அன்புள்ள திரு.ஜெ வணக்கம்
பாம்பு ஒருமுறை நாக்கை நீட்டுகின்றது ஆனால் இரண்டு நாக்குகள் வெளியில் வருகின்றது. மனித அகமும் ஒவ்வொரு கணமும் இரண்டாக வெளிவருகின்றது. வெளிவந்தபின்பு பாம்புநாக்குபோல் அதனால் ஒன்றாக உள்ளே செல்ல முடிவதில்லை. ஒன்று வெளியிலேயே நீண்டுப்போகின்றது ஒன்று உள்ளுக்குள் சுருண்டு கொண்டுவிடுகின்றது.
துரியோதனின் கணம் திருதராஷ்டிரன் மகனாக இருப்பதா? அஸ்தினபுரியின் மன்னனாக இருப்பதா என்று வெளிவருகிறது. எது வெளியில் நீண்டு செல்லும்? எது உள்ளே சுருண்டுக்கொள்ளும் என்பதுதான் இன்றை கேள்வி? அதுதான் மகாபாரதத்தின் வருங்கால கதையின் கேள்வியும். அந்த கேள்வியின் இரு பிளவு நாக்கை கூர்த்தீட்டி செல்கின்றீர்கள் ஜெ இந்த பதிவில். பாம்பின் நாக்கைப்பார்ப்பதுபோல உற்சாகமாகவும் பயமாகவும் இருப்பதை உணர்கின்றேன். பிரயாகை-42 இருசுவையின் ஒருகணம் என்றால் மிகை இல்லை.
மகனாக இருப்பதால் இழப்பது என்ன? மன்னனாக இருப்பாதால் அடைவது என்ன? மன்னனோ மகனோ சாவபோது ஒரே நாளில்தான். போகும் இடம் தெரிந்துவிட்டது போகவேண்டிய பாதைதான் வாழ்க்கையின் தேவையாகின்றது. எந்த பாதையில் செல்வது?
ஆள் நடமாட்டமே இல்லாத எதிர் வாகனம் இல்லாத தன்னந்தனிப்பாதை மனிதனுக்கு அச்சதை ஏற்படுத்துகின்றது அல்லது சலிப்பை ஏற்படுத்துகின்றது எனவே நெருக்கடி மிகுந்த முன் பின் எதிர் வரும் வாகனங்களை மிஞ்சி செல்லும் பயணமே பயணமகா தெரிகிறது. இந்த பாதையின் பயணத்திலும் தன் பயணம் என்ன என்பதைவிட மற்றவர்களின் பயணம் என்ன என்பதில் சிக்கிதவிக்கும் மனத்தை என்ன வென்பது?
//மானுட உள்ளம் பலவகை பொய்த்தோற்றங்களை உருவாக்கவல்லது. ஏனென்றால் உள்ளம் என்பது தன்முனைப்பின் ரதம் மீதுநின்று ஆணவத்தை படைக்கலமாக ஏந்தியிருக்கிறது.பொறுத்திரு…” // -பிரயாகை-41 ல் திருதராஷ்டிரர் சொல்லும் சொற்கள் பயணம் முடித்து நிற்பவன் பயணம் மேற்கொள்பவனுக்கு சொல்லும் உண்மையான அறிவுரைச் சொற்கள். பயணம் மேற்கொள்வன் எப்போதும் பயணம் செய்தவனைவிட மேதாவி என்றுதானே நினைக்கிறான். பயணம் செய்யவேண்டும் என்ற எண்ணமே அறிவின் அடையாளம் என்று எண்ணும் மாயத்தை அல்லவா மனித அகம் ஏற்படுத்துகின்றது.
தலைமுறை வித்தியாசம் என்பது இதுதான். ஒடிவந்து நிற்கும் குதிரைக்கும் ஓடத்துடிக்கும் குதிரைக்கும் உள்ள வித்தியாசம். எல்லாவற்றையும் முந்தி முட்டி மோதித்தள்ளி கால் ஓடிந்து வந்து நின்றாலும். மெதுவாக நடந்து கடைசியாக வந்து நின்றாலும் குதிரை அடைவது என்ன? வலியைத்தவிர ஒன்றும் இல்லை.
வலியை ஏற்படுத்துவதற்கும், வலியை பெறுவதற்கும் ஓடும் குதிரையின் மனநிலையில் நிற்கின்றான் துரியோதன்.
