Friday, March 30, 2018

மரணமெனும் அமுது



இனிய ஜெயம் 

பொதுவாக நள்ளிரவில் வெண் முரசு வாசித்து , தூக்கத்தை தொலைத்து ஸ்தம்பித்து கிடக்கும் வாய்ப்பு ,இன்னொரு முறை இன்றைய அத்யாயத்தால் வாய்த்தது .

குடல் புற்று நோய் .அதன் இறுதி கட்டம் . மருந்துகள் பலனளிக்காமல் ,வலியுடன் மரணம் வேண்டி காத்திருந்த நோயாளி ஒருவரை அருகிலிருந்து கண்டிருக்கிறேன் .

கொஞ்சோண்டு விஷம் குடுங்கடா என பிள்ளைகள் வசம் வலியுடன் அழுகையுடன் மந்திரம் போல அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார் .

அது விஷம் அல்ல .அவரது நிலைக்கு மீட்பளிக்கும் அமுது அது என இன்றைய அத்யாயம் புரிய வைத்தது .

// அருகருமே அமர்ந்து தியானிகனும் பிரபாவனும் வானை நோக்கிக்கொண்டிருந்தனர். அதுவரை கருமுகில்கள் மூடியிருந்த வானம் மெல்ல விரிசலிட்டு வாயில்திறக்க ஒளிபெருகி மண்ணில் படிந்தது. அதனூடாக ஒரு கரியதேர் அணுகிவந்தது. வியாதி, ஜரை, உன்மாதை, பீடை, விஸ்மிருதி, பீதி, ரோதனை என்னும் ஏழன்னையர் இழுத்த தேரில் நீண்ட செங்கூந்தல் திசைமுடிவுவரை பறக்க, ஒருகையில் தாமரை மலரும் மறுகையில் மின்படைக்கலமுமாக மிருத்யூதேவி அமர்ந்திருந்தாள். அவள் உதடுகள் குருதிகொண்டவை என சிவந்திருந்தன. கண்கள் முலையூட்டும் அன்னையுடையவை என கனிந்திருந்தன.
நிழலற்ற உருவென அருகணைந்த அன்னை தன் மின்படையால் அவர்களை தொட்டாள். அறத்தோனாகிய தியானிகனை நெற்றியிலும் துணிந்தோனாகிய பிரபாவனை நெஞ்சிலும். அவர்கள் துள்ளித்துடித்து மெல்ல அடங்க குளிர்தாமரை மலரால் அவர்களை வருடினாள். வலியடங்கி முகம்மலர்ந்து புன்னகையுடன் தாயமுதுண்டு கண்வளரும் மகவினரைப்போல் அவர்கள் உலகுநீத்தனர்.//

வரிகளை வாசிக்கவே இயல வில்லை . வழமை போல தொண்டை இறுகி ,கண்கள் கண்ணீர் பொங்க ...

பிறகென்ன உங்கள் அழைப்பின் பிறகே நிலை மீண்டேன் .

கடலூர் சீனு