Wednesday, May 18, 2016

முதற்கனல் அனுபவம்

 
 
மனம் நெகிழ்வுடன் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
மகாபாரதத்தை தொட்டு மீள்வது என்பது அசாதாரண காரியம்!

பாராட்டு என்று எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு இணையாக " வெண்முரசு" பிரயத்தனம் போல் ஆகிவிடும் என்பதால் ஒவ்வொரு பாகம்
முடிந்த பிறகும் என்னுடைய அனுபவத்தை எழுதுவதே இலக்கிய உலகின் காண்டீபம் ஏந்திய உங்களுக்கு இந்த சாதாரணனின் சரியான அங்கீகாரமாக இருக்குமென நம்புகிறேன்!

என்னுடைய வாசிப்பு அனுபவங்களையே உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களாக சமர்ப்பித்துத்துக் கொள்கிறேன்

எனக்கும் என் தாயாரே மஹாபாரதத்தை என் சிந்தையில் முதன்முதலாக ஏற்றியவள். அவளே பிறகு நான் ஏழாவது படிக்கும்பொழுது சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய "வியாசர் விருந்து" புத்தகத்தை பரிசளித்து சரியாக “கீதையை விளக்கும் பகுதிகள்” இருக்கும் பக்கங்களை மட்டும் படிக்க வேண்டியதில்லை என்று சொல்லி அறிவுருத்தியிருந்தாள். பிறகு ஏராளமானவர்களின் முயற்சிகளை இந்த 35வருடங்களில் கடக்க நேர்ந்தது!

கடந்த வருடத்தின் கடைசியில் கிக்காணி பள்ளியில் நீங்கள் நிகழ்த்திய கீதை பேருரையை முழுவதுமான அந்த நான்கு நாட்கள் கேட்க முடிந்தது என் வாழ்க்கையின் "கீதா முஹூர்த்தம்" என்று தான் நினைக்கிறேன்.மஹாபரதம், கீதை ஆகியவற்றின் வித்தியாசத்தை முழுவதுமாக உணர்ந்து, கனிந்து இருந்த சமயத்தில் தான் " வெண்முரசு" என் கையில் வந்து சேர்ந்தது.

எப்போதுமே அடுத்தவர் கற்பனையில் குறுக்கிடவோ, விமரிசனம் செய்யவோ எந்த பாத்தியதையும் கிடையாது என்பதை உணர்ந்தே இருந்திருக்கிறேன்!

கடந்த 30 நாட்களாக உங்கள் " வெண்முரசு" என்னும் மாயக் கம்பளத்தில் ஏறி உங்கள் வழிகாட்டுதலுடன் வேசரதேசத்தில் இறங்கி, இப்போது மழைப்பாடலில் பாண்டு தன் துணைவியருடன் வனத்திற்கு நீங்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்!

" வெண்முரசு"

சூரிய , சந்திர தோற்றமும்,ராஜஸ, சத்வ குணங்களின் அர்த்தமும் இப்போதுதான் புரியலாயிற்று! தட்சகனின் கதை தெரியாமலேயே இவ்வளவு நாள் எதற்கு தட்சகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?என்று எனக்குள்ளேயே எழுப்பிய கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

திருவிளையாடல் திரைப்படம் பார்க்கும்போது சிவபெருமானின் கோபமும்,தாட்சாயணியின் வாக்குவாதமும் "அவிஸ்"என்று ஒரு சொல்லை வைத்து கொண்டு போடும் சண்டைகளும், எங்கு வந்தாய்? எதற்கு வந்தாய்?என்று ஆக்ரோஷமாய் தாட்சாயணியை திருப்ப, தாட்சாயணி தன் தந்தை நடத்திக்கொண்டிருக்கும் வேள்வியின் குண்டத்திலேயே விழுந்து சாம்பலாகும் நிகழ்வுகளும், ஸதி என்ற பதத்தின் பொருண்மையும் அர்த்தமாயிற்று!தாட்சாயணியின் அவதாரத்தையும், அம்பையின் வீழ்ச்சியிலும் உள்ள பொருள் புரிந்தது!

சாதரணமாக நான் இதுவரை படித்த மஹாபாரத உரைகள் பாராசர முனிவர் செம்படவப் பெண் ஒருத்தியுடன் "ஒரு உன்னதமானவர் தோன்றுவதற்கான" வேளையை உணர்ந்து, கூடியதும், பிறகு அவள் கன்னித்தன்மையை அடைந்தாள் எனவோ, அல்லது சந்தனு மகாராஜா கங்கையின் மேல் மையல் கொண்டு, பீஷ்மர் அவதரிக்கும் இடங்களிலிருந்தே ஆரம்பித்து இருந்திருக்கின்றன.

சித்திராங்கதன் அந்த குளத்தில் பார்க்கும் கந்தர்வனின் ஆடிப் பாவையுடன் மறைந்து போவதை நான் மறுபடியும் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.எனக்கு சில குழப்பங்கள் உள்ளன.

