Monday, April 15, 2019

தொடக்கம்



அன்புள்ள ஜெ

பத்தாம் தேதியே எழுத நினைத்தேன். ஆனால் மறுபடியும் வாசிக்க நினைத்தேன். இன்று காலை எழுந்தவுடன் வாசித்தேன். எழுதுகிறேன்.

வழக்கம் போல் சிறப்பான ஆரம்பம். இருக்கட்டும்.

புனைவுதான். ஆனால் இந்த மாதிரியான ஆரம்பத்தை எதிர்பார்க்கவில்லை.


இவ்வுலகில் அரியவை இரண்டே. தவமும் கொடையும். இரண்டும் மானுட உள்ளம் செல்லும் இயல்பான திசைக்கு நேர் எதிர்த்திசை நோக்கி செல்பவை. கொடை ஒரு தவம். தவம் ஒரு பெருங்கொடை” என்று இளைய யாதவர் சொன்னார். “

 “அளிப்பவன் ஆணவம் கொண்டால் பெறுவது பொற்குவையே ஆனாலும் இரவலன் சீற்றமே கொள்கிறான். பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பால் நின்றிருக்கும் தெய்வமொன்று ஒவ்வொரு மானுடனுக்கும் உள்ளே உறைகிறது. அது வணங்கிப் படைப்பனவற்றை மட்டுமே பெற்றுக்கொள்கிறது”  

மேல் சொன்னவை என்னை போன்ற எளியவர்களுக்கான அறிவுரை எனக் கொள்கிறேன். என்னை யோசிக்க வைத்த வரிகள் இவை. 


“பசிப்பிணி நீக்கி நற்பேறு கொள்ளும் வாய்ப்பை அல்லவா இழக்கிறீர்?” என்றார். கர்ணன் “பசியால் நலிந்த ஒருவரைக் காணும் துயருக்கு ஆயிரம் நற்பேறுகள் நிகரல்ல, யாதவரே” என்றார். “ஒவ்வொரு முறையும் பசித்த ஒருவருக்கு கொடையளிக்கையில் நான் அடைவதே என் வாழ்வின் பெருந்துன்பம். சம்பாபுரியில் பசியுடன் எவருமில்லை. ஆனால் பயணங்களில் என்னால் தவிர்க்கமுடிவதில்லை 


இந்த வரிகளை முதல் நாள் படித்த போதே என் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. இன்று படித்த போதும் என் கண்களில் நீர்.

அர்ஜூனன் வணங்கியது போல் நானும் மனதார கர்ணனை வணங்கினேன்.

இந்த கற்பனை ஒரு பேருண்மையை/நெகிழ்ச்சியை  உங்கள் வாசகர்களுக்கு அளிக்கிறது என்பதை தெரிய படுத்தவே என் கடிதம்.

 இது போல்  எனக்கு அடுக்கடுக்காக உங்கள் வரிகளை வாசிக்கையில் நிறைய நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன. என் நாட்கள் நன்றாக அமைகின்றன்.

நன்றிகளும், வணக்கங்களும், அன்பும்

க்ருஷ்ணன் உங்களுக்கு இது போன்றே நல்ல வார்த்தைகளை உங்கள் உள்ளத்தில் எழச் செய்யட்டும்.

மாலா

( மட்றொன்றும் தோன்றியது. அர்ஜூனன் கர்ணனைப் போல் அவ்வளவு குணவானாக இல்லாமல் இருந்தாலும் க்ருஷ்ணன் அருகில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.

கர்ணன் குணவானாக இருந்தாலும், துரியன் அருகில் இருக்கப் பெற்றான். விந்தையல்லவா இது)