அன்பின் ஜெ,
ஒரு வாசகர் எழுதியிருந்ததைப் போல குருஷேத்திரம் மொத்தமாக ஒரு எரிகுளமாவது இனி மறக்க முடியாத உருவகம். இதுவரை வந்த போர் நிகழ்வுகள் அனைத்தும் இந்த மாபெரும் வேள்வியை நோக்கியே வந்துகொண்டிருந்தது எனலாம். உடல் வெந்த கிருதவர்மனால் வழிகாட்டப்பட்டு அமிர்தன் எனும் வேதியரால் நடத்தப்படும் இவ்வேள்வியின்போது இளைய யாதவர் நேரடியாக காட்டப்படவில்லை. ஆனால் புதிய வேதம் எழும் இவ்வேள்வியைக் கண்டு புன்னகைக்கும் அவர் முகமே மனதில் எழுந்து கொண்டு இருந்தது.
பதினேழாம் நாள் போர் தொடங்கியது வேள்விகளை ஏற்காத இளைய யாதவர் நிகழ்த்திய ஷுத்ரவேள்வியுடன். அன்றைய தினம் முடிவுறுவது ஐந்தெரி எழுந்த குருஷேத்திர பெருவேள்வியுடன். இரண்டுமே இளைய யாதவர் நிகழ்த்திய வேள்விகள் என எண்ணிக் கொண்டேன்.
பாரி