Saturday, March 24, 2018

வண்ணக்கடலும் நீலமும்



அன்புள்ள ஜெ,
 
வண்ணக்கடலும் நீலமும் வாசித்தேன். வெண்முரசு இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதால் அதன் ஒட்டுமொத்த சித்திரத்தை பற்றிய யூகங்கள், எண்ணங்களை பகிரவேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு கிடைத்த இந்த நோக்கு இதுவரை வெளிவந்த கடிதங்களில் நான் பார்த்த வரையில் கவனிக்கவில்லை என்பதால் எழுதுகிறேன். 

இது வெண்முரசில் வரும் சூதர்களை பற்றியது. சூதர்கள் பல வகைகளிலும் நவீன எழுத்தாளர்களை போலத் தோற்றமளிக்கிறார்கள். புராணமும் காவியமும் அந்த காலகட்டத்தின் எழுத்து முறை, அதை எழுதுகிறார்கள், என்றாலும் ஒரு நவீன எழுத்தாளருக்குரிய வரலாற்றுப்பார்வை வெண்முரசின் எல்லா சூதர்களிலும் காண முடிகிறது. மிகத்தொலைவில் ஒலிக்கும் வரலாற்று முரசின் அடிகளை நிலத்தில் காதை வைத்துக் கேட்பவர்கள். ஆனால் இவர்கள் வரலாற்றாசிரியர்கள் மட்டும் அல்ல. பாவலர்கள், விகடகவிகள், காவியகர்த்தாக்கள் மட்டும் அல்ல. ஒன்று, இவர்கள் எல்லோருமே மாபெரும் உளவியலாளர்களாக காட்சியளிக்கிறார்கள். வெண்முரசின் பாத்திரங்கள் எல்லாமுமே காவியப்பாத்திரங்கள். அவர்களின் சஞ்சலங்களும் குழப்பங்களும் வரலாற்று நிகழ்வுகள் மட்டும் அல்ல, உளவியல் ஊசல்களின் மாபெரும் திரைச்சாயல். அப்படி ஒரு பாத்திரம் சஞ்சக்காலப்படும் போது அங்கே சூதர் வந்து கனவையோ கதையோ உரைப்பதை அந்த சூதரின் உளவியல் அறிவின் முதிர்ச்சியாக பார்க்கிறேன். இரண்டு, இவர்கள் பெரும்பாலும் தத்துவக்கவிகள். கூர்மையான வரலாற்று நோக்கு இருந்தாலும் இவர்கள் நிகழ்வுகளை வரலாற்று காலத்தில் வைத்துப் பார்ப்பதில்லை, அலகிலா காலத்தில் வைத்தே பார்க்கிறார்கள். அவர்களுடைய நோக்கு எப்போதும் காலத்தை கடந்தே நிற்பதாக, வானைத்தாண்டி எங்கேயோ நோக்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். இந்திய வரலாரராசிரியர்கள் கிரேக்கர்களைப்போல் நிகழ் வரலாற்றை எழுதாமல் புராணங்களை ஏன் எழுதினார்கள் என்ற கேள்விக்கான பதிலாக இந்த சூதர் சித்தரிப்பைக் கண்டேன். எல்லா வகைகளிலும் இன்றைய லட்சிய எழுத்தாளர் வெண்முரசுச் சூதர்களைப்போல, வியாசனைப்போல், வரலாற்றுப்பார்வை கொண்டவனாக, ஆனால் காலத்தைக்கடந்து தன் பார்வையை நிலைநிறுத்தியவனாக; ஒரு சமூகத்தின் உளவியலாளனாக; அச்சமூகம் நாடிவரும் தத்துவக்கவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நீலத்தை பற்றி இங்கே நிறைய எழுதப்பட்டுவிட்டது. நிறையவும் பக்திப்பரவசத்தில்.  கண்ணனின், ராதையின் மதுரமான கதைக்காக, அந்த மொழியின் வீச்சுக்காக, அதன் யோகமுறை அடித்தளத்திற்க்காக நீலம் இங்கு மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும். அந்த வகைகளிலெல்லாம் நீலம் எனக்கும் பொருள்பட்டது. ஆனால் எனக்கு நீலம் முதன்மையாக ஒரு உளவியல் நூலாகவே தோற்றமளித்தது. 

நான் ஸ்கைடைவிங் செய்திருக்கிறேன். பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தின் திறந்த கதவின் முனையில் குந்திக்கொள்ளவேண்டும். யாரும் தள்ளியெல்லாம் விட மாட்டார்கள், எப்போது நமக்கு சரி, இப்போது என்று  தோன்றுகிறதோ உடனே குதிக்கலாம். இல்லை, வேண்டாம் என்று தோன்றினால் திரும்பியும் உள்ளே சென்றுவிடலாம், பாதகமில்லை. நான் ஒரு ஐந்து நிமிடமாவது அந்த கதவருகே குந்தியபடி இருந்தேன். ஒரு கணத்தில் குதித்துவிட்டேன். ஒரு முழு நிமிடம் எந்த பிடியும் இல்லாமல் விழுந்துகொண்டே இருத்தல். பின் பாராச்சூட் திறந்தவுடன் அப்படியே வேடிக்கைபார்த்தபடி மிதந்து இறங்குதல். இதுதான் மொத்த அனுபவம். 

