Tuesday, February 6, 2018

பானுமதியின் கண்ணீர்


கிருஷ்ணனை வரவேற்க செல்லும் பானுமதி அவரது இல்லத்தில் இருந்து அழுதபடி வெளியேறுவதோடு அதுவரை இருந்த அனைவரும் அறிந்த பானுமதி மறைகிறாள். அக்கணத்தின் பின் இருக்கும் பானுமதி துரியனுக்கானவள், அவனை ஒரு கணம் கூட கைவிடாதவள். அவனுடன் இறுதி வரை இருக்கப்போகிறவள். குந்தியை அவை நடுவே சொல்லால் துகில் உரிக்கும் சிறுமைக்குப் பிறகும் அவனுடன் இருப்பவள் அவள் மட்டுமே. அவள் அப்படித்தான் இருக்கப்போகிறாள் என்பதையும், அதன் விளைவையும் நன்றாக உணர்ந்த கணம் தான் அவள் கண்ணீர் பெருக்கிய அக்கணம். அந்த கண்ணீர் துரியனுக்காகவோ, தனது இழப்புக்காகவோ, தான் அகத்தறையில் வைத்துப் பாதுகாத்த பீலியை துறப்பதற்காகவோ எழுந்த கண்ணீர் அல்ல. அது ஒரு பேருண்மையை, அதன் இருப்பை, அதன் இன்றியமையாமையை உணர்ந்த ஒரு கணத்தின் வெளிப்பாடு. குருதியாடல், நெடுங்குருதி. தன் அத்தை தந்த பீலியை அவள் துறந்தால் மட்டுமே அல்லற்பட்டு ஆற்றாது அழுத அவள் மூதன்னை அம்பையின் கண்ணீர், அனல் வெள்ளமென தேங்கியிருக்கும் செல்வத்தை அழிக்க முடியும். அது அழிவு, பேரழிவு. ஆனால் அது சிறுமை அல்ல, வீழ்ச்சி அல்ல. துலாவின் நிகர் நிலைக்காக ஏறிய ஒரு தட்டு இறங்கியாக வேண்டும் அல்லவா!!! அதை நிகழ்த்தப்போகிறவள்களில் அவளும் ஒருத்தி.  அதை கிருஷ்ணன் முன் அவள் உணர்கிறாள்.

இதற்கு முன் இத்தகைய ஒரு அழுகை வெண்முரசில் வந்துள்ளது. அது பிரயாகையில் ஆலய வழிபாடு செய்து வரும் கன்னியான திரௌபதி இறுதியாக வந்து சேரும் கேசினி அன்னையான ராதையின் ஆலயத்தில் அவளது கூந்தல் ஐந்தாகப் பகுக்கப்பட்டு, ஊருக்கு வெளியே சதுப்பில் நின்றிருக்கும் உக்ர சண்டிகைக்கு நவகண்டம் கொடுத்துக்கொண்ட கொழுங்குருதியை அக்கூந்தலில் பூசி செய்யும் சடங்கு முடிந்தபின் தேரில் வருகையில் விடும் கண்ணீர். அதுவரை அவள் கொண்ட அனைத்து கணக்குகளும் “பசிகொண்ட மைந்தர்களை ஊட்டும் அன்னைக்கு நிகரல்ல எந்தப்பெருந்தெய்வமும்.” என்ற பாஞ்சாலத்தின் ஆதி அன்னையின் கூற்றில் முற்றழிந்து போக, பசி கொண்டு இப்பாரத வர்ஷத்தில் வளரத் துடிக்கும் புது நிலங்களுக்கான, புதுக் குலங்களுக்கான புது வேதத்தை பிறப்பிக்க தான் ஒரு கருவியாக இருக்கப் போகிறோம் என்ற ஒரு தன்னறிதல் அவளுக்குள் வந்து சென்றதன் வெளிப்பாடு அது. பல சமயங்களில் இது நமக்கும் நிகழ்ந்திருக்கும். ஒரு கணத்தில் ஒரு முழுமை நோக்கு வந்து செல்லும். பெரும்பாலும் கனவுகளில் அல்லது கணத்துக்கும் குறைவான சமயங்களில். பல தடவை அவை வார்த்தைகளாக ஆகாது. நாமே கூட கண்ணீர் வடித்திருப்போம். இந்த கண்ணீர் முடிந்த பிறகு அவள் கிருஷ்ணனைக் காண்கிறாள். இரண்டிலுமே அப்பெருந்தருணங்களைக் கடக்க கிருஷ்ணனே உதவுகிறான்.

இன்று பானுமதி தான் துரியனுடன் தான் நிற்பேன் என்று சொன்னது நீர்க்கோலத்தில் அமைச்சர் கருணாகரர் தமயந்தியிடம் கூறும்

ஆனால் எதன்பொருட்டும் கணவனை கைவிடாதவளே கற்பரசி எனப்படுவாள்” என்றார் கருணாகரர். “தெய்வங்களே அஞ்சும் பெரும்பழி சூடியவன் ஆயினும் கணவனுடன் இருந்து அவனைக் காப்பதன்பொருட்டு அப்பெண் அத்தெய்வங்களாலேயே தூயோள் என வணங்கப்படுவாள். அவளுக்கு எப்பழியும் சூழாது. அவள் அவனுக்கு அன்னையென்றே அமையக் கடன்கொண்டவள். அன்னை மைந்தனை கைவிடும் தருணம் ஒன்றை தெய்வங்கள் படைக்கவில்லை.”
அறிகதெய்வமெழுந்து வந்து பலிகொண்ட அரக்கர்களும் அசுரர்களும் இறுதிக் கணம்வரை உடனிருந்த மனையாட்டியரையே கொண்டிருந்தனர். மண்டோதரி சீதைக்கு நிகரானவள் என்கின்றன தொல்கதைகள்… பெரும்பழிகொண்ட கணவர்களைக் கொன்ற தெய்வங்கள் அவர்களை வணங்கி விண்ணேற்றிக்கொண்டன” என்றார் கருணாகரர்.

ஏனென்றால் மண்ணில் எந்த மானுடனும் முற்றிலும் துணையற்றவனாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணினர் மூதாதையர். பெண்ணுக்கு அவள் கருவிலெழும் மைந்தரின் துணை என்றும் உண்டு. தான் அளித்த முலைப்பாலாலேயே அவள் மண்ணில் வேர்கொள்வாள். நீத்தபின் விண்ணில் இடம் பெறுவாள். ஆணுக்கு பெண் இல்லையேல் இப்புவியில் ஏதுமில்லைவிண்ணேறும் வழிகளுமில்லை.”
” – என்ற வரிகளின் உதாரணம் அல்லவா. இவளுமே ஒரு மண்டோதரி அல்லவா?!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்