அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
ஞானம் என்பது தேன்கூட்டுத் தேன். பகடி என்பது தேன்மிட்டாய்
தேன். இரண்டும் தேன் என்பதால் இரண்டும் ஒன்றுதான் ஆனால் தேன்கூட்டுத்தேன் புன்னகையோடு
கிடைப்பதில்லை.
பகடித்தேன் புன்னகையோடு, புன்னகைக்காக கிடைத்தாலும்
அதை உருவாக்கியவன் நுணுக்கமும் திறமையும் நம் நாவில் நிற்கிறது.
பிரயாகை-36 ஞானத்தால் தேன்கூட்டுத்தேனாகவும், பகடியால்
தேன்மிட்டாய் தேனாகவும் இருக்கிறது. பகடி சிரிப்பதற்காக சொல்லப்படுவதில்லை. உண்மையின்
ஊசியால் குத்தி ரணம்செய்யாமல், உண்மையின் ஊசியை பகடி வாழைப்பழத்தில் ஏற்றி விழுங்க
வைப்பது. விழுங்கும்போது சிரித்து, செறிக்கும்போது இரணசிகழ்ச்சை செய்வது. பகடியாகின்ற
ஞானம் விளக்காவதற்காக மண்ணிற்கு வரும் விண்மீன். ஒளிவிளக்காகின்றது.
பீமன்
தனது ஞானத்தை பகடியாக்கி அதனை வாழ்வின் இருள்திசையில் ஒளிபாச்சுகின்றான்.
புன்னகை புன்னகையாகவும். கண்ணீர் கண்ணீராகவும், அன்பு அன்பாகவும், கோபம்
கோபமாகவும்,
இன்பம் இன்பமாகவும், துன்பம் துன்பமாகவும் எதிரில் இருப்பவனை
தொற்றிக்கொள்வதுபோல் பீமனின்
பகடி அர்ஜுனனையும் பற்றிக்கொள்வது அற்புதம். இன்றைய பகடியின் மூலம் வாசகனை
ரசிகனாக்கும்
ஆசிரியர் திரு.ஜெவுக்கு இந்த நேரத்தில் எனது வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
பீமனும் அர்ஜுனனும் இரத்தில் ஏறி மாளிகைக்கு செல்லும்வழியில்
பீமன் தனது “தொடையில் அடித்து” நகைத்தான்
என்று தொடங்கும் பகடியின் நகைப்பின் வீச்சை, பீமன் “ரதத்தில் அறைந்து”
நகைத்தான் என்று ஆசிரியர் முடிப்பார். நகைப்பதற்கு
என்ன சொன்னார் என்பதற்கு அப்பால் சென்று நகைப்பின் அலையாடலை காட்டி நகைப்பின் உக்கிரத்தை
பதிவு செய்யும் இந்த அற்புதத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்ணில் நீர் வரும்
அளவுக்கு நகைத்தான் என்பது ஒரு அளவுகோலில் எல்லை அதற்குமேல் எண் இல்லை என்பதை அது குறிக்கிறது.
நகைப்புக்கு என்ன எடை என்பதை திரு.ஜெவின் இன்றைய பதிவில் கண்டு அதன் எடையில் அழுந்துகின்றேன்.
//பீமன் தொடையில் அடித்து நகைத்து “இதையெல்லாம் பிரம்மம் கேட்டுக்கொண்டிருந்தால் உனக்கு அது அனுப்பும் குரு எப்படி இருப்பார் தெரியுமா? சலவைக்காரியின் துணிமூட்டையைத் திருடி ஆடைகளை அணிந்துகொண்ட பித்தன் போலிருப்பார்.” அந்த குழந்தைத்தனமான கற்பனை அர்ஜுனனை வெடித்துச்சிரிக்கச் செய்தது. “ஒவ்வொரு தேவைக்கும் ஒன்றாக பெருங்கூட்டமாக ஆசிரியர்கள் வந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசிக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களை ஒருவரோடு ஒருவர் போரிடச் சொல்லவேண்டியதுதான்” என்றான் பீமன். “போரிட்டால் சரி. புணர்ந்து மேலும் குருநாதர்களை உருவாக்கிவிட்டால்?” என்றான் அர்ஜுனன். பீமன் ரதத்தின் தூணில் அறைந்து நகைத்தான்//
இந்த நகைப்பின் தேன்மிட்டாய் வழியாக கிடைக்கும் ஞானத்தேன் எத்தனை
பெரிய மலை தேன். நான் மலைத்தேன். கண்ணன் யார் என்று அறியாமலே பீமன் காட்டும்
கண்ணன் காட்சி. சலவைக்காரியின் துணிமூட்டையைத் திருடி ஆடைகளை
அணிந்துகொண்ட பித்தன். இந்த காட்சியை குழந்தைத்தனமான கற்பனை என்று வெடித்துச்சிரிக்கும்
அர்ஜுனனை வாசகன் குழந்தை என்று அறியும் தருணம். கண்ணன் யார் என்பதை வாசகன் கண்டு உள்ளான்.
பீமன் சொல்லும் அதே சொல்லுக்கு உரியவன்தான் கண்ணன். கண்ணனின் இந்த நுண்ணிய ஞானம் பித்தும்,
கலை ரசனையும் ஆடை அலங்காரமும் பீமனுக்கு எப்படி தெரிந்தது என்ற வினா? வாசகன் நெஞ்சில்
எழுகின்றது. தீவிர சுந்திரப்போராட்ட போராளியாக இருந்த மகான் அரவிந்தர் நெஞ்சில் கண்ணன்தோன்றியதுபோல்
உள்ளது. மெய்ஞானமும், உலகஞானமும் தருமனைவிட எனக்கு அதிகமாக தெரியும் என்று பீமன் சொல்லும்
சொல் வெறும் வாய்வார்த்தை இல்லை. கருவில் திருவுடையான் என்று சிலரைச்சொல்வார்கள் அது பீமனுக்கு அப்படியே பொருந்துகின்றது.
