Thursday, May 24, 2018

பால்வழி



இனிய ஜெயம் 

பாண்டு கங்கை அன்னையை காணும் இரவை நேற்று இரவு வாசித்தேன் .  விக்கித்து விட்டேன் . ஒட்டுமொத்த குளிர் கங்கை மேல் மிதந்தபடி ,ஒட்டுமொத்த அன்னையரின் கனலை அறிந்த கங்கர்கள் பாடும் கங்கைப் பாட்டு .

கங்கையின் மேல் மிதந்து மிதந்து வாழ்ந்த காரணமே அந்த குகன் அம்பை உள்ளே எறிந்த தீயைக் கண்டு வணங்கி அவள் ஆலயத்தில் அணுக்கனாக அவளுக்கு அருகே அமர்ந்து விட்டான் .

//
நானுமறிவேன் பொற்பரசியே, நீ அனல் கொண்ட சொல்லெறிந்து நிலம் பிளந்து மறைகின்ற் எரிவாயின் தழல் தணிக்க போதாது விண்பிளந்து நான் மண்நிறைக்கும் நீரெல்லாம். அலையடித்து அலையடித்து தவிப்பதன்றி நான் என் செய்வேன் தாயே?//

பீஷ்மனின் தவிப்பு அல்லவோ இது .

//
கண்ணீரின் ஒளியே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!
துயரத்தின் குளிரே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!
தனிமையின் விரிவே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா கங்கா!
சொல்லாத மொழியே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா!//

கங்கர்கள் கூட காண இயலாத இரவின் கங்கையை ,அவன் அன்னை கொண்ட பாதாள நதியை ,அதன் அடித்தட்டை காண்கிறான் பாண்டு .விதுரன் சொல்வது போல கொடுத்து வைத்தவன் பாண்டு .
குகர்களின் உடல்நிரை இருண்டு வருவதை பாண்டு முதலில் உணர்ந்தான். அவர்களுக்குப் பின்னால் கங்கை மேலும் மேலும் ஒளி கொண்டது. நதியின் ஆழத்திலிருந்து அந்த ஒளி பரவி வந்து அலைகளில் ததும்பியது. அலைகள் ஆழத்தை மறைக்கவில்லை. மென் காற்றால் சிலிர்க்கும் செம்பட்டுபோல. பீலித்தொடுகையிலேயே அதிரும் சருமபரப்புபோல கங்கையின் அடித்தட்டு தெரிந்தது.  

கங்கர்கள்  பாடல் வழியே சென்று பாண்டு கண்ட  அன்னையின் தரிசனம் .
மழைப்பாடலின் சிகர முனை இதுவே .

கடலூர் சீனு