Saturday, April 6, 2019

இமைக்கணம்- காற்றோடு பகை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இமைக்கணத்தின் ஏழாம் அத்தியாயம் பரவசமாக ஆரம்பித்து சுருங்கி காற்றோடு புகையாய் போன ஒரு கதை போல் ஆகிவிட்டது. முதலில் இந்த கதையை யார் ? யாரிடம் கூறுகிறார்கள்.... கர்ணனின் கனவை ஆசிரியர் எழுதுகிறாரா? இல்லை எதோ காற்றில் எழுதியது போல் இருப்பதை வாசிக்கிறாரா? ...வசுஷேனரின்  பிறப்புமுதல்  அவன்  பெயர் மட்டும் எந்த சாரமும் இல்லாமல் இருந்த ராஜபிரபா நூலும் எரிய அவர் எந்ததடையமும் இல்லாமல் காற்றில் கலக்கிறார்.  இந்த பீதியில் தான் மிக பிரமாண்டமான கோவில்கள் முதல் திருவள்ளுவர் சிலைவரை நிறுவபடுகிறதா? ....மனிதன் அவனுக்குதான் வாழணும் போல ...எல்லாம் கால காற்றில் அடித்துசெல்ல படும் என்றால் ? ..காலம் கடந்து நிற்பது சொல் தவிர வேறு ஒன்றுமே இல்லையா ? பாரி தனது தேரை முல்லைக்கு கொடுத்தான் என்பதில் இருந்த அறமும் அவனை எழுதியவன் சொல்லும் இல்லை என்றால் பாரி யார் நமக்கு ? ....அவனும் இன்னும் எவ்வளவு நாள் இருப்பான் ? ... ஒன்றரை அதிகாரங்களில் அனைத்தும் சொல்லிமுடிக்கபட்டு விட்டது . நான்  அவ்வளவு '" MONTAGES" களையும்  " ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா ..என்ற பாடலிலும் , " எங்கே செல்லும் இந்த பாதை " என்ற சாங்கிலையும் தொகுத்து பார்த்தேன்.  உக்கிரமான MONTAGES . 

ஜெயமோகன் சார், முதுமை குறித்து எவ்வளவோ பார்த்திகொண்டிருக்கிறோம் , வாசிக்கிறோம் , ஆனால் இதுவல்லவோ முதுமை என எண்ணியது வஷுசேனரின் முதுமை . அதும் இரண்டாக பகுக்கபட்டிருக்கிறது"  1. உண்மையில் கனவில் நடக்கும் முதுமை ......எல்லாம் நல்லபடியாக , வசுசேனரும் நல்ல மனநிலையில் இருக்கிறார். நல்லதே நடக்கிறது. சொல்லும், செவியும் அவிந்தபின் அவர் நினைப்பது எல்லாம் அப்படியே எதிர்பதமாக " தம்பியர் அவருக்கு துரோகம் செய்கிறார்கள்...பின் அவர்களை மன்னித்து தனது மகன்கள் போல என்கிறார், அவரின் கனவு வாழ்வில் சந்தித்து இருக்காத சவால்களையெல்லாம் சந்திக்கிறார், ஆட்சி பொறுப்பை துறக்க மறுக்கிறார், அவரை வற்புறுத்தி கானாட அனுப்பிவைக்க போய் அங்கு குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார் " ....ஏன் இப்படி? ....பிளவுண்ட நாக்கினால் கொத்து வாங்கியதினாலா?
 
