அன்புள்ள ஜெ
பல சிறு நுட்பங்கள் வழியாகச் செல்லும் வெண்முரசை ஒட்டுமொத்தமான
கதையாக வேகமாக வாசித்துச் செல்லும்போது சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும்
கதையின் நாம் கவனிக்காதவற்றை எவரேனும் சொல்லும்போதுதான் கவனிக்கிறோம். ஆகவேதான் நான்
இந்த வெண்முரசு கடிதங்கள் தளத்தை கவனிக்கிறேன். இதில் சிலர் தீவிரமாக எழுதுவார்கள்.
பின்னர் நின்றுவிடுவார்கள். சிலர் அவ்வப்போது எழுதுவார்கள். சிலநாள் கடிதங்களே வருவதில்லை.
உதாரணமாக அஸ்வத்தாமனுக்கும் பீஷ்மருக்குமான ஒற்றுமையை விருஷசேனன்
அடையாளம் காணும் இடம். அதே இடம் மீண்டும் அஸ்வத்தாமனின் கோணத்திலும் வருகிறது. அஸ்வத்தாமன்
போரின் கடைசியில் அந்த அலுப்பை வந்தடைகிறான். ஆனால் பீஷ்மர் போரின் தொடக்கத்திலேயே
அந்த அலுப்பை அடைந்துவிடுகிறார். அவர் கொடூரமாகப் போரிட்டதுகூட அந்த அலுப்பை ஜெயிப்பதற்காகத்தான்.
விருஷசேனன் அந்த அலுப்பை தானும் அடைவதைத்தான் கடைசியில் காண்கிறோம். ஆகவேதான் அவன்
இயல்பாக உயிரை விடுகிறான்
எஸ்.மகாலிங்கம்