Saturday, May 7, 2016

அசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:



பீமன் தொடுகையில் சலனமற்றிருக்கும் யானத்து நீர், ஜராசந்தன் தொடுகையில் ஒளி கொள்கிறது. அவன் அதை வலக்கையால் தொடவில்லை, இடக்கையால் தொடுகிறான். அவன் கனிந்த பாகம். தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகம். அதை அளிக்கப்போகும் ஒருவன் மீது பெருங்காதலோடு இருப்பதில் என்ன சந்தேகம்!! மிக இயல்பாக அவனை மீறிய உளவிரைவோடு அவன் கூறுகிறான் – ‘வெற்றி கொள்க’. மிக உணர்ச்சிகரமான பகுதி இது.

ஏன் ஜராசந்தன் தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும்? இருமைகளின் எண்ணச் சுழல்களில் சிக்கியவர்களுக்குத் தெரியும் அது தரும் வாதை என்ன என்பது. விடுபடவே இயலாத ஒன்று அது. ஜராசந்தனின் ஒரு பக்கம் நுண்மையானது, அற உணர்வு கொண்டது, நால்வேதம் அறிந்தது, நெறி நிற்க விழைவது. மறுபக்கம் காட்டின் நியதி கொண்டது, தொல் மரபிற்கு மாண்பு சேர்க்க விழைவது, அது பின்பற்றுவது தொல் நெறிகளையே, அது விரும்புவதும் தொல்வேதங்களையே. அந்நெறிகள் மரபின் நெறிகளுக்கு கொடூரம் எனத் தெரிகிறது. ஆற்றுபனுக்கும் அது தெரியும் என்றால் அவன் கொள்ளும் வாதை எப்பேற்பட்டதாய் இருக்கும்? அந்த வாதையைக் கடக்கவே கழுவேற்றும் இடத்திலேயே அதை ரசிக்கிறான் ஜராசந்தன். ஆயினும் அச்செயல்கள் அவனுள் ஒரு வெறுமையை விட்டுச் செல்கின்றன. உள்ளூர அவன் கொடூரமானவன் என எண்ணத் தலைப்படுகிறான். அவ்வெண்ணத்தை காட்டில் இருக்கும் சிங்கம் செய்யும் கொடுமைகளை விட தான் ஒன்றும் செய்யவில்லை என்று கடக்க முயல்கிறான். அத்தனை கொடுமைகளுக்கும் ஈடு செய்யும் வகையில் அவன் தன் மைந்தனிடம் கனிவோடு இருக்கிறான். உண்மையில் ஒரு அரசன் எரிச்சல் அடைந்து கோபப்பட வேண்டிய இடங்களில் கூட (சகதேவனின் சிறுபிள்ளைத் தனமான பேச்சுகள் மற்றும் தந்தையை குற்றம் சாட்டும் கூற்றுகள்) அவ்வெரிச்சலை எளிதாகக் கடந்து வருகிறான். மற்றொரு வகையிலும் அவன் தன் கொடூரங்களை ஈடு செய்கிறான். அது, பெண்கள் பால் அவன் காட்டும் பரிவு. இத்தனை அரசுகளை, ஷத்ரியர்களைக் கொல்லும் அவன் அவர்கள் பெண்டிரை ஒன்றுமே செய்வதில்லை. மிக மிக மரியாதையாகவே நடத்துகிறான்.

உண்மையில் அவனுக்கு யாதவர்களோடு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. மருமகனான கம்சன் இறந்த போது கூட அவன் கோபம் கொண்டு படையெடுக்கவில்லை. ஆனால் தன் மகள்கள், இத்தனைக்கும் அவர்களை அவன் பெற்றவர்கள் அல்ல, அவனுக்கு மகள் முறை வருபவர்கள் மட்டுமே, அவமானப்படுத்தப் பட்ட போது படையெடுக்கச் சொல்கிறான். அதிலும் அவன் நேரடியாக மகதப் படைகளை அனுப்பவில்லை. அவன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் அசுரப் படைகளையே அனுப்புகிறான். ஏனென்றால் அவனுக்கு உண்மையிலேயே யாதவர்கள் பால் வெறுப்பு இல்லை. ஒரு வகையில் மகதத்தின் தொல் பன்னிரு குடிகளும் ஆபுரந்தவர்கள் தானே. அவர்களை ஷத்ரியர் பாடாய்ப்படுத்தியதால் தான் அவன் ஷத்ரியர்களை எந்த தயக்கமும் இன்றி கொல்கிறான். தன் வேர் மறந்து ஷத்ரியர்களாக நடந்து கொண்டதால் தான் அவன் உடன்பிறந்தவர்களையும் கொல்கிறான். அவன் தங்கள் தொல்குடியை நினைவூட்டியதாலும், அவனே ஒரு தொல்குடியினனாக இருப்பதாலுமே மகத மக்கள் அவனுடன் நிற்கின்றனர். ஆம், தட்சிணனுக்கும்(அவன் வலப்பக்கம்) ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

