Thursday, April 4, 2019

யமனிடம்...



அன்புள்ள ஜெயமோகன் சார் ,

இமைக்கணத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் ,யமனிடம்  நைமிஷாரண்யத்தில்  கிருஷ்ணன் தனித்து தனக்குள் சொல்திரட்டி அங்கே இருக்கிறான் என வேளன்  கூறுகிறான்.  இதற்காகவே ஒரு யுகம் காத்திருந்த எமன்  கடைசி நேரத்தில் தனது வினாக்கள் எதுவும் சொல்லாகாமல் இருக்க  கொஞ்சம் பீதியாகி சாக்குபோக்காக "ஒரு யுகம் முழுமையும் நான் வினாக்களுடன் இருந்தேன். சொல்லிச்சொல்லி திரட்டி வைத்திருந்தேன். இப்போது என் உள்ளம் ஒழிந்துகிடக்கிறது .நான் அவனை பார்க்கையில் இன்று கேட்பதற்கேதுமில்லை” என கூறுகிறானே ஏன்?  மூத்த பாண்டவரும் இப்படி பல இடங்களில் குழப்பத்தில் ஆழ்வதை வெண்முரசு கூறுகிறது. அவனது குழப்பத்திற்கு பதிலாய் "“வாழ்ந்த வாழ்வை விழிப்புக்குள் நிகழ்வுகளெனத் தொகுக்கிறது மானுட உள்ளம். நிகழ்வுகளை நினைவுகளாக்குகிறது கனவு. ஆழ்நிலையில் நினைவுகள் குறிகளாகின்றன. குறிகள் செறிந்து மாத்திரைகளாகி துரியத்தில் உள்ளன. இப்புவியில் இன்று இளைய யாதவனைக் காணும் பெருவிழைவுடன் தவித்தும் தயங்கியும் இருக்கும் எவரையேனும் தெரிவுசெய்க! அவனுள் புகுந்து இமைக்கணம் வாழ்ந்து எழுக" என நாரதர் கூற கர்ணனை கண்டுகொண்டு அவனுக்குள் புகுந்து கிருஷ்ணரை சந்திக்க வருகிறார்  கர்ணன் ரூபத்தில் இருக்கும் எமன். 

கிருஷ்ணரிடம் கர்ணன் .....நமது வாழ்வில் நாம சந்திக்க பிரியப்படும்,ஆனால் அவர்களை  பார்த்தவுடன் வரும் எரிச்சலில் கூறும் வார்த்தைகள் போலவே கர்ணன் இளைய யாதவரிடம் " நான் விருந்துலாம் சாப்பிட வரல, எனக்கொரு சந்தேகம் அத கேட்டுட்டு போகத்தான் வந்தேன்" என கூறுகிறான். அப்போது இளைய யாதவர் என்ன எண்ணியிருப்பார் ? " உன்னையலாம் ........என்றுதானே தோணியிருக்கும்,புன்னகையுடன் " சொல்லு..என்ன சந்தேகம் ? என கேட்கிறார். கர்ணன் " உள்ளிருந்து ஊறி வளரும் நஞ்சு என்னை எரிக்கிறது. நான் கொண்ட நல்லியல்புகள், தேறியதிறன்கள், கற்றறிந்த மெய்மைகள் அனைத்தையும் அது அழித்துக்கொண்டிருக்கிறது. மீட்பென்று ஏதேனும் இருந்தால் அது உங்களிடமே என்று தோன்றியது”  என தனது மீட்புக்கு என்ன வழி என கேட்கிறான். முதலில் கர்ணனுக்கு எல்லாமே நன்றாகத்தானே இருக்கிறது. குடும்பம் ,குழந்தைகள், நண்பர்கள் , அரசு எல்லாமே இருக்கிறது. அதில் குறைபாடுகள் இருக்கிறது ...அப்படி பார்த்தால் யாருக்குதான் குறைபாடு இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கிறது. இளைய யாதவருக்கு கூட பிறப்பில்  கிடைக்கவில்லை .  இப்போது தோன்றுவது ......ஏன் இளைய யாதவர் பிறக்கும் முன் ஏழு பேர் பிறந்து கொல்லபடுகிறார்கள் ? அவற்றின் அர்த்தம் என்ன ? அந்த உயிர்கள் என்ன ? கம்சன் போன்ற அரக்ககுணம் கொண்ட யாதவன் தோன்றினான் ?  அதே போல் பீஷ்மர் பிறக்கும் முன்னும் அவரது தாயாலே கொல்லப்படும் உயிர்கள் குறித்து போர்களத்தில் வருகிறது .....அதன் பெயர்களையும் அர்த்தங்களையும் கொண்டு இனி அவரோடு இணைத்து தேடவேண்டும் .  ஆனாலும் எதோ ஒரு நச்சு ஊறிக்கொண்டே இருக்கிறது... எப்போது அவனுக்குள் அது சுரக்க ஆரம்பித்து இருக்கும் ?         

