அன்பு ஜெயமோகன்,
ஈரோட்டில் உங்களையும், நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
வெண்முரசு கூட்டுவாசிப்பு கூட்டங்களில் நான் கலந்து கொண்டவன் இல்லை; இதுவே முதல் முறை.
சனி நிகழ்வுகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஞாயிறு அன்றுதான் கலந்து கொண்டேன். உடன் நண்பர் கி.ச.திலீபனும் வந்திருந்தார். ஓலைச்சுவடி எனும் சிறுபத்திரிக்கை ஆசிரியர், தீவிரமான இலக்கிய வாசிப்பாளர், எங்கள் ஊர்க்காரர்; உங்களின் அறம் வெளியீட்டு நிகழ்வில்(2011) அறிமுகமானவர்.
ஞாயிறு அன்று நாங்கள் வரும்போது அந்தியூர் மணி பேசிக்கொண்டிருந்தார். வெண்முரசு நினைவூட்டும் அல்லது வெண்முரசில் அவர் கண்டதாகக் கருதிய பழைய பிரதிகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். இடையிடையே அவரைக் குறுக்கும் நெடுக்குமாக நண்பர்கள் ’திகைக்க’ச் செய்து கொண்டிருந்தனர். ஒருவழியாய் அந்தியூர் மணி முடிக்க, தொடர்ந்து பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனின் பகிர்தல். கூட்டு வாசிப்பில் கிடைத்த அனுபவங்களைக் குறித்து அவர் பேசினார். இரண்டு உரைகளுமே வெண்முரசு நாவல்கள் பற்றியதான வாசிப்பு அனுபவமாக இருக்க.. நீலம் மலர்ந்த நாட்கள் குறித்து வேணு பேசியது கொஞ்சம் நுட்பமானதாயும், கவனிக்க வேண்டியதாயும் இருந்தது.
ஒரு மனிதனின் இயல்பு மனநிலை துவங்கி அதிஉச்ச பித்துநிலை வரையிலான நிலைகளை எடுத்துச் சொல்வதற்குள் அவர் கொஞ்சம் தடுமாறித்தான் போனார். என்றாலும், முடிந்தவரை பித்து நிலை குறித்த தெளிவை விளங்கிக்கொள்ள எங்களைத் தூண்டியதில் வெற்றி பெற்றார் என்றுதான் நினைக்கிறேன்.
இயல்பு மனநிலை முதற்கொண்டு அதிஉச்ச பித்த நிலை வரையிலான நான்கு நிலைகளை நான் புரிந்து கொண்ட வகையில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கான சுயத்தை நான்கு சுயங்களாகப் பகுத்துக் கொள்வோம்.
முதலாவது சுயம் > சமூக சுயம்(முழுக்க முழுக்க புறவயமான சமூகத்தால் அளிக்கப்பட்டிருக்கும் சுயம்). சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான மனிதர்கள் இச்சுயத்தில்தான் வாழ்கின்றனர்; இச்சுயத்தைத் தாண்டவும் அவர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்டவைதான் ஒரு மனிதனின் வாழ்வு என்பதான கருத்தையே(காட்டாக) சமூகசுயம் என்று நான் குறிப்பிடுகிறேன். பொதுப்புத்தி என்று நாம் சொல்வதும் பெரும்பாலும் சமூகசுயத்தைத்தான். அதைத்தாண்டி எதுவும் இல்லை என்பதான நிலைப்பாடும் சமூகசுயத்தில் உண்டு.
இரண்டாவது சுயம் > சமூக சுயம் + தனக்கான சுயம்(புறவயமான சுயத்தை குறித்த தன்னளவிலான புரிதலும் இங்கு அவசியமாகிறது). இச்சுயத்தை முந்தைய சுயத்தின் நீட்சியாகக் கொள்ளலாம். ஒரு தனிமனிதனின் மனநிலையிலிருந்து வாழ்வைப் புரிந்து கொள்ள எத்தனிப்பது இங்கு முக்கியம். பொதுப்புத்தியை தன்புத்தி கொண்டு நோக்குவதாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம்.
