத்துக்குரிய தாமசக் குணத்தை மட்டும் தான்.
அவளில் எஞ்சிய அந்த தாய்மையும் அவள் சிசுபாலனை பலி பீடத்துக்கு அனுப்புகையில்
முற்றிலுமாக மரித்துப் போவதையே சபரியின் மரணம் உணர்த்துகிறது. இனி இவள் ஆடி எதைக்
காட்டும்?!!
மகாராஜன் அருணாச்சலம்