Friday, April 19, 2019

இருட்கனியின் 6-ம் அத்தியாயம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனியின் 6-ம் அத்தியாயம் வாசித்தபின் இதை எழுதுகிறேன்.  தமது பேராசையாலும் அறமின்மையாலும் கர்ணனை தமது அரசியல் விளையாட்டிற்கு பலி கொண்ட குந்திக்கும் துரியோதனனுக்கும் அப்பால் கொடையால் மக்கள் தாம் அறிந்து கொண்ட பெரும் கர்ணனை, கொடையின் குறியீடு ஆகிவிட்ட கர்ணனை பிரித்துக் காட்டுகிறது இருட்கனி.  உண்மையில் அதுதான் அவனுக்கு செய்யப்படும் நியாயமும் கூட.  குந்தியும் துரியோதனனும் கர்ணன் பொருட்டு கொள்ளும் துயரில் அவர்களின் குற்றவுணர்சி இருப்பதுபோல் அரசியலுக்கு அப்பாலுள்ள பிறர் அவன் பொருட்டு கொள்ளும் துயரில் குற்றவுணர்சி இல்லை, பெரும் வள்ளலின் மீது கொள்ளும் பேரன்பு மட்டுமே உள்ளது.  இது என்னை மிகவும் பாஸிடிவாக உணரச்செய்கிறது.  அரசியல் விளையாட்டில் இருந்து பிரித்துக் காட்டப்படுவதிலேயே அவனது நிஜம் இருக்கிறது.  கர்ணன் என்றால் கொடை. கொடை எங்கெல்லாம் திகழ்கிறதோ அங்கெல்லாம் அவன் இருக்கிறான.  ஒவ்வொரு வள்ளலிலும் அவன் எழுவான்.

நான் இயேசுவை எண்ணுகிறேன்.  அன்பின், தியாகத்தின், மன்னித்தலின் குறியீடாக அவர் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  அத்தன்மைகள் கொண்டவர் அனைவரும் அவர் என்று கொள்ளப்பட வேண்டும்.  அவர் காலத்தில் அவருக்கு பிழை செய்தவர்கள், அரசியலாடியவர்கள் ”நம்மால் தான், நம் பாவங்களுக்காக தான் அவர் மரித்தார்” என்று குற்றவுணர்சியுடன் சொல்வதில் நியாயம் உண்டு.  ஆனால் ஒரு பாவம் செய்திராமல் அவர் மீது கள்ளமற்ற அன்பு கொண்டிருந்த எளிய மக்கள் அவர் பொருட்டு சிந்திய கண்ணீரில் குற்றவுணர்சி இருக்க நியாயம் இல்லை.  பின்னர் மதத்தின் மைய அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் தமக்கு முன்னர் இருந்த மத அமைப்புகளின் வீழ்ச்சியை அவதானித்து தம் அதிகாரம் வீழ்ச்சி அடையாதிருக்க உருவாக்கியதே ”நம் பாவங்களுக்காக அவர் மரித்தார்” என்று குற்றவுணர்சி புகுத்தும் உத்தி என்று எண்ணுகிறேன்.  இல்லாவி்ட்டால் அவர் அன்பின், தியாகத்தின், மன்னித்தலின் குறியீடாக ஆகிவிடுவாறே.

”நான் எந்த பாவமும் செய்யவில்லை.  என் பாவங்களுக்காக அவர் மரிக்கவும் இல்லை” என்று சொல்லியே இயேசுவைத் தொழவும் விசுவாசமாக (உண்மையிலேயே அதுதான் அவருக்கு விசுவாசமாக இருப்பதும் கூட) இருக்கவும் முடியுமே?

ஆனால் இங்கு அவர் பேரால் வலியுறுத்தப்படும் விசுவாசம் உண்மையில் யாருக்கானது? ”மேன் ஆப் காட்” எனப்படும் எவரிடமேனும் ”குற்றவுணர்ச்சி” தீட்சை பெறாமல் இயேசுவை பெற இலக்கியவாதிகள், வாசகர் அல்லாத எவராலேனும் இயலுமா?

நல்லவேளை இங்கே இது உங்கள் கிருஷ்ணன் அல்ல என் கிருஷ்ணன் இளைய யாதவன், உங்கள் சிவன் அல்ல ஆதியோகி என் சிவன் என்று கூறமுடியும்.


அன்புடன்,
விக்ரம்,
கோவை.