சாதரணமாக பீஷ்மர் உணர்ச்சியை காட்டதவர் என்ற பிம்பமே என்னுள் எழுப்பப் பட்டிருந்தது. ஆனால் பீஷ்மர் தன் சகோதரர் வியாஸர்,தாயார் சத்யவதி ஆகியோருடன் நிகழ்த்தும் உணர்ச்சிமிகு உரையாடல்கள்,அம்பை தன்னை எற்றுக் கொள்ள பீஷ்மரை வேண்டிக் கொள்ளும் இடங்களும். பீஷ்மர் ஒரு சிறு துளி காதலுடன் அம்பையை நிராகரிக்கும் இடங்களும் என்னை மிக உணர்ச்சிவசப்பட செய்தன.கற்பனை உரையாடல்கள் எவ்வளவு தூரம் எடுத்துச் செல்லும் என்று உணர்ந்திருந்தாலும், என்னை பீஷ்மராகவும்,சத்யவதியாகவும், அம்பையாகவும் நான் உணர்ந்த தருணங்கள் அது என்றால் மிகையாகாது!உங்களுடைய மனமும், அந்த அந்த கதாபாத்திரங்கள், வரையறைக்குட்பட்டு என்ன உரையாடல்கள் அவர்கள் நிகழ்த்தியிருக்க முடியுமென முடிவு செய்ய எவ்வளவு போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது!

விசித்திரவீர்யனின் நோயும், அதற்கான சிகிச்சைக்கு ஆதுரசலையில் வைத்தியர்கள் காட்டும் முனைப்பு, பீதர்களின் மருத்துவமுறை……(மழைப்பாடலில்---பாண்டுவிற்கு-அக்குபக்ஞ்சர்)விசித்திரவீர்யனின் ஆழ் மனம், தன்னுடைய நிலையை பற்றிய தீர்க்கம், அம்பிகையுடன் நடத்தும் காதல் உரையாடல்கள், அம்பிகையின் புரிந்துணரல் ஆகியவை மிக விஸ்தாரமாக புரிந்து கொள்ள முடிந்தது.

அம்பையின் சோக முடிவின் போது அவள் முருகன் சிலையை கண்டறிவது, “மழைப் பாடல்”-லில் குந்தி, பாண்டுவுடன் உரையாடும்போது ஆறுமுகனைக் குறிப்பிடுவதும், என்னுடைய "திருச்செந்தூர் வள்ளிகுகை"நம்பிக்கைகளை உருவேற்றுகிறது!

சரியான போர்பயிற்சி இல்லாத விசித்திரவீர்யன் பீஷ்மருடன் கொலை வாளை ஏந்தி பொருதுவது, சால்வன் பீஷ்மரிடம் இருந்து காசி இளவரசிகளை வெல்வதற்காக, அவருடன் நடத்தும் விற் போர், அம்பை வெறிகொண்டு ஹஸ்தினாபுரம் நீங்கும் பகுதிகள் திரைப் படங்களின் வேகத்தையும், ஆகர்ஷனத்தையும் தோற்கடிக்கும்.... எழுத்தின் வன்மை இப்போதுதான் புலனாகிறது!

பால்ஹிகன் , வேதாபி கூட உங்கள் "காடு"புதினத்தில் வரும் ராபி, ஆபேல் பாத்திரப் படைப்புகளை நினைவுபடுத்தியது.

தன் மகள்களுக்காக துயருறும் காசி அரசி புராவதி, கார்த்தியாயினி அவதார நிகழ்வு, உடை வாளை சிம்மாசனத்தில் வைத்து காசி இளவரசிகள் இருவரும் மணம் புரிவது,ஸ்தானகர்,விசித்திரவீர்யன் மற்றும் அகஸ்தியர் ஆகியோரின் உரையாடல்கள் நம் தொன்மத்தை உரைத்தன!

அரிஷ்டம், அஹிபினம் ஆகியவற்றின் உபயோகங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின!

பார்கவர்&சிகண்டி, சிகண்டி&அக்னிவேசர் ஆகியோரின் நடவடிக்கைகள் அந்த புராதன தனுர் வித்தையின் அடிநாதத்தை உணர்த்தின!

சூதர்களின் பாடல்களை கொண்டு நீங்கள் மூலக் கருவினை இடையிடயே கொணருவது அருமையான யுக்தி.தொய்வடையாமல் ஒரு காட்சி மாறுதலையோ அல்லது கதாபாத்திரங்கள் மாறாமல் கதையின் போக்கை மாற்றும் கலை மிக அருமை!

நான் அடுத்து "மழைப்பாடல்"பற்றி எழுதுவதற்கு முன்--முதற்கனல்- -லில் வரும் பாத்திரங்களின் உளவியலை பற்றி உங்களோடு உரையாட ஆசை!

எனக்கு முதற்கனல் ஒரு முதற்கனவு போல உள்ளது!
 
சுந்தர் கார்த்திகேயன்