Wednesday, August 21, 2019

திரௌபதியின் மன அமைப்பு




அன்புள்ள ஜெ,

திரௌபதியின் மன அமைப்பும் சிந்தனை ஓட்டமும் பெரிதாக வெண்முரசிலே வரவேயில்லை. ஒரு கோயில்சிற்பம்போலத்தான் அவள் அறிமுகமாகிறாள். அவளுடைய சிந்தனைகள் வரும்போதெல்லாம் அது அவளுடைய இளமைப்பருவம் பற்றியதாகவே உள்ளது. அவளுடைய மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மனநிலைகள் அவளுக்குச் சின்னவயசிலேயே வந்துவிட்டன என்று இந்த நாவல் காட்டிக்கொண்டே இருக்கிறது. நாவல் முழுக்க பல முக்கியமான இடங்களில் அவள் மனம் நேரடியாகச் சொல்லப்படவில்லை. துகிலுரிதல் நடக்கும்போதுகூட காட்டப்படவில்லை. ஆனால் இப்போது அவள் தன் பிள்ளைகளை இழப்பதற்கு முன்னால் அவளுடைய மனநிலை ஒரேவீச்சில் ஒட்டுமொத்தமாகக் காட்டப்படுகிறது. இது ஏன் என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் இது என்ன ஆகப்போகிறது, இவள் எப்படி எதிர்வினை புரிவாள் என்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. எதிர்பார்ப்பதே நிகழ்வதும் ஒரு அழகு. எதிர்பாராத நுட்பங்கள் இன்னொரு அழகு. திரௌபதியின் குணாதிசயம் எப்படி வேண்டுமென்றாலும் மாறக்கூடியது என்பதனால் உருவாகும் எதிர்பார்ப்பு இது.

மகாலிங்கம்