Monday, February 26, 2018

வெண்முரசின் உவமை



வெண்முரசின் உவமைகளைத் தவறவிடக்கூடாது என எப்போதுமே நினைப்பேன். வாசித்தபின் உவமைகள், அரிய வரிகளை தனியாக எடுத்துவைப்பேன். கிளாஸிக் பாணி நாவல் என்பதனால் இவை அழகியல்ரீதியாக அதற்குள் பொருந்துகின்றன. அவை ஆசிரியர்கூற்றாக எங்குமே வருவதில்லை. பெரும்பாலும் அந்தந்தக் கதாபாத்திரங்களின் மனமாக வருகின்றன. அல்லது அந்தக்கதாபாத்திரங்கள் நினைவுகூரும் சூதர்களின் வரிகள். ஒரு பெருங்காவியம் உருவான வாழ்க்கைச்சூழல் என்றால் கண்டிப்பாக இந்தவகையான கவித்துவம் அங்கே இருந்திருக்கும் என ஊகிக்கலாம்

ஆனால் இந்த வரிகள் எதுவும் பொதுவான மேற்கோள்களாக இல்லை. மேற்கோள்களாக அவற்றை காட்டமுடியும். ஆனால் அந்தச்சந்தர்ப்பத்தில் பொருத்தி அங்கே மேலும் மேலும் வாசிப்பதற்காகவே அந்த வரிகள் உதவிசெய்கின்றன. அனல்கொண்டு பழுத்த இரும்பு காரிரும்பிலிருந்து ஒளியால், நெகிழ்வால், வெம்மையால் வேறுபடுகிறது. அது உருமாற விழைகிறது. ஏனெனில் கலத்தில் நீர் என அதில் அனல் நிறைந்துள்ளது.அஸ்தினபுரியில் வேதம் வந்து நிரைவதைச் சொல்லும் வரி இது. இந்த ஒரு வரி அஸ்தினபுரி எப்படி இருந்தது என்பதைக் காட்டிவிடுகிறது. நீரில் தீ வெப்பமாக நிறைவதுபோல அஸ்தினபுரிக்குள் வேதம் நிறைந்திருந்தது என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன்

அந்த வரியையும் வைரத்தில் ஒளிபுகுவதுபோல என்ற வரியையும் இணைத்துக்கொண்டபோது வேறு ஒரு பார்வை உருவாகி வந்தது


சாந்தகுமார்