வெண்முரசு வாசகர்களை பொதுவாக மூன்று சாராராக பார்க்கிறேன். பாரதக்கதைக்காக வாசிப்போர். மரபை அறிய வாசிப்போர். இலக்கியம் என்று வாசிப்போர். எனக்கு வெண்முரசு பாரதக்கதை தான் என்றாலும், நான் அதை வாசிப்பது நாவலாகத்தான். நாவல் வடிவில் புதுமையாக என்ன உள்ளது என்று பார்த்து பார்த்து வாசிக்கிறேன். அவ்வகையில் தொடராக வாசிப்பதை விட மொத்த நூலாக வாசிப்பதே அந்த ஒழுங்குடன் உள்வாங்க எனக்கு சரிவருகிறது. வெண்முரசு நாவல்களை என்னால் தினம் ஒரு அத்தியாயம் என்று ஏனோ வாசிக்க முடியவில்லை. இப்படி மொத்த நாவலாக, அதுவும் கிண்டிலில், ஒரே மூச்சில் வாசிப்பது தான் எனக்கான வழி. தவிர கிண்டியில் உடனுக்குடன் குறிப்பெடுக்க முடியும். பாத்திரங்களின் பெயர்கள், இடங்கள், தகவல்கள் என. வெண்முரசு கிண்டில் யுகத்துக்கான நாவல் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது வண்ணக்கடல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து நீலம். இந்த வருட இறுதிக்குள் நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதுடன் சேர்ந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.
வெண்முரசு, குறிப்பாக மழைப்பாடல் வாசிப்பதில் மற்றோரு நன்மை அந்த வாசிப்பு அளிக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும். தாமஸ் மன்னின் "Joseph and his Brothers" நூல் ஒரு வருடமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன், எடுக்க பீதி. இப்போது வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது.
வெண்முரசு வாசிப்பது ஒரு நிகழ்த்துக்கலையை பார்க்கும் அனுபவத்தையும் அளிக்கிறது. நாவலுக்கு நாவலே வடிவத்திலும் நிகழ்வுகளிலும் உள்ள நுணுக்கங்கள், வேறுபாடுகளை கவனிப்பதில் ரசனை உள்ளவர்கள் எளிதில் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது. முதற்கனலில் வரும் படிமங்கள் எல்லாமே பாரதமே ஒரு வகையில் தரும் புராணப் படிமம். அல்லது அந்த உச்சத்தில் ஆசிரியர் வடிக்கும் படிமம். வியாசர் பறக்கும் யானையாவது அப்படி ஒன்று. மழைப்பாடலில் வரும் படிமங்கள் பொதுவாக கதை போக்கில், இயல்பாக, யதார்த்தமாக வருபவை. காந்தாரியுடன் அந்த தாலிப்பனை கொள்ளும் முடிச்சு போல. அல்லது சகுனியும் ஓநாயும். வண்ணக்கடல் காவியமாகவே விரிகிறது. ஆழ்மனக்கனவுகளாக பல வருகின்றன. இரண்டு சிறுவர்களுக்கான போர் இரண்டு வீரர்களுக்கான போரைப்போலவும், அதே போர் நான்கு சர்ப்பங்களுக்கான போராகவும், இருட்டுக்கும் ஒளிக்குமான போராகவும் வருகிறது. இப்போதிருக்கும் குதூகலமே இன்னும் பதிமூன்று நாவல்களுக்கு மேல் இன்னும் வாசிக்க இருக்கே என்பது தான்.
-
நேற்று மாத்ருபூமி இலக்கிய விழாவில் நீங்கள் பேசிய உரையை யூடியூபில் கேட்டேன். காணொளியே மொத்தம் இருபது நிமிடங்கள் தான் என்பதால் முழு உரையாடலும் கேட்கமுடியவில்லை. தனிப்பேச்சாகவே அதை உள்வாங்க முடிந்தது. முன்னமே நீங்கள் வெளியிட்டது தான். உரையாடலாக அந்த காணொலியில் வந்தப்பகுதிகள் சப்பையாகவே இருந்தன. இப்படியான உரையாடல்கள் சாத்தியமா, இவற்றால் நிகழ்வது என்ன என்றே சந்தேகம் வருகிறது.
