Friday, February 23, 2018

அணிச்சேவகர்கள், ஆணிலிகள்



ஜெ

வெண்முரசின் நீராட்டறைச் சேவகர்கள், அணிச்சேவகர்கள், ஆணிலிகள் ஆகியோரைப்பற்றித் தனியாக எழுதவேண்டும். அந்த வரிசையில் முக்கியமானவர் அர்ஜுனனுக்குக் காமத்தை உபதேசம் செய்பவர், மழைப்பாடல் நாவலில்.


அவர்களில் சூக்‌ஷ்மை முக்கியமான இடத்தை வகிக்கிறாள். அவளுடைய நுட்பமும் ஞானமும் ஆச்சரியப்படவைக்கின்றன. அவள் கவிதையிலிருந்து பெற்றுக்கொள்ளும் பித்தும் வேதம்பற்றிச் சொல்லும் இடமும் அபாரமானவை. வேதம் முழுமையாக பிரம்மத்தைச் சொல்லமுடியாத இடைவெளியில் வேதாங்கங்களைப்போட்டு நிரப்புகிறது, அப்பொதும் அந்த இடைவெளி அங்கேயே உள்ளது என்பது ஓர் அற்புதமான சொற்றொடர். அவள் சொல்லும் ஒவ்வொரு வரியும் அதேபோல. கவிதையை யானைவிழி என்கிறாள். மொழியை விட மனித உடல் நுட்பமாகப் பேசுகிறது என்கிறாள்.அந்த உரையாடலே அழகியது

ஆனால் வெண்முரசு நீராட்டறைக்காரர்களை மட்டுமே இப்படி நுட்பமானவர்களாகக் காட்டுகிறது. அவர்களெல்லாருமே படித்திருக்கிறார்கள். அடுமனைக்காரர்கள் பெரும்பாலும் அறிவில்லாத மோட்டா ஆட்கள். காவலர்கள் எதுவுமே புரியாமல் பேசுபவர்கள். இன்றுவரை ஒரு புத்திசாலிக்காவலன் கூட இந்த நாவல்வரிசையிலே வரவில்லை.எவருக்குக் கல்வி அளிக்கவேண்டும், எவருக்கு அளிக்கக்கூடாது என்ற கணக்கு அவ்வாறு இருந்ததா என்ன?


மகாலிங்கம்