கிருஷ்ணர் காரணரிடம் "மீட்பென்பது தன்னிடமே என சொல்கின்றன வேதமுடிபின் நூல்கள். தானென்றுணர்தலே மெய்மையிலமர்தல். அதன்பொருட்டு கணந்தோறும் வாயில்களை தட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. திறக்கும் கணமும் வாயிலும் ஒருங்கமையும் என்றால் மீட்பு நிகழ்கிறது  என்று வேதமுடிபு கொள்கை என கூறுகிறார்.  எது உனக்கு துயர் அளிக்கிறது என முதலில் உனக்கு தெரிவதுதான் முதல் அடிவைப்பு என்கிறார்.  ஜெயமோகன் சார் இந்த அத்தியாத்தின் இரு தரிசனங்களாக தெரிவது : 1.“அன்பை நாடி , அடைக்கலம் கோரி , சினத்தை மூட்ட , பொறாமையை கிளப்ப , வஞ்சம் தீர்க்க , பிழையை மறைக்க ,பொறுப்பைத்துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே என இளைய யாதவர் கூறுகிறார் ... படிக்கும்போது நெஞ்சில் சம்மட்டி கொண்டு அடிக்கும் வார்த்தைகள் ...ஏன் என்றால் எனது மொத்த வாழ்நாளும் இதுதான்... இவ்வளவுதான் , அனைவருக்கும் அப்படிதானா?  இப்படி இல்லாமல் வேறு எப்படி வாழ்வது ? ....எது பண்ணினாலும் இதற்குள் தானே இருக்கிறது . ......2. ஆனால் அதற்க்கு விடையாய் அடுத்த பத்தி வருகிறது:  அந்த இரு துயர்களையும் வெல்லும் ஒரே வழி  முரண்கொள்ளாதிருத்தல் அமைந்திருத்தல் , வழிபடுதல் என இருக்கிறது .மேலும்  " ஒவ்வொரு உயிரின் உடலிலும் அவற்றின் நெறியும் இயல்பும் வடிவமென்றும் வழக்கமென்றும் பொறிக்கப்பட்டுள்ளது. மான் தாவலாம், பசு தாவலாகாது. குரங்கு மரமேறலாம் நாய் நிலம்விட்டெழலாகாது. அவ்வியற்கையில் அமைகையில் அவை துயர்களை வெல்கின்றன. அவற்றை ஆக்கிய விசை அள்ளிக்கொண்டுசெல்லும் திசையை விரைந்து சென்றடைகின்றன. அவை செய்யக்கூடுவது அது மட்டுமே.” என்கிறார்.... இதுதான் அமைந்திருத்தலா ? அது எப்படி அப்படியே இருக்கமுடியும் , முரண்கொள்லாமல் எப்டி வாழ்வது ? யாரை ...எதை வழிபடுவது.... ஏன் என்றால் முதலில் இந்த உலக  வாழ்வில் சந்தோஷமாய் இருக்க இப்படி செய்யவேண்டும் என மனதுக்கு தெரிகிறது...