Thursday, May 5, 2016

ஜராசந்தன் என்னும் ஆதி விலங்கு!



அன்பின் ஜெ..


சமீபத்தில் ஒரு பழைய புத்தகத்தின் அறிமுக உரை படிக்க நேர்ந்தது. வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட இருவரின் குறிப்புகள். அதில் அவர்கள் வனம் குறித்த வீரப்பனின் அறிவையும், அவனது நுண்ணுணர்வையும் விதந்து சொல்லியிருந்தார்கள்..


ஏழு முரசுகள் கிழிக்கப் பட்டதை, ஒரு மந்திரி, விதி மீறலாகத் தான் பார்ப்பார். ஜராசந்தனின் கோபத்தையும் எதிர்பார்ப்பார்.


ஆனால், உள்ளுணர்வால் வழிநடத்தப்படும் ஜராசந்தனுக்கு அது புரியும். அதைக் கிழிக்கும் துணிவுள்ளவர்கள் நாட்டில் எத்தனை பேர் என்பதை எண்ணியே அவன் சாந்தமடைகிறான்.


இனி செய்ய வேண்டியது ஒன்றே. பிள்ளை மணம் மாறா தன்  பிள்ளையிடம் அரசை ஒப்படைத்துச் செல்வது மட்டுமே. அதன் பின் அவன் தன் மகனிடம் இழைவது, ஒரு கரும்பாறையென இருக்கும் ஆளுமையுள் இருக்கும் கனிவு.


7000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்  இருக்கும் என் மகன் நினைவில் வந்து போகிறான். கண்களில் வழியும் நீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.


சமதளத்தில் பாயும் கங்கையின் வேகத்தை விட, அமைதியே மனத்தில் நிறையும். அடுத்த அத்தியாயத்தைப் படிக்க விரும்பவில்லை.


அன்புடன்


பாலா