Sunday, May 1, 2016

அன்னை யார்




அன்னை அபிராமசுந்தரி யார்? அவள் எங்கிருக்கிறாள்? அவளின் வல்லமை என்ன? தன் வல்லமையால் தான் என்ன செய்தால்?  என்று கேள்விக்கேட்டு பதில் சொல்லவரும்  

அபிராமிப்பட்டர். அவள் சிவபெருமானின் மனையாள். ஆனால் அவருக்கும் அவள்தான்அன்னை என்று கூறி மன்மதனை எரித்த எம்பெருமான் பாதி உடலையே இடமாகக்கொண்டு இருப்பவள், மற்றும் அகிலத்தையே ஆடலில் ஆட்டவைக்கும் அப்பனை காமனை எரித்த கபாலியை ஆட்டிவைத்து இரண்டு குழந்தையையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தவள், பின்னும் அவள் கன்னி என்கிறார். அவள் ஒருவனுக்கு சொல்லாகி நாவில் இருக்கிறாள். ஒருவனுக்கு திருவாகி மார்பில் இருக்கிறாள். ஒருவனுக்கு சக்தியாகி உடலில் இருக்கிறாள். 

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலாம்
அவளே அவர்தமக்கு அன்னையுமாயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசயவானன சுந்தரவல்லி துணைரதி
பதிசயமானது அபசமாக முன்பார்த்தவர்தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே

ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன்செய்த பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முன்நான்கு இருமூன்று எனத்தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே

முடிவிலி பெயர்கொண்ட அன்னைக்கு தையல்நாயகி என்ற ஒரு பெயரும் இருப்பது அழகு. அர்த்தமுற்ற அற்புதம். அன்னையே பெண்ணெல்லாம். பெண்ணெல்லாம் அன்னையே.

அன்னைக்கும் அன்னையாய், அன்னையாய் மனைவியாய் குழந்தையாய் இருப்பவர்கள் எல்லாம் ஒருத்திதான். முடிவிலி முகங்களில் தேடித்தேடி சலிப்பது ஒருத்தியைத்தான்.

இருளாய், ஒளியாய், புல்லாய், காடாய், தருவாய், இலையாய், பூவாய், இதழாய், தூவியாய், காயாய் கனியாய், தண்தென்றலாய், தணல் காற்றாய், முகிலாய்,  மழையாய், வெள்ளமாய், நதியாய், ஓடையாய், மண்ணாய்,மலையாய், குழியாய், கோடாய், விண்ணாய். முகிலாய், நிலவாய், சோறாய் சுவையாய் எல்லாம் ஆகி இருப்பவள் பெண்தான்.

பூவில் அவள் முகம் தெரிகிறது, இதழில் அவள் இதழ்தெரிகிறது, தென்றலில் அவள் தழுவள் தெரிகிறது, தேனில் அவள் சுவை தெரிகிறது. தணலில்அவள் பிரிவு தெரிகிறது. மழையில் அவள் தண்மை தெரிகிறது. ஒலியில் அவள் சொல்தெரிகிறது. வண்டுவரும்போது அவள் குரல்ஒலிக்கேட்கிறது. வண்டாய், பறவாய், விலங்காய், எல்லாம் அவள். அவளை விட்டு எங்கு தவத்தில் அமர்வது. எந்தப்பூக்காடு பூத்தாலும் அவள் வாசமும் அள்ளவா இணைந்துவருகிறது.

//நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம்//

முடிவிலி என விரிந்துக்கிடப்பவளை சிற்றோடை என ஓடிக்கொண்டே இருக்கிறாள். விசுவாமித்திரர் போன்ற பெரும்முனிகள் ஒவ்வொரு முகமாகக்கண்டு மூழ்கி மூழ்கி தனது விழைவு ஒன்றின்மூலமாகவே நீந்திக்கரையேறி விடுகிறார்கள். பீஷ்மர் போன்றோர் இறங்குவதா மூழ்குவதா என்று தயங்கி நின்ற தாண்டிச்சென்றுவிடுகிறார்கள். எளிய மானிடன் ஐம்பது வருடமாய் பூசைசெய்கிறார்கள் அந்த சிற்றோடையை தாண்ட முடியவில்லை.

வேறு என்னதான் வழி தையலாகி முடிவிலி முகம்காட்டும் அன்னை தையல்நாயகியிடமே வேண்டவேண்டியதுதான்.

சுந்தரி எந்தைத்துணைவி என்பாசத்தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மனிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

அன்னையை தையல்நாயகியை இடப்பாகம் கொண்ட இறைவன் பெயர் வைத்தியநாதன். தையல்நாயகியை கட்டியவனுக்கு வைத்தியநாதன் என்று பெயர் வைத்த அந்த ஆதி முனிவனை வணங்குகிறேன். நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க.

ராமராஜன் மாணிக்கவேல்.