ஆனால் பின் எப்போது யோசித்தாலும் அந்த அனுபவத்தில் பளீரென்று நினைவில் வரும் ஒரே கணம், விமான விளிம்பிலிருந்து விழும் அந்தக்கணம் மட்டும். கால் விரல்களின் ஒரு கீற்று மட்டும் இன்னும் விமானவாயில் விளிம்பை தொட்டுக்கொண்டிருக்கின்றன. மூட்டும் தலையும் கையும் உடலும் எல்லாம் விடுபட்டு வெளியே விழுந்துகொண்டே இருக்கின்றன. நினைத்தாலும் திரும்ப முடியாது, மொத்தமாக விழுவது மட்டுமே அடுத்தது. அந்தக்கணத்தின் விடுபடுதலை நீலத்தின் பல அத்தியாயங்களில் கடந்துகொண்டே இருந்தேன். தாமோதரன் உரல் இடித்து யசோதையின் மருதமரங்கள் முறிந்து சாயும் அந்த கணத்தில். நந்தன் காணவே கண்ணன் உதைத்து சகடம் அறுந்து கட்டுக்களை விட்டு விலகி உருளும் கணத்தில். அறுந்தோடிய சகடம் ஆயிரம் இதழ் கொண்ட  மலராக விரியும் கணத்தில். கம்சனின் கையில் அந்த நீலப்பறவை வந்து அமரும் கணத்தில். ஆயிரம் பீலிவிழிகள் திறந்த கணத்தில். அந்த கணங்கள் கூட அல்ல, அந்த ஒற்றை அசைவு போதும் அந்த உணர்வை கடத்த - ஒரு முறிவின் விசை, ஒரு கண் சொடுக்கு, இவ்வளவு போதும். அதை உணரும் போது எல்லாவற்றிலிருந்து விட்டு விழும் விடுபடுதலை உணர்ந்தேன். இறுகி இறுகி இளகி இளகி எல்லா இறுக்கங்களிலிருந்தும் விடுபடுதல் எவ்வளவு பெரிய நிலை. 

இந்த வாசிப்பை ஒரு உளவியல் பரிசீலனையாகவே உணர முடிந்தது. பெரிய முடிச்சுகளை கழற்றும் ஒரு உளவியல் யுக்தி.  யோகமும் ஒரு விதத்தில் ஓர் உளவியல் விதிமுறை அல்லவா என்று நினைத்துக்கொண்டேன். இதுவே இந்நாவலின் சாதனையாக நினைக்கிறேன். அதாவது யோகம் ஒரு உளவியல் முறை என்ற கருத்தை வெறுமனே சொல்லாமல், நாவலின் உள்ளடக்கத்தில் சுட்டிக்காட்டி விட்டுவிடாமல், எழுத்தில் செய்தே காட்டி விடுவது. அந்த வீச்சையே நீலத்தின் அனைத்து வாசகர்களும் உணர்ந்துள்ளனர் என்று நினைக்கிறேன்.  (இந்த உளவியலாடல் ஒரு விதத்தில் அமைந்த மற்றோரு நாவல் கொற்றவை).

நீலம் ஒரு நவீன நாவல். உலகம் முழுக்கவும் பொருள்படும். பலருக்கும் பலபொருள் கொண்டு பல்லாண்டுகாலம் இது இந்த மண்ணிலும் வெளியிலும் வாசிக்கப்படும் என்பதை பார்க்கமுடிகிறது. இந்தியா முழுவதும் நீலம் எதிரொலிக்கும், பக்தியும் ஞானமும் மாதுர்யமும் நமக்கு கண்ணனும் ராதையும் தானே? இதைத்தவிர, நாட்டார் கதைகளின் கூறு வடிவம் கொண்டு வரலாற்றை சொல்லும் நாவலாகவும், நாட்டார் கதைகளின் உளவியல் பங்கை முன்வைக்கும் ஆக்கமாகவும், நாட்டார் பாணியில் யோக நிலைகளை விளக்கும் இந்திய மரபின் நவீன வடிவாகவும் வாசிக்கப்படலாம். நாட்டார் கதைத் தன்மை, காவியத்தன்மை, நவீனத்தன்மை  எல்லாமும் நீலத்தில் உள்ளது.  நீலத்தை வாசிக்கும் மேலைநாட்டான் இதை கிறிஸ்துவுடன் பொருத்திப்பார்ப்பானென்றால் அங்கு இன்னொரு வரலாறு, நாட்டார் மரபு, உளவியல் பார்வை, தத்துவப்பார்வை எல்லாம் விரியக்கிடைக்கலாம்.

சுசித்ரா