பயனில் சொற்பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்-என்கின்றார்
வள்ளுவர். இங்கு பகடியின் மூலம் பீமன் பதடியாக இல்லை. பெரும் ஞானம்
உடையவனாக இருக்கிறான். அந்த ஞானத்தில் வாழ்க்கைக்கு பொருந்தாத இடம் எது
என்பதையும், ஞானம் எந்த இடத்தில் தேனாக இல்லாமல் தேன்
ஈயின் கொடுக்காக மட்டும் இருக்கிறது என்பதையும் நன்கு அறிந்து உள்ளான்.
அதனால்தான்
அவனிடம் உள்ள ஞானத்தால் தருமரை ஏற்றுக்கொள்கின்றான்.
//“அவரிடம் நான் எதிர்பார்ப்பது மெய்ஞானத்தை அல்ல. உலக ஞானத்தையும் அல்ல. அதெல்லாம் அவரைவிடவும் எனக்குத்தெரியும். அந்த ஞானத்தால்தான் அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரிடம் நான் காண்பது என் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பை. என்னையும் தானாகவே அவர் நினைக்கிறார் என்பதை உறுதியாக அறிவேன். அந்த அன்பு மட்டுமே அவர். வேறேதுமில்லை. அது எனக்குப் போதுமானது…” என்றான் பீமன்//-பிரயாகை-36
//“இளையவனே, அறம் கற்றவர்களின் அகம் அறநூல்களை போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறது. பிற அகங்களை அது அறிவதில்லை…” என்றான். அர்ஜுனனின் தோளைத் தொட்டு “வா, கதை முடிந்துவிட்டது” என்றான்//-பிரயாகை-35
ஜெவால் படைக்கபப்ட்ட மேல் உள்ள இரண்டு வாக்கியங்களும் பீமனின் இருமைகளை
விளக்குகின்றது. பீமனால் குரங்குபோல் எளிதில் ஞானத்தின் தொடக்கப்புள்ளிக்கும், உச்சிப்புள்ளிக்கும்
எளிதில் தாவமுடிகிறது. காற்றுபோல் அவன் ஆதியிலும்
அந்தத்திலும் நிறைந்து இருக்கிறான். ஞானிபோல் சமூகத்தின் விலக்கப்பட்டவர்களை அனைக்கமுடிகிறது.
அரசுமன்றில் நின்றுக்கொண்டே அரசால்பவர்களை கேளிசெய்யமுடிகிறது. பீமன் அங்கும் இருந்துக்கொண்டு
இங்கும் இருந்துக்கொண்டு தனக்கான மையத்தில் அசைவின்மையை அடைகிறான்.
நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்-என்னும் திருக்குறள் பொருந்திவருவது
பீமனுக்கு மட்டுமே. அதனால்தான் மகாபாரதத்தின் பல அரிய செயல்களை முடித்துவைக்கும் ஆற்றல்
உடையவனாக பீமன் உள்ளான். கதையின் நாயகன் கண்ணாக இருந்தாலும் கதையின் உடல்தான் பீமன்.
பீமன்
கருவில் திருஉடையவன், பகடி என்னும் தேன்தோட்டக்காரன். பீமனின் பகடி
பதடியாவதில்லை. ஜெவால் தீட்டப்படும் எழுத்து வைரத்தால் மின்னி
ஜொளிக்கிறான்
பீமன்.
அன்புள்ள ஜெ இந்த பீமனைப்பார்க்கும்போது சாமி கும்பிடுவதல்ல ஆன்மீகம் என்று நீங்கள் சொன்னது நினைவுக்கு
வருகின்றது.
தன்னையும், தன் அண்ணனையும், தம்பிகளையும் கேளிசெய்யும் கூட்டித்தின்
நடுவில் இருந்துக்கொண்டு சலனமில்லாமல் சாப்பிட்டுவிட்டு நீங்கள் என்தோழர்கள் நம்புங்கள் என்று அணைத்துக்கொள்ளும்
பீமன் செய்யும் வழிபாடு என்ன? ஆன்மீகம் என்பது என்ன? காட்டுகின்றது. உச்சிகரை குருவாககொள்ள
வணங்குவது. தாசிவீ்ட்டிற்குள் நுழையும்போது பயத்தில் வார்த்தையில் முறிந்து தவிக்கும்
தாசியிடம் எதுவும் பேசாமல் அர்ஜுனனை தாசிவீட்டிலிருந்து எழுப்பி அழைத்துச்செல்லும்போது
அவளுக்கு உரியதை கொடுத்துவிட்டாயா? என்று ஞாபகப்படுத்துவது எல்லாம் அந்த அந்த கணத்தில்
வாழம் நித்திய அனுஸ்டான தர்மம்.
போகிறபோக்கில் உச்சிகன் கூட்டத்தாரிடம் சொல்வது // பிறப்பில் இருந்து துறவு வழியாக அன்றி எவரும் தப்ப முடியாது…// என்னும்போது
உச்சிகன் கூட்டத்தில் என்னை பிடித்து தள்ளிவிட்டு முன்னே செல்கின்றீர்கள் ஜெ.
நன்றி
அன்புள்ள
ராமராஜன் மாணிக்கவேல்