Monday, April 1, 2019

இமைக்கணத்தின் மூன்றாவது அத்தியாயம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இமைக்கணத்தின் மூன்றாவது அத்தியாயம் ராமனின் மரணத்திற்காய் பரிதவித்து ஏங்கும் யமன் காத்திருப்பதை பற்றி கூறினாலும் இன்னொரு பக்கம் ராமனின் தொடர்ச்சியாய் சொல் இருக்கிறது என்றும் அது ஒருவனின் வாயில் இருந்து எழுவது வரை காத்திருக்க முடிவு செய்வது பற்றியும் கூறுகிறது. திரேதா யுகம் ராமனின் வடிவில் கூறியது என்ன என்று தெரியாமல் கலியுகத்தில் நுழையவே முடியாது என்று நினைக்கிறேன். கடமையை செய்யத்தவறி தவம் இருக்கும் எமனிடம் நாரதர் கூறுகிறார்"“கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே” என்று.  கடமை இருக்கிறது என நினைக்கிறவன் உண்மையிலே தவம் அது இது என்று செல்லவே கூடாது போலும். காலத்திற்கு இறைவன் என்பதே ஒரு பெரிய விஷயமாய் தோன்றுகிறது. உலகம் தோன்றியது முதல் இங்கு நிற்பது என்ன ? ஏன் நிற்கிறது ? என்று எண்ணினாலே பெரிய விஷயங்களை புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இயற்கையும்,காலமும்,முதல் அறிதலில் இருந்து இந்த நொடி வரை உள்ள அறிதல்கள் தவிர வேற ஒன்றுமே இல்லை என நினைத்தால் திகில் அடிக்கிறது.  அதற்கு தான் "கடமையை செய் , வாழ்ந்து விடு " என கூறுகிறார்கள் என நினைக்கிறேன். 

பிரம்மன் தனது மகனாகிய எமனிடம் "பல்லாயிரம்கோடி முகமும் வடிவும் கொண்டு நிறைந்திருக்கும் மாயையில் தன்னை மறந்துவிட்டார். செயல்விளைவின், இன்பதுன்பத்தின், நன்றுதீதின் முடிவிலாச் சுழலில் சிக்கியிருக்கிறார். அவர் விண்மீளும் நாள் வந்துவிட்டது. சென்று அழைத்துவருக!” என ராமனை எம உலகத்திற்கு அழைத்து வர ஆணையிட  எமன்  திகைத்து “உலகங்களை ஆளும் முதற்பெருந்தெய்வத்திற்கே இறப்பாணையுடன் செல்வதா? என்ன சொல்கிறீர்கள்?” என கேட்க  “எவராக இருப்பினும் அது உன் கடமை” என்கிறார்.  ஜெயமோகன் சார், இது எனக்கு மிகவும் புதியது.... ஒரு வேதத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இதுதான் இறுதி என கூறும் ஆபிரகாமிய மதங்களுக்கு நேர் எதிர். உலகம் மாற மாற புது புது வேதங்கள் தோன்றும். அதற்காய் வருபவர்கள்  தெய்வங்கள்...."சச்சின் டெண்டுல்கர் " வடிவில் கூட பிள்ளையாரை செய்ய இந்து மரபு அனுமதிக்கிறது என்பதற்கு அதன் அடித்தட்டு உண்மையை ஆதிவேதம் எழுதியவன் எங்கேயோ உணர்ந்திருப்பான் போல. 
 
