Wednesday, October 1, 2014

சமணமும் மகாபாரதமும்



[சுகப்பிரம்ம ரிஷி முனிவரிடையே தோற்றமளித்தல்]


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கிஸாரி மோகன் கங்குலி தன் விளக்கத்தில் யதிக்கள் சமணர்களாக இருக்க கூடும் என்கிறார். ஆஸ்வமேதிக பர்வத்தின் இந்த அத்தியாயத்திலும் ஒரு அத்வார்யுவுடன் யதி ஒருவரின் உரையாடலாக வரும் இந்த பகுதியும் யதிக்கள் சமணர்களாக் இருக்க கூடும் என்று கருத நிறைய இடமளிக்கிறது. குற்ப்பாக கொல்லாமையை வலியுறுத்தும் அறம். அந்த அத்தியாய லிங்க் இதோ-  http://www.sacred-texts.com/hin/m14/m14028.htm// அது போன்றே ஆஸ்ரமவாசிக பர்வத்தில் விதுரரை யுதிஷ்டிரர் சந்திக்கும் கட்டத்தில் விதுரர் கடும் தவத்தின் விளைவாக எலும்பும் தோலும் மட்டுமே உள்ளவராகவும் ஆடை ஏதும் அணியாதவராகவும் வர்ணிக்க படுகிறார். விதுரர் கடைசிகாலத்தில் சமண நெறியை மேற்கொண்டிருக்கலாம்.மேலும் யதி என்னும் சொல்லின் உண்மையான பொருளையும் அறிய விரும்புகிறேன்.


சிவக்குமார்

சென்னை


அன்புள்ள சிவக்குமார்,


நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடம் நான் குறித்துவைத்திருந்ததுதான். 2006ல் மேல்சித்தாபுரத்தில் சமண மடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பெரியவர் இந்தத் திறப்பை அளித்தார். மகாபாரதத்தில் யதிகள் என்றபேரில் [யதீஸ்வரர்கள்] குறிப்பிடப்படுபவர்கள் பெரும்பாலும் அன்றைய தீர்த்தங்கார மரபைச் சேர்ந்தவர்கள் என்று. நான் அப்படித்தான் நினைக்கிறேன். இதேபோலபல இடங்கள் உள்ளன

வெண்முரசு நாவலில் வரும் ஒவ்வொரு வரலாற்று- அரசியல் - யோகவியல் குறிப்புகள் குறித்தும் நான் விரிவாகவே உரையாட முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு நூல் எழுதமுடியும். ஏனென்றால் கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுக்கால உழைப்பு இதன்பின்னால் உள்ளது.

ஆனால் நாவல் எழுதும்போதே இப்படி கேட்கபடும் ஒவ்வொரு ஐயத்துக்கும் மிகவிரிவான விளக்கத்தை எழுதமுடியாது. பிரச்சினை மணிக்கட்டுதான். ஆகவே கூடுமானவரை சுருக்கமாகச் சொல்கிறேன்.

 வண்ணக்கடலில் சமணம் பற்றிய குறிப்பு வந்தபோது  என் பிழை அறியாமை அது என சுட்டிக்காட்டி ஏழேட்டுபேர் எழுதியிருந்தனர். எல்லாருக்கும் நேர்ப்பேச்சிலும் , கடிதங்களிலும் சுருக்கமான விளக்கங்களை அளித்திருந்தேன்.