ஆனால் அது  உலகின் செயலில் அடுத்த நொடி தாவுகிறது, முரண் கொள்கிறது, எதையும் யாரையும் ஆணவமாய் எடுத்து எறிகிறதே  ஏன்? ...." அமைந்திருத்தல், முரண்கொள்ளாதிருத்தல் , வழிபடுதல் " ...ஓராயிரம் முறை சொன்னாலும் மண்டைக்கும் இதயத்துக்கும் இனி ஏறி வாழ்நாள் முழுதும் வருமா ? .......அப்படி வர என்னசெய்யவேண்டும் ?  . கர்ணன் கடுப்பாய் "என்முன் கல்லென மண்ணென கைக்கும் கண்ணுக்கும் சிக்குவதாக நின்றுள்ளது என் துயர்… பிறிதொன்றால் அதை மறைக்கவியலாது. உங்கள் அணிச்சொற்கள் ஆயிரம்பெய்தாலும் அதை கரைக்கவும் முடியாது.” இதுக்கு என்ன பண்ண வழி சொல்லு என கிருஷ்ணரிடம் கேட்க அவர் மீண்டும் ' உன் துயர் தான் என்னபா ? என கேட்கிறார். இந்த நிமிடத்தில் நன்றாக எண்ணினால் " ஒரு  எழவும் இல்ல.. ஆனால் துயராக இருக்கிறது " என்பதுதான் எனது பதில் ...எவ்வளவு பொருந்துகிறது "  அமைந்திருத்தல், முரண்கொள்ளாதிருத்தல் , வழிபடுதல் "  என்னும் கிருஷ்ணனின் வாரத்தைகள்.கர்ணனின் துயராக இருப்பதாய் அவன் கூறுவது " குலம், சிறுமை ,இழிவு  என கூறி "நீங்கள் படைநடத்துபவர், நாடுசுற்றியவர், நான்காம் குலத்தவர். நீங்களும் அறிந்ததில்லையா இந்த அணிச்சொற்களின் பயனின்மையை? என கேட்கும் போது "என்னது "? என மனம் அலறுகிறது.  ஆனால் அசால்ட்டாக அதை எல்லாம் ஒற்றை விரலால் தள்ளி " நீ இன்னும் உன் துயரை சொல்லவில்லை " என கேட்கிறார்...அப்போ இளைய யாதவருக்கு எதோ தெரிந்திருக்கிறது. "இதுலாம் ஒருத்தன் உன் மேல போர்த்திவிட்டது ..அத நம்பிட்டு அதுல உழண்டுட்டு கிடந்தனா அது உன் தப்பு ... என் லைப்பை பார்த்தல " விதுரன், பீஷ்மன், ஜராசந்தன், சிசுபாலன், உன் நண்பன் , கண்தெரியாத அந்த பேரரசன் , எல்லா அரசிகள் , பெண்கள் ,எல்லா அந்தண ,ஷத்ரியர்கள் .....எல்லாருக்கும் பயமும் இருக்கு ,வெறுப்பும் இருக்கு ,அன்பும் இருக்கு [ அமைந்திருத்தல், முரண்கொள்ளாதிருத்தல் , வழிபடுதல் கச்சிதமாய் இளைய யாவருக்கு பொருந்துகிறது] ....ஏன்? ,,,இதுலாம் சப்பை மேட்டர் ,ஒண்ணுமே இல்லை ...நீ உன் துயரை சொல்லு" என கேட்பதுபோலவே எனக்கு படுகிறது சார். 