மனிதனுக்கு தனது வாழ்க்கை போதாமல் தனது கடைசி சொட்டு ரத்தமும் எப்டி வாழ்கிறது என பார்க்க ஆசைதான் போலும்  "தந்தையை வாழ்த்திய நல்லூழ் மைந்தரைக் கைவிட்டு நிகர்செய்தது. நோயுற்று விருஷசேனரின் மைந்தர்கள் இறக்கவே அவர்களுக்குப் பின் வசுஷேணரின் இளையோன் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ அரசரானார். திசைவென்று வீரம் நிறுத்திய அபிமன்யூ இளமையிலேயே சிந்துநாட்டரசர் ஜயத்ரதனால் கொல்லப்பட்டார்.அபிமன்யூவின் மைந்தர் பரீட்சித் பிறப்பிலேயே நோயுற்றிருந்தார். நாகக்குறை கொண்ட பிறவிநூல் அமைந்த அவரை அரசமரச்செய்து அமைச்சர்கள் ஆண்டனர். பரீட்சித் நாகநஞ்சுகொண்டு அகவைமுதிராமலேயே இறந்தபின் அவர் மைந்தர் ஜனமேஜயன் அரசரானார். தந்தையைக் கொன்ற நாகங்களின் அருளைப்பெறும்பொருட்டு மாபெரும் சர்ப்பசத்ர வேள்வி ஒன்றை அவர் அஸ்தினபுரியில் நடத்தினார். அனைத்து நாகங்களையும் ஆற்றல்கொண்டெழச்செய்யும் அவ்வேள்வியில் ஏழு ஆழங்களிலிருந்தும் நாகங்கள் மேலெழுந்து வந்தன. கரிய காடென படம்தூக்கி நின்றாடி அவரை வாழ்த்தின. அவற்றின் நஞ்சைப்பெற்று அவர் ஆற்றல்மிக்கவரானார். படைகொண்டு சென்று பெருகிச்சூழ்ந்திருந்த எதிரிகளை வென்றார். அஸ்தினபுரியை அச்சமூட்டும் மையமென பாரதவர்ஷத்தின் நடுவில் நிறுவினார் ...என்று கார்கடல் வாசித்துவிட்டு திரும்ப இதை வாசிக்கும்போது கண்ணை கட்டுகிறது. 

அவரின் கொடி வழியினர் குறித்து "ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கில் மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் நிலம்தேடி ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தனர். இளவேனிலில் பிறந்து பெருகும் பரல்மீன்கள்போல பிறரை உண்டு தான் பெருகிய சிலரே எஞ்சினர். சிலர் எல்லைகளை உதறி புதிய நிலம் தேடிச்சென்றனர். அறியாப் பாலைகளில், இருண்ட காடுகளில், விசைகொண்ட ஆறுகளுக்கு அப்பால் விரிந்த புல்வெளிகளில், சென்றடையமுடியாத மலையுச்சிகளில் நாடுகளை உருவாக்கினர். அவர்களின் குலநிரைக் கதைகளில் பொருளில்லாச் சொல்லாக கர்ணகுலம் என்பது கூறப்பட்டது என்று இருக்கிறது. அப்போ ஆண்ட பரம்பரை என்று பொருள் இல்லா சொல்லால் தான் குறிப்பிடுகிறோமா? ...நன்றாய் வாசித்தால் அந்த கதைகளுக்கு என்ன பொருள் ? 


"பதினெட்டு அகவை நிறைந்த அவனுக்கு முடிசூட்ட முடிவெடுத்தார். அவையில் அதற்கான சொல்சூழ்கை நிகழ்ந்துகொண்டிருக்கையில் எவருமறியாமல் அஸ்தினபுரிக்குள் வந்த  க்ஷேமகன் விஸ்ரவன் துணைவர வாளுடன்  அவைபுகுந்து மைந்தனின் தலையை வெட்டி வீழ்த்தினான். அரியணையிலிருந்து அஞ்சி எழுந்து கூச்சலிட்ட நிரமித்ரனை நோக்கி பாய்ந்துசென்று தலைவெட்டிக் கொன்றான்.அவைமேடையில் விழுந்துருண்ட தலையிலிருந்து குருவின் மணிமுடியை எடுத்து தன் தலையில் சூடி கோல்கொண்டு அரியணையில் அமர்ந்து அரசனானான் க்ஷேமகன். கூடியிருந்த அவையினரை நோக்கி “என்னை வாழ்த்துக!” என்று ஆணையிட்டான். “ஆம், வாழ்த்துக!” என வாளுடன் நின்று விஸ்ரவன் கூவினான். அவையினர் எழுந்து கைதூக்கி “குருகுலத்தான் வாழ்க! அறம்திகழ வந்த அரசன் வாழ்க! மாமன்னர் க்ஷேமகர் வாழ்க!” என்று வாழ்த்து கூவினர். அந்நாளில்தான் துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கியது. அப்போ இது கலியுகத்தில் நடந்த கதை இல்லையா? ஆனால் வசுஷேனர் தனது தம்பிகள் தன்னை கொல்ல திட்டம் தீட்டியதை ஏன் எண்ணி கொள்கிறார். அது வெறும் கனவு. இது நிஜம். எந்த அறமும், பாசமும் , குற்றவுணர்ச்சியும்  இன்றி தனக்கு தேவையானதை  எடுத்துகொள்வது. கலியுகம்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்