மகாபாரதம் ஒரு பிரதி அல்ல, பிரதித்தொகை என்று சொன்னேன். மகாபாரதமாக நமக்குக்கிடைப்பதிலேயே குறைந்தது எட்டு பாடபேதங்கள் உள்ளேயே உள்ளன. இதைத்தவிர ஜைன மகாபாரதம் விரிவாகவே கிடைக்கிறது. அது வர்த்தமானர் காலத்துக்கு முன்னரே தொகுக்கப்பட்டது என சமணஆய்வாளர்கள் கருதுகிறார்கள்

சமணமகாபாரதம் தனிநூலாக இருந்துள்ளது. இன்று ஹரிவம்சபுராணம்,பாண்டவசரித்திரம்,பாண்டவபுராணம், போன்ற சமணநூல்களில் அந்தக்கதைகள் உள்ளன. நேமிநாதரின் வரலாற்றிலும் மகாபாரதம் பேசப்பட்டுள்ளது. கிருஷ்ணன், பலராமன் [பலதேவர்] ஆகியோரின் கதைகள் மாறுபட்ட வடிவில் உள்ளன. மகாபாரதத்தை ஜைன மகாபாரதத்துடன் ஒப்பிட்டு விரிவான ஆய்வுநூல்கள் வந்துள்ளன.

சமணர்களின் முதல்குருவான ஆதிநாதர் ராஜஸ்தானில் உள்ள பாலிதானா என்னும் குன்றில் வாழ்ந்தவர்ர். சமண கணக்குகளின்படி அவர் வேதகாலத்துக்கும் முந்தையவர். சமன ஆய்வாளர்கள் அவரது சின்னம் காளை என்பதனால் அவரை சிந்துசமவெளி நாகரீகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள்.

ஆதிநாதர் அல்லது ரிஷபநாதரை உறுதியாக மகாபாரத காலகட்டத்துக்கும் நெடுங்காலம் முந்தையவர் என்று சொல்லமுடியும். அவர் மகாபாரதகாலகட்டத்துக்கு வெகுவாக முற்பட்ட ராமாயண காலத்தின் அரசவம்சமான இக்‌ஷுவாகு குலத்தைச் சேர்ந்தவர் என்று சமணநூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சில தீர்த்தங்காரர்களும் இக்‌ஷுவாகு குலத்தைச் சேர்ந்தவர்கள்.

இருபத்தி இரண்டாவது தீர்த்தங்காரரான நேமிநாதர் மகாபாரத காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கிருஷ்ணனுக்கு உறவினர் என்றும் சமணநூல்கள் சொல்கின்றன. அவரது தந்தையின்பெயர் சமுத்ரவிஜயன். சமுத்ரவிஜயன் விருஷ்ணி குலத்தை நிறுவியவரான அந்தகாவிருஷ்ணியின் மகன்.கிருஷ்ணனின் தந்தை வசுதேவனின் ஒன்றுவிட்ட தமையன். நேமிநாதர் கிருஷ்ணனின் சகோதரர் என்று சொல்லப்படுகிறது

பலவகையிலும் நேமிநாதர் கிருஷ்ணனுக்குச் சமகாலத்தவர் என்று பொதுவாக நம்பப்படுகிறது.சில நூல்களில் அவர் கிருஷ்ணனுக்கு மூத்தவர், கிருஷ்ணனின் தத்துவ ஆசிரியர் என்று சொல்லப்பட்டுள்ளது. பாகவதத்தில் கிருஷ்ணன் கம்சனைக்கொன்றபின் பல்வேறு குருகுலங்களில் கல்விகற்றார் என்று சொல்லப்படுகிறது. நேமிநாதருக்கும் மாணவராக இருந்திருக்கலாம்

பல்வேறு நூல்குறிப்புகள் நேமிநாதரை கிருஷ்ணனுடன் சம்பந்தப்படுத்துகின்றன. நேமி [சக்கரம்] இருவருக்கும் அடையாளம். அது விருஷ்ணிகளின் குலச்சின்னமாகக் கூட இருந்திருக்கலாம். அவர் அந்த அடையாளத்துடன் துறவுபூண்டபின் அழைக்கப்பட்டிருக்கலாம்.கிருஷ்ணன் உக்ரசேனரின் மகள் ராஜ்மதியை நேமிநாதருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தார். அப்போது பலியிடப்பட்ட உயிர்களைக் கண்டு மனம் வருந்தி நேமிநாதர் துறவியானதாக சமணக் கதைகள் சொல்கின்றன.