இப்போதுதான் கர்ணன் புரிந்து " ஓ ..இது மேட்டர் இல்லையா ...அப்போ என்ன ? என தேடி இளைய யாதவரிடம் உம்மிடம் நான் கேட்கவிழைவது இதுவே. சொல்க, உமக்கு முன்னர் இங்கு மெய்ஞானிகள் வந்ததில்லையா? இனி மெய்ஞானிகள் வரப்போவதுமில்லையா? “இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள். யாதவரே, என்றும் வெல்வது நாணமற்ற, தற்குழப்பங்களற்ற, இரக்கமற்ற, வெல்லும்விழைவின் விசை மட்டுமே. “இதோ அறமும் மறமும் முயங்கித்திரிந்திருக்கின்றன. நல்லோரும் நல்லோருக்கு எதிராக வில்லெடுத்து நின்றிருக்கிறார்கள். தன்னை மிஞ்சிய ஆற்றலால் எதிர்க்கப்பட்டால் புல்லோர் போலவே நல்லோரும் குருதிசிந்திச் செத்துவிழுவார்கள். வெல்வது அறமோ மறமோ அல்ல, ஆற்றல் மட்டுமே. ஆற்றல்கொண்டதை அண்டிவாழ்வதையன்றி வேதம் இன்றுவரை எதை இயற்றியிருக்கிறது? இப்புவியில் என்றேனும் அறம் நின்ற வாழ்க்கை நிகழ்ந்துள்ளதா? இறுதிக்கணம் வரை அஞ்சாமல்,ஐயுறாமல் அடிபணிந்திருக்கவேண்டும்,தனக்கு அளிக்கப்பட்ட நுகங்களை விரும்பி இழுக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே நீங்கள் சொல் கூறுகிறீர்கள். மேலும் கர்ணன் : ”மானுடனுக்கு நீங்கள் அறம் என்ற ஒன்றை கற்பித்துவிட்டீர்கள். அது இறைவடிவென்று நம்பவைத்தீர்கள். மக்கள் அவற்றை நம்புகிறார்கள். தன்னைச்சூழ்ந்துள்ள வாழ்க்கையில் ஒரு தருணத்தில்கூட அவை பொருள்கொள்ளவில்லை என்றாலும் அவர்களால் அதை நம்பாமலிருக்க இயலாது. நாகபடத்தின் நிழலில் வாழும் சிதல்கூடு. நம்பினாலன்றி அன்றாடக் களியாட்டுகள் இல்லை, உறவுகளும் கனவுகளும் இல்லை. யாதவரே, எளியவன் மானுடன். அளியன், சிறியன், அறிவிலான். காலந்தோறும் அவன் கைவிடப்படுகிறான். மீண்டும் மீண்டும் கொன்றுகுவிக்கப்படுகிறான். நசுக்கி அழிக்கப்படுகிறான். மண்ணோடு மண்ணென ஆகி மறக்கப்படுகிறான். அவன் விடுத்த விழிநீர் அவன் அழிவதற்குள் காய்ந்து எட்டுபுறமும் திறந்து விரிந்த இருண்ட கடுவெளியில் மறைகிறது”“அதை எந்தப் பேரறமும் இதுவரை கண்டதில்லை. அதன்பொருட்டு எந்தத் தெய்வமும் இறங்கி வந்ததுமில்லை. ஆம், இது ஒன்றே உண்மை என கூறி இது வினா அல்ல இதுவிடை நான் கிளம்புகிறேன் என கூற கிருஷ்ணர் " அவ்வளவு தெளிவு இருந்தால் ...உங்களுக்கான மெய்மை இதுதான் என்றால் ...நீங்கள் சென்று இந்த மெய்மைக்கு ஆற்றல் கொண்டு போரிட்டு வாழுங்கள் என கூறுகிறார்.   கர்ணன் இருட்டில் இறங்கி செல்கிறான். இந்த நொடியிலும் இதே கேள்வியை ,உலக அதிகாரத்தில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் பேரிடம் கேட்க முடியும் அல்லவா? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்