ஜெ
வெண்முரசின் அழகியல் என்ன என்பதை குருக்ஷேத்திரம்
பற்றிய செய்திகள் வழியாகவே காட்டமுடியும். ஒருபக்கம் யதார்த்தவாதம். இன்னொரு பக்கம்
குறியீட்டு ரீதியான கவித்துவமான மிகை. இரண்டையும் சரிசமமாகக் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
கம்பராமாயணத்திலேயே கூட இதைப் பார்க்கலாம். கம்பனும் மில்டனும் என்னும் நூலில் கூட
இந்த அம்சம் பேசப்பட்டுள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் என நினைவு. சின்னவயசிலே
வாசித்தது.
குருக்ஷேத்திரம் மாபெரும் வேள்விக்களமாக அறநிலமாக
காட்டப்படுகிறது. கூடவே ஈவிரக்கமற்ற மானுட அழிவுநிகழ்ந்த இடமாகவும் தெரிகிறது. கடைசியாக
அது புருஷமேதவேள்வி நிகழ்ந்த நிலமாக காட்டப்படும்போதே போரின் விளைவாக சுற்றுப்புற ஊர்களெல்லாம்
எப்படிக் கொள்ளையடிக்கப்பட்டன, எப்படி மக்களெல்லாம் கிளம்பி பலதிசைகளிலாக ஓடி மறைந்து
அந்நிலத்தைக் கைவிட்டனர் என்பதும் காட்டப்படுகிறது. இரண்டுமே உண்மை. ஒன்று மெட்டஃபிஸிக்கல்
உண்மை. இன்னொன்று யதார்த்தம். கிளாஸிக் என்பது இரண்டிலும் கால்வைத்து நடப்பதுதான்
ஸ்வாமி