நேமிநாதர் கிருஷ்ணனைப்போன்றே கரியவர் என்கின்றன நூல்கள்.  அவர் தோற்ற அளவில் பெரும்பாலும் கிருஷ்ணனுடன் ஒப்பிடப்படுகிறார். நேமிநாதன் என்பது கிருஷ்ணனையும் குறிக்கும் சொல்.


அதன்பின் வாரணாசி அரசகுலத்தைச்சேர்ந்த பர்ஸ்வநாதர் இருபத்துமூன்றாம் தீர்த்தங்காரர். அதன்பின் வர்த்தமானர். அங்கநாட்டில் வைஷாலியில் அவர் பிறந்தார். அவர்தான் அதுவரையிலான தீர்த்தங்காரர்களின் தத்துவங்களை ஒன்றுதிரட்டி சமண மதத்தை அமைத்தவர். அதன்பின்னர்தான் நாம் இன்றுகாணும் சமண மதம் உருவாகியது.



ஆகவே மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்லாது நிகழ்ந்த காலத்தில்கூட தீர்த்தங்காரர்களின் சிந்தனைகள் இந்தியாவின் வலுவான சிந்தனைமரபாக இருந்திருக்கலாம். தீர்த்தங்கார வழிபாடு அன்றே முக்கியமான மதமாக இருந்திருக்கிறது. முதல் ஐந்து தீர்த்தங்காரர்களும் தெய்வங்களாக வழிபடப்பட்டு பற்பல நூற்றாண்டுகளுக்குப்பின்னரே சமணமதம் பிறக்கிறது. மகாபாரதகாலகட்டத்தில் இளநாகன் காணும் சமணத் தீர்த்தங்காரர்கள் அந்த ஐவரே [வண்ணக்கடல்]

மகாபாரத ரிஷிகளில் பலர் தீர்த்தங்காரர்களின் சிந்தனைகளைப் பேசுபவர்களாக அடையாளம் காணப்படும் பின்னணி இதுதான் .அதைப்பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.மகாபாரதகாலகட்டத்தில் சமணம் தனிமதமாக இல்லாத காரணத்தால் அவர்களெல்லாம் தனிப்பட்ட ரிஷிகளாகவே கருதப்பட்டனர்.

சுகப்பிரம்ம ரிஷியின் தோற்றம் பற்றிய வர்ண்னை திகம்பரர்களுக்கு மிக அண்மையதாக உள்ளது. அவர் நிர்வாணத்தோற்றம் கொண்டவர்.காமத்தை முற்றறுத்தவர். கோர அங்கிரீசர் [கோரமான தோற்றம் கொண்டவர்] என்னும் ரிஷி சமணர் என்ற வாதம் பலராலும் சொல்லப்பட்டுள்ளது. அகிம்சை, புலால் மறுத்தல், ஊழ்வினை பற்றி பல இடங்களில் மகாபாரதம் பேசுகிறது

யதி என்ற சொல்லுக்கு ‘கடும்துறவு மேற்கொண்டவர்’ என்று பெயர். மகாபாரத காலத்தில் பலவகையான கடும்துறவு இருந்திருக்கிறது. அனைவருமே யதிகள் என அழைக்கப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் தீர்த்தங்கார மரபினராகளாக இருந்திருக்கலாம். ஜினர் என்றால் கடுந்துறவில் வென்றவர் என்று பொருள். அவர்களே தீர்த்தங்காரர்கள். அவர்களைப் பின்பற்றுவதனால் அது ஜைனம். உழைக்கும் மக்களும் வணிகர்களும் பின்பற்றிய மதம் என்பதனால் சிரமண மதம் என்று அழைக்கப்பட்டு தமிழில் சமணம் ஆகியது.

ஜெ