Friday, May 11, 2018

வானாகும் பறவை



அன்புநிறை ஜெ,

ஊட்டி காவிய முகாம் நினைவுகளில் இருந்து இன்னும் மீளவில்லை.
நான்கு நாட்களின் வெண்முரசு வாசிப்பை நேற்றிரவு எட்டிப் பிடித்தேன். 

இன்றைய இமைக்கணத்தில் (இமைக்கணம் 46) சத்வ, ரஜோ, தமோ குணங்களுக்கு எவ்வளவு அழகான சொற்காட்சி: நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்பு!!


//அது ஒவ்வொரு மானுடருக்குள்ளும் பறவைக்குள் வானமென பொறிக்கப்பட்டுள்ளது. முனிவரே, ஒவ்வொரு பறவையையும் காடு நூறாயிரம்கோடி கைகளால் பற்றியிருக்கிறது. எழுவதெல்லாம் மீள்வதற்கே என்னும் இச்சுழலில் எந்தப்பறவையும் மெய்யாகவே பறப்பதில்லை. மீண்டும் உடலணையும் எச்சிறகும் வானத்தை முழுதறிவதில்லை. மண்மீளா பறவை ஒன்று உண்டு. வானாகி வானை அறிவது. அப்பறவை அறியும் வானமே பறவையென வந்தது.//

ஒவ்வொரு மானுடருக்குள்ளும் மெய்ப்பெருநிலை பறவைக்குள் வானமெனப் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மானுடரையும் விழைவுகளும், பற்றுக்களும், அறிதல்களுமே கூட, காடு பறவையை என நூறாயிரம் கரங்களால் பற்றியிருக்கின்றன. அறிவெனத் தனித்திருக்கும் எவ்வறிதலாலும் மெய்ப்பெருநிலையை முழுதனைய வழியில்லை - மீண்டும் உடலணையும் எச்சிறகும் வானத்தை முழுதறிவதில்லை என்பது குறிப்பது. 

வானாகி வானை அறியும் மண்மீளா பறவையொன்று. அப்பறவை அறியும் வானமே பறவையென வந்தது - மெய்நிலையென்றாகி மெய்மையை அறியும் மண் கடந்தமையும் மானுடன் ஒருவன். அவன் உருக்கொண்டே அது இப்புவிக்கு வந்தது. இது சுகனா கிருஷ்ணனா?

மிக்க அன்புடன்,
சுபா