தந்தைமீது அன்பும்,பணிவும் கொண்ட அகம் நிறைந்த மகன் துரியோதனன். அளவுகடந்த பாசமும், கருணையும் கொண்ட தந்தை திருதராஷ்டிரர். நல்ல மகன் என்பதற்கு துரியோதனனும், நல்ல தந்தை என்பதற்கு திருதராஷ்டிரனும் சாட்சியாக நிற்கிறார்கள். தீராநரக பெருப்பையே உனக்கு நான் கொடையாக கொடுத்தால் என்ன செய்வாய் என்று கேட்கும் தந்தையிடம் மூதாதையர் அருளென்றே கொள்வேன் என்று சொல்லும் இடத்தில் இருவரும் மாறி மாறி ஒன்றே என்ற காட்டுகின்றார்கள். நல்லது எல்லாமுமே திரியும் இயல்பு உடையது. நல்லதை நல்லதாகவே வைப்பது பெரும்தவம். தவம் நழுவக்கூடியது. அதை நழுவ செய்ய புறக்காரணிகள் அழுத்தமோடு செயல்படும். சகுனியும் கணிகனும் இருதிசையில் அந்த தவத்தை கலைக்கிறார்கள். சகுனியும், கணிகனும் பிறந்து வரவில்லை, அவர்களுக்கான சூழ்நிலை அவர்களை உருவாக்குகின்றது. நல்லவர் கெட்வர் என்பது எல்லாம் மனிதர்கள் இல்லை அந்த அந்த சூழ்நிலைகள்தானா?
துரியோதன் தனது நிலையில் நிற்கும் ஒரு இடம். கீழே காட்டப்படுகின்றது. இதை தவறு என்று அவன் இடத்தில் நாம் சொல்ல முடியாது. ஜெ துரியனின் பாத்திரத்தை மேல் எடுத்துச்செல்லம் அத்தியாயம் இன்று. படிப்படியாக அது மேலேமேலே இன்று ஏறுகிறது. பாத்திரம் மேலே மேலே ஏற ஏற அதன் அகத்தின் கூர்மையும் மேலேறுகிறது.
//“கோழை. தம்பியர் மேல் அமர்ந்திருக்கும் வீணன்.” இருகைகளையும் இறுக முட்டிபிடித்து தலையை ஆட்டி“இளையவனே, அவன் முன் பணிந்து நின்ற அக்கணத்துக்காகவாழ்நாளின் இறுதிக்கணம்வரை நான் என்னைமன்னிக்கமாட்டேன்” என்றான்// என்பதன் மூலம் துரியோதனன் தனது அறம் நியாயமானது என்று காட்டும் இடத்தில் இருந்து மாறுபட்டு சிந்திக்கும் திருதராஷ்டிரன் அறத்தின் சாட்சி. திருதராஷ்டிரனும் தனது பாத்திரத்தை மேலே தூக்கி சென்று நிலையான இடத்தில் வைத்து உயர்கின்றார். ஜெவின் நுட்பத்திற்கும் ஞானத்திற்கும் உரிய பெரும் களவிளையாட்டு.
சுயகௌரவத்தை தாண்டி, பாசத்தை இரத்த பந்தத்தை தாண்டி நியாயம் என்ன என்பதை திருதராஷ்டிரர் உணர்ந்து இருப்பதில் அறம் என்ன என்பதை திருதராஷ்டிரர் துரியனுக்கு காட்டிச்செல்கின்றார். //தருமனைப்பற்றி இங்குள்ளஅத்தனைகுடிகளும் மனநிறைவை மட்டுமே கொண்டுள்ளனர்.இந்நாட்டை ஆள அவனைப்போன்று தகுதிகொண்டவர் இல்லை.நீயும் பீமனும் அர்ஜுனனும் கர்ணனும் அவன் அரியணைக்குஇருபக்கமும் நின்றீர்கள் என்றால் அஸ்தினபுரி மீண்டும்பாரதவர்ஷத்தை ஆளும். பிரதீபர் ஆண்ட அந்த பொற்காலம்மீண்டு வரும்.”//
அறக்கடவுளாக இருக்க எல்லோருக்கும்தான் ஆசை ஆனால் உடைந்துபோகும் சிலைகள் கற்களாகி விடுகின்றன.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.