ஆனால் வாமனன்(அவன் இடப்பக்கம்) மனது தற்கால நெறிகளில் உள்ளது. காட்டின் நெறிகள் நாட்டில் செல்லாது என்பதை உணர்கிறது. எப்படியாவது அவன் காட்டு நெறிகளுக்கு ஈடு செய்ய விழைகிறான். தன்னை எதிர்த்த ஷத்ரியர்களுக்கு இரவில் உண்டாட்டு நடத்தி, அபிமன்யூவை மகன் என ஏற்றுக் கொண்டு, சூரசேனர் காலில் விழுவது வரை அனைத்தையும் அவன் மறுநாள் நடக்கப்போகும் நிகழ்வுக்கு ஈடு செய்யவே நிகழ்த்துகிறான். நன்றாகப் பார்த்தால் அந்த உண்டாட்டில் அவன் நெகிழ்ந்து கண்ணீர் விடுகையில் அவன் இடக்கண் மட்டுமே நீர் வடித்துக் கொண்டிருக்கும். வலப்பக்கம் ஒருவித இளக்காரமாகவே நின்றிருக்கும்.

ஷத்ரியர்களைத் தலைக் கொய்து கோட்டை முகப்பில் வைக்கச் சொல்லும் அவன் உடல்மொழி சற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. அவன் மனம் சினத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அவனில் உள்ள காட்டாளன் சினத்தில் இருக்கிறான். அதை அவன் உணரவும் செய்கிறான். அவன் இடப்பாகம் அதை ஏற்கவில்லை. அபிமன்யூவைக் கொல்ல இறுக்கி அணைக்கும் போது கூட அவனது இடக்கால் தடுமாறத் தான் செய்கிறது. மேலும் வெண்முரசு அவன் கண்கள் வாயிலாக, “கடும் வலி கொண்டவனின் கண்கள் போல” என்று அவன் தடுமாறலைக் குறிப்பிடுகிறது.

பாவம் தான் இல்லையா, இரு நெறிகளுக்கு இடையே அல்லாடுகிறான். ஒவ்வொரு புறமும் எடை ஏறிக் கொண்டே இருக்கும் துலாத் தட்டுகள் போல அவன் இருமைகளுக்கிடையே அல்லாடுகிறான். அவன் சித்தமெனும் துலா முள் அசைவின்மைக்கு ஏங்குகிறது. இருபுறமும் நிலைநிற்க வேண்டும் என விரும்புகிறது. மரணம் தவிர வேறு எது இந்த துலாவை சமன் செய்ய இயலும்!! அதை அவன் இடப்புறம் நன்றாக உணர்ந்து கொள்கிறது. எனவே மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறது. அதை வழங்க வந்திருக்கும் தேவனை பெருங்காதலோடு அணைக்கத் துடிக்கிறது.
அவன் ஏன் அத்தனை மகிழ்வோடு மரணத்தை ஏற்கிறான்? ஏனென்றால் அவன் மரணம் எதன் பொருட்டும், அவன் எச்செயல்களின் பொருட்டும் நிகழப் போவதில்லை. அவன் மரணம் அவனுக்காகவே, அவன் பொருட்டே, அவன் நிறைவுக்காகவே, அவன் இருக்கிறான் என்பதற்காகவே நிகழப்போகிறது. அவனில் இருக்கும் துலாமுள் நிலைக்கவே நிகழப்போகிறது. அவன் கிருஷ்ணனிடம் சகதேவனை அடைக்கலப்படுத்துவது எல்லா விதங்களிலும் வாலி அங்கதனை ராமன் கையில் ஒப்படைப்பதற்குச் சமமானதே. அபாரமான காவியத் தருணங்கள் இவை.

பீமன் அந்த தொல்முரசுகளை கிழிப்பது ஒரு முக்கியமான அறைகூவல். ஜராசந்தன் மகதத்தின் அரியணைக்கு அதன் தொல்பண்பாட்டைக் கொணர்ந்து வந்திருக்கிறான். அதை அழிக்கிறேன் என்றே பீமன் அறைகூவுகிறான். அதாவது ஜராசந்தனில் இருக்கும் காட்டாளனுக்கே அவன் அறைகூவல் விடுக்கிறான். மிக நுட்பமான இடம் இது. ஏனென்றால் நேர்போரில் ஜராசந்தன் வெல்ல இயலாதவன். மற்போர் நெறிகள் செல்லுபடியாகாது. காட்டின் நெறியற்ற இறப்பு ஒன்றே இறுதி என்றாகும் போரே ஜராசந்தனை வெல்லச் சாத்தியமான ஒரே வழி. அவனில் இருக்கும் காட்டாளனையும் நிறைவு செய்யவும் அவ்வகைப் போர் ஒன்றே வழி.

ஜராசந்தனின் இந்த தடுமாற்றங்களை வாசகரிடம் கடத்த நாவலின் வடிவத்தை பயன்படுத்தியிருக்கிறார் ஜெ. இந்த ஐப்பசி அத்தியாயத்தின் அமைப்பே துலாத் தட்டுகள் போல ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. பல வகைகளிலும் ஜராசந்தனை மாற்றுப் பார்வையில் பார்க்கச் செய்து விட்டார் 


அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்