Sunday, May 27, 2018

புதுவையில்...



இனிய ஜெயம் 

புதுவையில் பால்வழி மற்றும் மொழியாச்சொல் அத்தியாயங்கள் மீதான கலந்துரையாடல் ,பதினேழு பேர் வரை கூடி , எப்போதும் புதுவை கூடுகையின் வழமை போல ,வெண்முரசை விட்டு கலந்துரையாடல் எங்குமே திசை மாறாமல் , இரண்டரை மணி நேரம் செறிவாகவும் சுவாரஸ்யமாகவும் ,பல புதிய கவனங்களை அளிக்கும் தருணங்கள் நிறைந்தும் . சிறப்பாக நிகழ்ந்தேறியது .

இரு அத்தியாயங்களில் வரும் சூழல் வர்ணனை , ஓவியங்களின் அழகு , சுண்டி விட்ட நாணயம் போல ,அடுத்ததடுத்து , மேலும் கீழுமான உணர்வு நிலைகளால் ஆட்டுவிக்கப்படும் விதுரன், பாண்டுவின் வாயோரம் எதுக்களித்த தாய்ப்பால் போல எச்சில் வழியும் நிலையை கண்டு தனது கணக்குகள் அனைத்தயும் விடும் குந்தி வரை பேசி உரையாடலை துவங்கி வைத்தார் .

வனத்தில் நிழலில் மட்டுமே வளர இயலும் ,பாதுகாப்பற்ற அற்ப ஆயுள் காளான் போல வாழும் பாண்டு சித்திரம் துவங்கி ,விரல் நுனியில் ஏந்தி நடக்கும் நீர் துளி போல ,கவனத்துடன் கையாளப்படும் பாண்டுவின் உயிர் ,குதிரை போல முன்னங்கால்கள் கொண்டு நடக்கும் பாண்டு , வரைந்து பின்னர் இடதுபுறம் கீழிழுக்கப்பட்ட ஓவியம் போன்ற பாண்டுவின் உருவம் , என உவமைகள் வழியே மட்டுமே உருவாகி வரும் சித்தரிப்பு வரிசையை இரு அத்தியாயங்களில் இருந்தும் வளவ துரையன் அவர்கள் முன்வைத்தார்கள் .

பாண்டுவின் ஆசை அல்லது கனவு வழியே உருவாகி வரும் ஆறுமுகன் கதை ,அதில் தன்னியல்பாக சூரியனையே பார்க்க இயலாத பாண்டு ,சூரியனையே முதல் மகனாக கனவு காண்பது ,  திருதா  மற்றும் பாண்டு இருவருமே எப்படி வெவ்வேறு நிலையில் ஒளியை அறிய இயலாதவர்களாக இருக்கிறார்கள்  என்பது குறித்தெல்லாம் பண்ரூட்டி ராதா கிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார் .

ஹரி கிருஷ்ணன்  குந்தி  காந்தாரி இருவருக்கும் இடையில் நிகழும் தன்முனைப்பு போட்டி குறித்து  . திருதாவால் ஒரு போதும் பார்க்க இயலாத காந்தாரியின் அழகு எத்தனை தூய்மை கொண்டது என்பன போன்ற பல தருணங்களை ,  குருதி வழி  என்பதில் உள்ள அபத்தம் போன்றவற்றின் மீது கவனம் குவித்தார் .

தாமரைக்கண்ணன் பாண்டு தனது குறைபாடு காரணமாகவே ,அன்னை முதல் பீஷ்மர்  வரை தன்னை சுற்றி உள்ள அனைவரையும் எவ்வாறு கேலியும் கிண்டலுமாக அணுகுகிறார் ,பிரசவிக்க இயலாமல் சாகும் பூனையைக் கண்டு , தானும் தனது தாயும் அத்தகையவர்களே என உணர்வதின் வழியாகவே , பாண்டு தனது தாயை விடுத்து அந்த முதல் பயணத்தை மேற்கொள்கிறார்,  என்றெல்லாம் பாண்டு குறித்து புதிய வாசிப்புகளை அவர் முன்வைத்தார் .

பாண்டு படுக்கையில் இருந்து எழும்போது அவன் பார்க்கும் அம்மா யார் .கங்கை மேல் நின்று அவன்,அப்போது  அறியும் அம்மா யார் .அங்கிருந்து குந்தி எனும் அம்மாவுக்கு அவன் எவ்வாறு வந்து சேர்கிறான் என  கவர்னர் சீனு உரையாடினார் .

நான் வெண்முரசு தொடரில் பல தருணங்களில் இணைகோடாக கூடவே வரும் [அறத்தின் மூர்த்தயின் உயிரை அறம் பிழைத்தே கவர்ந்தேனா என்றே மனத்தடுமாற்றம் கொண்டு  நமன் இமைக்கணத்தில் நீலன் முன்பு வந்து நிற்கிறான் ] ராமகாதை இந்த அத்தியாயத்தில் குக படலத்தில் எவ்வாறு அறத்தின் மூர்த்தயை வரவேற்க்கயில்  உணர்வுச்சம் கொள்கிறது என்று பகிர்ந்து கொண்டேன் .

இறுதியாக  தாமரைக்கண்ணன்  குகர்கள் பாடும் ராமகாதையை சொல் அழகுடன் ,சத்தத்துடன் ஒரு முறை வாசிக்க , அந்த அழகிய உணர்வுடன் அன்றைய கூடுகை நிறைந்தது .

பிழை திருத்தி ,திருத்தி அதன் பொருட்டே வெண்முரசின் வாசிப்பு இன்பத்தை இழந்திருந்த கவர்னர் சீனிவாசன் .இந்த கூடுகையின் பொருட்டு,முதன் முறையாக , இந்த இரு அத்தியாயங்களையும் ஒரு வாசகனாக மட்டும் நின்று   வாசித்து இந்த கூடுகளில் பெரும் பரவசத்துடன் கலந்து கொண்டார் .

எப்போதும் எழும் கிண்டல் கேலி ஒன்று உண்டு ,இந்த வேகத்துல வெண்முரசு கலந்துரையாடல் போனா ,அது வெண் முரசை முழுசா முடிக்க இருபத்து அஞ்சு வருஷம் ஆகுமே .என்பதே அது .

ஆனால் இந்த இரு அத்தியாயங்களை மட்டுமே கவனம் கொண்டால் ,பாண்டு அம்பாலிகையை விட்டு சென்று ,குந்தியுடன் தனது அறைக்குள் திரும்பும் நாளுக்குள் அத்தனை உணர்வுகள் ,எத்தனை கணக்குகள் ,எத்தனை நாடகங்கள் , ஒரு ஆயுள் கடந்தது போன்றதொரு உணர்வு.

உண்மையில் வெண்முரசு கோரும் நியாயமான உரையாடல் மற்றும்  வாசிப்பு இதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றனர் சீனிவாசன் சுதா தம்பதியர் . 

நண்பர்கள் கூட ,இலக்கியமும் ,தீனியுமான மற்றொரு உவகை நாள்  இனிதே கனவுக்குள் சென்று நிலைத்து விட்டது . 

கடலூர் சீனு