Wednesday, October 1, 2014

நடை



அன்புள்ள ஜெமோ

நீலம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீலத்தை ஆரம்பத்தில் கொஞ்சம் வாசித்தேன். அதன்பிறகு தொடரவில்லை. அந்த மொழிநடையை என்னால் தொடரமுடியவில்லை. ரொம்பவும் loaded ஆக இருந்தது. மேலும் எனக்கு நேரடியாக எழுதப்படும் உரைநடைதான் பிடிக்கும். அழகுபடுத்திச் சொல்லக்குடாது என்ற எண்ணம் இருந்தது.

அதன்பிறகு இப்போது வெண்முரசு விவாதங்களில் வரும் கடிதங்களை வாசித்துக்கொண்ட பிறகுதான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். இந்த இரண்டாவது வாசிப்பில் ஆரம்பத்தில் எனக்கிருந்த மனத்தடைகளைக் களைய முடிந்தது. ஸ்ரீ செம்மணி அருணாச்சலம் அவர்களிம் கடிதம் உதவியாக இருந்தது. நடையில் அலங்காரம் என்பது அனேகமாக இல்லை என்று தோன்றியது. வெறுமே ஒலிக்காகவோ அழகுக்காகவோ ஒன்றுமே சொல்லப்படவில்லை. அதோடு இதைப்போல நடைகளில் உள்ள ஸம்பிரதாயமான வர்ணனைகளும் இல்லை எல்லா வர்ணனைகளும் புதியவையாகவே இருந்தன

இன்று நாலைந்து அத்தியாயங்கள் வாசித்தேன். கொஞ்சம் வாசித்தபோது என்ன வாசித்தேன் என்பதை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஆனால் அந்த உணர்ச்சிகள் அப்படியே மனசுக்குள் நிறைந்து உடம்பை நடுங்கவைத்தன. ஒரு புத்தகத்தை வாசித்து கைகாலெல்லாம் நடுங்குவது இதுவே முதல்முறை

அநதநடையில் குயிலைக் கேட்கமுடிந்தது. கிருஷ்ணனின் கையில் உள்ள குழலையும் கேட்கமுடிந்தது.

பிரபாகர்




அன்புள்ள ஜெ

நான் ஆரம்பத்தில் வெண்முரசு வாசித்துவருகிறேன். நீலத்துக்குள் போக அந்த நடை தடையாகவே இருந்தது. சுற்றிச்சுற்றிவருவதுபோல தோன்றியது. விட்டுவிட்டேன். பிறகு வாசகர்கடிதங்களில் பல்வேறு கோணங்களில் பலர் எழுதியிருந்ததை வாசித்தபிறகுதான் இதை வாசிக்கும் முறை பிடிகிடைத்தது. ராதை கதையை ஒரு சரடாகவும் கண்ணன் கம்சன் கதையை தனியாகவும் வாசித்தேன்.வாசித்துக்கொண்டே இருக்கிறேன். வாசித்துத் தீராத புத்தகம் என்று தோன்றுகிறது. சம்பவங்களே இல்லாமல் வெறும் உணர்ச்சிகளாகவே போகும் நாவலுக்கு வேறுநடையே முடியாது என்று தோன்றுகிறது

ஆர். குமார்

மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்