வணக்கம் ஜெமோ,
நான் 2016 மே மாதம் தான் வெண்முரசு படிக்காத தொடங்கினேன். நீங்கள் அதற்க்கு இரண்டரை ஆண்டுகள் முன்னரே தொடங்கி விட்டீர்கள். ஒரு வேள்வி போல தொடர்ந்து வாசித்து, கிட்டத்தட்ட "மாமலர்" பாதியில் வந்து சேர்ந்தேன். அதிலிருந்து தினமும் படிக்காமல் இருந்ததில்லை. சமயங்களில் சில நாட்கள் விடுபடும், சேர்த்துப் படிப்பேன். சமயங்களில் நள்ளிரவு வரை விழித்திருந்து அடுத்த அத்தியாயத்தை படித்ததும் உண்டு. ஒன்றும் அதிசயமல்ல, பல வாசகர்கள் செய்வது தான்.
ஆனால், இந்த ஜனவரி மாதம் ஒரு தொய்வு. விருந்தினர் வருகை, வெளியூர் பயணம் என்று ஒரு வாரம் வாசிப்பு விடுபட்டு போனது. மீண்டும் தொடங்க முடியவில்லை. ஒரு விதமான மன தொய்வு, சோர்வு. ஓரிரு முறை விட்ட இடத்தில் இருந்து படிக்கலாம் என்று தொடங்கி அதே இடத்தில் தேங்கினேன்.
பின்னர் கடந்த 7 மாதங்களாக படிக்கவில்லை. அவ்வப்போது என்னவாயிற்றோ என்ற பதைப்பு ஏற்படும். ஆனால் வாசிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கினேன். அப்போது தான் எனக்கு ஒன்று தோன்றியது.
குந்தியும் கர்ணனும் சந்தித்த இரவோடு என் வாசிப்பு நின்று விட்டது. அடுத்த அத்தியாயத்தையே சில முறை மீண்டும் மீண்டும் தொடங்கி நிறுத்தி இருக்கிறேன்.
கர்ணன் படத்தில் பார்த்தது மனதை நெகிழ வைக்கும் ஆனால் சற்று நாடகத்தன்மையான காட்சி. தாங்கள் 'கலைக்கணத்தில்' விவரித்திருந்தது ஒரு கிளாசிக்.
ஆனால் வெண்முரசிலோ நடந்தது வேறொன்று. அதை என் மனம் தாளவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் தானோ படிக்க முடியவில்லை.
ஒரு அன்னையால் இப்படி நடந்துக் கொள்ள முடியுமா... அவள் அவனுக்கும் தானே அன்னை. Cold & calculated. என் ஆழ்மனம் அவள் கர்ணனிடம் அழுது கதற வேண்டும் என்று எதிர்பார்த்ததா. இல்லை பிருதையால் அது முடியாது. பாஞ்சாலி ஒரு சொட்டு கண்ணீராவது சிந்த வேண்டிம் என்று தேவிகை உபப்பிலாவியத்தில் எதிர்பார்த்து பின்னர் சீற்றம் கொண்டாளே ,அப்படி தான் நானும் சீற்றம் கொண்டேனா...
ஆனாலும் குந்தியின் செயலை வெறுக்க முடியவில்லையே. அது தான் தாய்மையோ. குஞ்சுகளை காக்கும் தாய்ப் பறவையாக அசலை அலைந்தாள். அதையே தான் குந்தியும் செய்கிறாள். கொடுப்பதை மட்டுமே அறிந்தவனிடம் அப்படி தானே பெற முடியும்.
பிள்ளையை பெற்றால் கண்ணீர் என்றார்களே, இது தானோ?
என் வினாக்கள் முடியாது. சில நாட்கள் கழித்து மீள் வாசிப்பு செய்கையில் ஏற்படும் திறப்புகளை பார்க்கலாம்.
ஆனால், வேறொரு சந்தேகம்.
அபிமன்யு மடிந்து கிடக்கிறான். (அது தனி பஞ்சாயத்து)
“அது சற்று முன்புவரை… இனிமேல் நான் இறந்தால் அருகே இறந்துகிடக்கும் உடல் உம்முடையது.”
பிரலம்பன் எங்கே...
சுவேதா