நைமிஷாரண்யத்தில் தளைகளில் சிக்கிக்கிடக்கும் ராமனிடம் நாரதர் வந்து "“ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டிருப்பதனாலேயே புடவிச்செயல் முடிவிலாது நிகழ்கிறது. முடிவிலாதொழுகுவதன் துளியென்பதே ஒவ்வொன்றும் கொண்டுள்ள பொருள். தான் கொண்ட பொருள் தன்னில் தொடங்கி தன்னில் முடிவடையவில்லை என்னும் விடுதலையில் திளைத்து அமர்ந்திருப்பவை இங்கிருக்கும் அனைத்தும். அரசே, முடிவிலாது நிகழும்பொருட்டே ஒவ்வொன்றும் இங்கே வடிவமைக்கப்பட்டிருக்கிறது” “ஆகவே எக்கணத்திலும் வாழ்க்கை முடிவுற்ற நிலையில் இருக்கவியலாது. இங்கு எதுவும் நிறைநிலையில் எஞ்சுவதும் அரிது. ஒவ்வொன்றும் தன்னில் ஒருதுளியேனும் எதிர்காலத்தில் விட்டுவைத்ததாகவே அறியப்படுகிறது. எனவே முடித்து எழுவது எங்கும் எதிலும் இயல்வதேயல்ல. எச்சத்தை திரும்பி நோக்காது விட்டுச்செல்பவரே விடுதலையாகிறார்” என்று. இதற்குதான் குடும்பம், உறவுகள் எல்லாம் போல. நீட்சி இருக்கிறது என்னும் நப்பாசையில் சாகலாம் அல்லவா?  சாதாரண நம்மால் நாம் நினைத்தாலும் இருக்கமுடியாது. இப்போது அனைத்தையும் அறுக்கும் ஒருவன் வேண்டும் ஏன் என்றால் உலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதற்கு "தானும் தனது சொல்லும் " ஆகிய ஒரு வேதம் தேவை படுகிறது. இறப்பின்று அழுகி நாறும் அனைத்தையும் அழித்து தேவையானதை மட்டும் எடுத்து உலகை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவது. இங்குதான் கிருஷ்ணர் வருகிறார் என நினைக்கிறேன் .... பெரிதாய் தளைகளில் சிக்காமல் ஆனால் அனைத்தையும் அனுபவித்து அறிந்து குருஷேத்திரத்தில் கொண்டு அனைவரையும் ரத்தத்தில் குளிக்கவைத்து தேவை இல்லாதவைகளை இறக்கவைத்து ஒரு யுகத்தை தொடக்கி வைத்தவர்.ஆனால் நீலத்தில் அவரும் ராதையை ஏன் தேடிவருகிறார்....கலியுகத்தின் பண்பு  வெறும் காமம் மட்டும்தானா ? அதுதான் அடித்தட்டா ? 