2013-ல் அமிஷ் த்ரிபாடி என்ற ஆங்கில எழுத்தாளர் சிவனை பற்றி எழுதிய நாவல்களை முழுவதும் வாசித்து அது ஏன் எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பெரிய கடிதம் எழுதி அனுப்பினேன். ஆனந்த் நீலகண்டன் அவர்களின் அசுரா நாவலை வாசிக்கும் போதும் அப்படி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன், ஆனால் அனுப்பவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் படிக்க முடியாமல் மூடி வைத்துவிட்ட நாவல்களுக்கு அப்படி கடிதம் போடுவது அநாகரீகம் என்று தோன்றியது.
மீனாட்சி ரெட்டி மாதவனின் வலைத்தளத்தை 2005 காலகட்டத்தில் இருந்து படிக்கிறேன். அவர்கள் இதுவரை எழுதிய புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எல்லாமே அவர்களைப்போன்ற டெல்லி பெண்களை பற்றியவை. சுவாரஸ்யமாக இருக்கும். பிலிம்பேர் படிப்பது போல் படிக்கலாம். எப்போதுமே புராணக்கதைகள் இந்தியாவில் பிரபலம் தான் என்றாலும் இப்போது விசேஷப் பிரபலம். ஆகவே எல்லோரும் ஒரு புராணக்கதையை எழுதுகிறார்கள். இவர்கள் மகாபாரதப்பெண்கள் என்ற வரிசையில் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்தேன். சத்யவதியை பற்றியது. சத்யவதி யமுனை கரையில் பிறந்தவள் தான், ஆனால் அதற்கென்று அவளையும் மேற்தட்டு தில்லிப்பெண்ணாகவே மாற்றியிருக்க வேண்டாம்.
நிற்க, எனக்கு இவர்களின் நாவல்களின் அரசியல் பிரச்சனை இல்லை. அதை எழுதும் முறையே பிரச்சனையாக உள்ளது. வெண்முரசு இந்தியாவின் ஆழ்மனதை சென்று தொடுகிறது ("பண்டாரம்" என்ற சொல் உங்கள் உரையில் உள்ளது - ஆழ்மனமும் ஒரு பொக்கிஷம், ஒரு களஞ்சியம் என்று நினைத்துக்கொண்டேன்). ஆனால் இந்தியாவின் ஆழ்மனத்தில், ஆன்மாவில் வாழ்பவர்கள் யார்? அன்னைகள், தந்தையர்கள், தாதைகள். பேராசிரியர்கள். தந்தை சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகள். தீப்புகும் பெண்கள், தன்னுடைய குடுமியை பிடித்து தானே தன் தலையை வெட்டிப்படைக்கும் ஆண்கள். தங்கள் போர்களை நிகழ்த்த மகன்களை வேண்டும் அன்னைகள். குலப்பெருமை. இந்த மதிப்பீடுகளிலிருந்து இன்றைய சமூக அநீதிகள் முளைத்தெழுகின்றன என்று வாதாட முடியும். ஒரு வேளை வெண்முரசிலும் கூட இதற்கான இடம் இருக்கலாம். இதை இவர்கள் தடாலடியாக, தலைகீழாக என்றெல்லாம் எழுதாமல் நிதானமாக, ஒட்டுமொத்தமாக கவனித்துக் கதையாடி, பாத்திரங்களை அவர்களின் தனிக்குரல்களில் பேச அனுமதித்து எழுதுவார்கள் எனில் அது செழிப்பான நாவலாக அமையும் என்று தோன்றுகிறது.
சுசித்ரா ராமச்சந்திரன்