Saturday, December 6, 2014

பிரயாகை-38-ஒருவனல்ல இருவன்


ஒருவன் நடிக்கும்போது இருவராக இருக்கிறான். வெண்முரசு மகாபாரதத்தில் எல்லோருமே இருவராகத்தான் இருக்கிறார்கள். வெண்முரசில் இருவராக ஒருவன் இருக்கிறான் என்பதை அர்ஜுனன் கண்களின் வாழியாகப்பார்க்கிறோம்.

ஒருவன் இருவராக இருப்பது நடிப்பு. இருவன் ஒருவனாக இருப்பது முழுமை.

இருவராக இருக்கும் ஒருவன் மனதில் ஏற்படுத்தும் தேற்றத்தாழ்வுகளை கழித்தால் கிடைப்பதுதான் ஒருவனின் உயரம். ஒவ்வொருவரின் உயரத்தையும் அளந்துக்கொண்டு இருக்கிறான் அர்ஜுனன்.

வெண்முரசுக்கண்ணன் இருவராக நடிக்கும் ஒருவன் அல்ல, இருவனாக இருக்கும் ஒருவன்.

இருவன் ஒருவனாக இருப்பதாலேயே அவனால் நடிக்கமுடியவில்லை. கண்ணனைக்காணும் அனைவரும் அவன் இருவன் என்பதை அறிந்தே இருக்கிறார்கள். அவன் நடிக்கிறான் என்று எண்ணுகின்றார்கள். எல்லோரும் நடிக்கும் மனிதர்கள் என்பதால் கண்ணனும் நடிக்கிறான் என்று எண்ணுவது உளவில் ஒற்றுமை. அர்ஜுனன் தேடுவது நடிக்காத ஒருவனை. கண்ணன் நடிக்காத ஒருவன். அவன் இருவன் என்பதையும் அறிகின்றான். இருவனாக இருக்கும்போதும் நடிக்கவில்லை என்பதையும் அறிகின்றான்.

உலகம் முழுவதும் கண்ணனை பொய்யன் என்று நினைக்க அவன் பொய்யில்லாதவன் என்று நினைக்கும் அர்ஜுனன் அகம் அறிந்தப்பின்னே அறிவால் அறிகின்றான். கண்ணன் தூது வெல்லுமா? தோற்குமா? என்பதற்கு முன்பே அர்ஜுனன் என் வில் இனி உன்வில் என்பது அகத்தில் இருந்து புறத்திற்கு வரும் ஒரு நம்பிக்கை. கண்ணனின் மகத்துவத்தை காட்ட ஜெ படைக்கும் இந்த நுண்குறிப்பு போற்றுதலுக்கு உரியது. //கிருஷ்ணன் “உன் வில்திறத்தை அறிந்திருக்கிறேன். அதை நம்பி வந்தேன்” என்றான். “அது இனி உன் வில்”என்றான் அர்ஜுனன்//-பிரயாகை-37. இதற்குப்பின்புதான் கண்ணன் நடிக்கவில்லை என்று அர்ஜுனன் உணர்கின்றான் அப்படி இருக்க எது அவனை முன்னமே அவனுக்கு வில்லை கொடுக்க வைத்தது. இங்கும் கண்ணன் இருவனாக இருக்கும் ஒருவன். 

தூதாக வந்தவனும் அவன்தான், மருகனாக வந்தவனும் அவன்தான். தூதனாகவும் அவன் நடிக்கவில்லை, மருகனாகவும் நடிக்கவில்லை.

ஒவ்வொரு கணமும் மனிதன் ஒருவனாக இருக்கமுடியாமல் நடித்து நடித்து இருவராக இருக்கும் மனிதர்கள் மத்தியில் ஒவ்வொரு கணமும் இருவனாக இருக்கும் கண்ணன் தின்னும் கிளி, தின்னாக்கிளி. இளைஞன் ஆனால் குழந்தை, புன்னனகயே ஒரு உருப்பாக இருப்பன் விழியில் கண்ணீர். கேட்க வந்த இடத்தில் கொடுத்தல், கற்க தொடங்கும்போதே கற்பித்தல், ஒருவனே ஒரு குலமாக இருப்பது, கண்றாக இருந்து தாய்பசுவாக நிறைவது. ஒளிமேனியே கருமேனியாக இருப்பது, உணர்ச்சி கொந்தளிப்பின் நடுவில் இசை ரசிகன்போல் நிற்பது. கருணையே வடிவாகி கொலைஞனாகவும் இருப்பது என்று கண்ணன் கணம்தோறும் இருவன் ஆனால் ஒருவன். கண்ணன் இருவனாக இருக்கும் ஒருவன் என்பதற்கு ஒரு துளி சான்று கீழே.  

//அர்ஜுனன் அவர்களையே நோக்கினான்குந்தி கிருஷ்ணனை பரவசம் ததும்பும் முகத்துடன் குனிந்துநோக்கிக்கொண்டிருந்தாள்அவன் அவள் கால்களில் நன்றாகச் சேர்ந்து அமர்ந்து அவள் ஆடைநுனியைப்பற்றி கைகளால் சுழற்றியபடி சிறுவனைப்போலவே பேசிக்கொண்டிருந்தான்அவன்நடிக்கவில்லை என்று அர்ஜுனன் எண்ணினான்அவன் அன்னையர் முன் இயல்பாகவே மழலைமாறாதமைந்தனாக ஆகிவிடுகிறான் போலும்உடலில் மொழியில் விழியில் எல்லாம் அங்கிருந்தது ஒருகுழந்தை//

எல்லோரையும் நடிகன் என்று நினைக்கும் அர்ஜுனனை கண்ணன் நடிகன் என்று காட்டும் இடம் அழகு.

//கிருஷ்ணன் அவளருகே சென்று தரையில் அவள் காலடியில் அமர்ந்துகொண்டு “அத்தைநான்இதுவரை தங்களைப்போன்ற ஒரு பேரழகியை கண்டதில்லை” என்றான்குந்தி முகம் சிவந்துபடபடப்புடன் தலை நிமிர்ந்து தளபதிகளை நோக்கினாள்அவர்கள் தலைவணங்கி வெளியே சென்றனர்.//இந்த வார்த்தைக்கு பிறகு அர்ஜுனன் அகம் என்ன பாடு பட்டிருக்கும். இப்படி கண்ணன்போல அகம் மறைக்காமல் அன்னையிடம் அர்ஜுனன் ஒருநாள் பேசி இருந்தால் அவன் காலமெல்லாம் பெண்களில் விழுந்து அழிந்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை அல்லவா?

கண்ணன் குறை சொல்ல வந்தவன் இல்லை. கண்ணன் செயல்களின் மூலமே மற்றவரின் குறைகளை அறிய வைக்கிறான். தருமன்கூட தன் குறையை அறிந்து இருப்பான். . ஆவதை செய்வோம் என்று சொல்வதன் மூலமும் ஆவதை செய்வதன் மூலம் கண்ணன் செயல்களின் நாயகன். 

வஜ்ரமுகிக்கு இடம் கொடுத்து ஒதுங்கிப்போவதும், மந்தனை அறையை மாற்றும்போது அர்ஜுனன் உள்ளே நுழைய தான் பின் தங்கி முன்செலுத்துவதும். குந்தியின் பாதம் தொடுவதும். கண்ணன் சொல்லும் செயலும் ஒன்றாகி நிற்பவன். ஒருவனல்ல இருவன்


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.