நாரதர் கூறியதை ராமன் புரிந்துகொள்கிறார் ஆனால் லட்சுமன் முன்னால் வர  தான் என்பதையே மறந்து விடுகிறார். "இளையோன் நகர்நீங்கிய நாள்முதல் உணவொழிந்து துயில்மறந்து தனியறையின் மஞ்சத்தில் கிடந்தான் ராமன். அணிகொள்ளவில்லை, அரியணை அமரவில்லை, குடித்தெய்வங்களைத் தொழுவதும் மறந்தான் என வெண்முரசு கூறுகிறது. என்ன ஒரு பாசம்.  லட்சுமணன் அண்ணனை பார்க்காமல்  இருக்க முடியாமல் சோகத்தில் சரயுவில் பாய்ந்த செய்தியை அறிந்து "அவிழ்ந்துலைந்த குழலும் கலைந்துபறந்த உடையும் புழுதிபடிந்த முகமும் விழிநீர் உலர்ந்த வெறிப்புமாக அவன் தேர்த்தட்டில் நின்றான். சரயுவைக் கண்டதுமே கைநீட்டி கதறியழுதபடி அருகே சென்றான். தீர்க்கபிந்துவை அடைந்ததும் “இளையோனே…” என்று கூவியபடி தேரிலிருந்தே அதன் நடுவில் பாய்ந்தான். நீரில் ஒரு குமிழியென அக்கணமே மறைந்தான் என வாசித்தும் மூச்சு இழுத்து பிடித்து நின்றது. பைபிளில் வரும் கேயின் ஏபல் கதை நினைவுக்கு வந்தது. அப்பட்டமான கலியுக கதை அது.   ஏன் பைபிள் இரண்டாக பகுப்பபட்டிருக்கிறது என்றும் " ஜாருக்கு உரியதை ஜாருக்கும் தேவனுக்கு உரியதை தேவனுக்கும் கொடுங்கள் " "வாளுடன் நான் வந்திருக்கிறேன் " கனிகொடாத மரம் வெட்டி தீயில் போடப்படும் " என்ற வார்த்தைகளும் கிறிஸ்துவின் உவமைகளும் இப்போது அப்பட்டமான கலியுக வார்த்தைகள் என புரிகிறது. ஏன் பைபிள் வெறுக்கவும் விரும்பவும் படுகிறது என்றும் புரிகிறது. இது நீங்கள் கூறும்போது கூட புரியவில்லை இதை எழுதும் போது இப்போது அப்பட்டமாக கண்முன் தெரிகிறது. டால்ஸ்டாய் , காந்திக்கு எல்லாம் ஈஸியாக புரிந்ததில் வியப்பில்லை என்றும் எவற்றின் தொடர்ச்சி அவர்கள் என நினைத்தால்  மனம் கனக்கிறது. ரத்தத்தில் குளிப்பதுதான் கலியுக தொடச்சி என்றால் இப்போது அகிம்சையில் நாம் நிற்பது எதனால் ? சித்திரகுப்தன் ராமனிடம் "தவமின்றி உயிர்மாய்த்துக்கொள்வது அறப்பிழையென கொள்ளப்படும். துயர்கொண்டு இறந்தமையால் உங்கள்மேல் மாயையின் நிழல் எஞ்சியிருக்கிறது. இங்கு ஆயிரமாண்டுகாலம் இருளில் தவமிருந்து பிழைநிகர் செய்து வைகுண்டம் மீள்க!” என ஆணையிட அதன்படி ராமன் "பாதாளத்தின் தென்மேற்குமூலையில் தனிமையில் தவமிருந்து தன்மேல் படிந்த மாயையின் கறையை அகற்றி விண்பாற்கடலை சென்றடைகிறார்.ஆனால் அது எமனின் பிழையாய் பதிவு செய்யபட்டிருக்கிறது.தங்களை மாய்த்துகொள்கிறவர்கள் காலதேவனுக்கே சவால் விடுகிறார்களா?.படைப்பிற்கிறைவனிடம் தான் இதை குறித்து கேட்க வேண்டும் என எமன் கூற “சொல்லிலியில் எண்ணிலியில் காலமிலியில் வெளியிலியில் முழுதமைந்து விழிமயங்கும் மகாயோகப் பெருமாளிடம் எதை அறியமுடியும்?” என கேட்கிறார் நாரதர். “நான் என்ன செய்வது, முனிவரே?” என்று யமன் கேட்க  “ஒரு யுகம் பொறுத்திருங்கள். மீண்டுமொரு அலை நிகழட்டும். மண்ணில் அவன் பிறந்திறங்கி மெய்யறிந்தோனென்றாகி அதே நைமிஷாரண்யத்திற்குச் சென்று அதே குடிலில் எப்போது தங்குகிறானோ அப்போது சென்று உங்கள் ஐயங்களை கேளுங்கள். மெய்மை அறிவீர்கள்.”  என நாரதர் கூற எமன் “எப்போது நிகழும் அது?” என கேட்க “அறியேன். ஆனால் முதல்முறை வந்தவனில் நிகழாது எஞ்சியது மற்றும் ஒருவனாக மண்நிகழும் என்று உய்த்தறிகிறேன். அவன் கூறவியலாதவற்றை கூறுபவன், அவன் இயற்றாதொழிந்தவற்றை ஆற்றுபவன், அவன் அடையாதமைந்தவற்றை அடைபவன் வருவான் அவனை நாடுக!” என சொல்ல தனது வேலையை பார்க்க கிளம்புகிறார். ஜெயமோகன் சார் நீங்கள் அடிக்கடி கூறும் வரி " தெய்வத்திற்கு அறைகூவுவது " அப்படி என்றால் என்ன என்று நினைத்தால்  ......?  அப்படி அறை கூவுவர்களில் முக்கால்வாசி  பேர்களின் மரணத்தை நினைத்தால் ...?  "அதற்கெல்லாம் வரம் வேண்டும் என்று நினைக்கிறேன்" .

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்