ஆசிரியருக்கு ,
"நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்" நூலின் முன்னுரையில் ஒரு இடம் வரும், இசை இடது எல்லை என்றால் கணிதம் வலது எல்லை, அதன் நடுவே தான் இலக்கியம் இருக்கிறது . இசை அறிவுத்துறை சாராதது முழுவதும் கற்பனையால் மட்டுமே ஆனது , கணிதம் முழுக்க முழுக்க நிரூபணம் சார்ந்தது இங்கு கற்பனைக்கு இடம் இல்லை. இலக்கியம் ஒரு கால் அறிவுத்துறையிலும் மறுகால் கற்பனையிலும் கொண்டது.
அதே சிந்தனை உருவகத்தில் தான் எனக்கு இடும்பி-குந்தி ,நடுவே அம்பை-பீஷ்மர் , மறு எல்லையில் குந்தி -பாண்டு.
இடும்பி -பீமன். பிற எதையும் கணக்கிடாமல் தன் முன் நிற்கும் மனிதனை மட்டும் கணக்கிட்டு தன்னியல்பாக இணையைத் தேர்வது , இங்கு தொலை நோக்கிற்கோ, லட்சிய அடைவுக்கோ , சூழல் சாதகத்திற்கோ இணை ஒரு கருவியாவது இல்லை. இந்த சிந்தனை தான் மலைகுடிகளை கட்டியிருக்கிறது , சிறந்த வலிமைமிக்க தாக்குப் பிடிக்கும் பிள்ளைகளை உருவாக்க வேண்டும் அதற்குத் தகுந்த இணை வேண்டும், அது ஒரு தூய காதல். ஆக இடும்பி பீமனை தேர்வு செய்கிறாள். இது ஆற்றின் நீரோட்டம் போன்றது.
குந்தி -பாண்டு. தன் முன் நிற்கும் மனிதனைத் தவிர பிற அனைத்தையும் கணக்கிடுவது, இங்கு தொலை நோக்கு , லட்சிய அடைவு, சூழல் சாதகம் ஆகியவையே முக்கியம், தன்னியல்பை மீறியது. இணைத் தேர்வு அவைகளை அடையும் ஒரு கருவி மட்டுமே. ஆகவே தூய்மை ஒரு மாற்று குறைந்தது , பயன்பாடு சார்ந்தது. இந்த சிந்தனை தான் நமது சிவில் சமூகத்தை கட்டியிருக்கிறது , அரசை, அதிகாரத்தை உருவாக்கியிருக்கிறது, அதன் நீட்டிப்பாக கருவிகளை ,விஞ்ஞானத்தை, கலை இலக்கியத்தை உருவாக்கி இருக்கிறது. ரஜோ குணம் மிக்கது. இதுவே சல்யனைத் துறந்து பலவீன பாண்டுவை குந்தி தேர்வு செய்யக் காரணமாகிறது. இது நிலைக்கும் நிலம் போன்றது.
அம்பை -பீஷ்மர். சூழலால் தடுக்கப் பட்ட தன்னியல்பு, நிலத்தால் கரையிடப்பட்ட நதி. சால்வனை துறந்து பீஷ்மனை விரும்புவது ஒரு மலைக்குடி தனம் , சத்தியமேற்பால் பீஷ்மர் மறுப்பது ஒரு சிவில் சமூகத் தனம். இரண்டும் மோதுகிறது பீஷ்மரை கலங்கச் செல்கிறது, அவரை இன்றுவரை திரும்பத் திரும்ப கானகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது, அம்பையை வேகுண்டெழ வைக்கிறது, சிகன்டியை ஆக்குகிறது.
அம்பை ஆறும் நிலமும் ஆன சதுப்பு மண், சிகண்டி ஆணும் பெண்ணும் ஆன அரவாணி. ஹஸ்தினாபுரம் நீரும் நிலம் மோதும் போர் வெளி.
கிருஷ்ணன்.