மூன்றாவது சுயம் > தனக்கான சுயம்(அகத்தின் பங்கு அதிகமாயும், புறத்தின் பங்கு குறைவாயும் கொண்ட சுயம்) இச்சுயம் சமூக சுயத்தைத் தன்னிலிருக்கும் அகவுணர்வைக் கொண்டு.. பொதுப்புத்தியைத் திகைக்க வைக்கும் துணிச்சலைப் பெறுகிறது. பொதுப்புத்தி கட்டமைத்திருக்கும் சட்டகங்களை விதிர்விதிர்க்கச் செய்யும்படியான தன்மை கொண்டது மூன்றாவது சுயம். இச்சுயத்தில் இருக்கும் ஒருவரையே பித்தில் இருப்பதாகச் சொல்கிறோம். இந்நிலையில் இருக்கும் ஒருவருக்கு அவர் மட்டுமே உலகம்; அவ்வுலகத்தை மட்டுமே அவர் நம்புவார். அதில் மட்டுமே வாழவும் செய்வார்.
நான்காவது சுயம் > சுயம் மறந்து அல்லது மறைந்து போன நிலை(முழுக்க முழுக்க அகவயமான சுயம்). சமூகம் மற்றும் தான் அளித்திருக்கும் சுயம் மறந்து போன நிலை; முழுக்க முழுக்க அதிஉச்ச பித்துநிலை. அத்வைத நிலை. உலகமும், நானும் இரண்டாக அல்லது பிளவுகளாகத் தெரியாத நிலை. இச்சுயம் கால வெளி கடந்திருப்பதும், கால வெளிக்குட்பட்டதும் கோர்க்கப்பட்டிருக்கும் சங்கிலி ஒன்றின் கண்ணியின் நிலை. இந்நிலையைப் பக்தி மார்க்கத்தில் அனுபூதி என்று சொல்லலாம். ”ஆசா நிகளம் துகளாயின் பின் / பேசா அனுபூதி பிறந்ததுவே” என்பது அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி வாக்கு. கந்தர் அனுபூதியே அருணகிரியின் நான்காவது சுயத்தில் பிறந்ததுதான் என நான் நம்புகிறேன். ஆன்மீகத்தில் இருப்பவருக்குத்தான் இந்நிலை வாய்க்கும் என்றில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். பயிற்சிகளால் ஒருபோதும் இந்நிலையை அடையவே இயலாது.
நான்கு நிலைகளையும் எளிதில் விளங்கிக்கொள்ளத் தூண்டுவதற்காய் சிறு உதாரணம் ஒன்றைத் தரலாம் எனக் கருதுகிறேன். ஒரு கடலை எடுத்துக் கொள்வோம். கடலைப் பற்றி சமூகம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் வடிவமே முதல் சுயம். சமூகம் சொல்லி இருக்கும் வடிவோடு தன் வடிவையும் இணைத்து கடலைத் தெரிந்து கொள்ளல் இரண்டாவது சுயம். சமூகம் சொன்ன வடிவிலிருந்து நகர்ந்து தனக்கான வடிவில் கடலைக் காண்பது மூன்றாவது சுயம். கடல் மட்டுமே இருக்கும்படியான நிலையை உணர்வதே நான்காவது சுயம். முதல் மூன்று சுயங்களில் இருமை இருக்கும்; கடைசியான சுயத்தில் இருமை இருக்காது. இருமை என்றாலே இரண்டு என்று புரிந்து கொள்கிறோம்; உண்மையில், இருமை என்றால் இரண்டாகத் தெரிவது என்பதாகத்தான் பொருள் கொள்ளல் வேண்டும். த்வைதம் என்றால் இரண்டாகத் தெரிவது; அத்வைதம் என்றால் இரண்டாகத் தெரிவதைக் கடந்ததற்கு அல்லது இரண்டாகத் தெரிவதற்கு அடிப்படையானது.
இப்போதைக்கு, இவை போதும் என நினைக்கிறேன்.
உயிர் நலத்தை விரும்பும்,
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்