அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
நாட்டுக்கு நாடு, படைக்கு படை, மனிதனுக்கு மனிதன், வாளுக்கு வாள், கைக்கு கை, வார்த்தைக்கு வார்த்தை, முறைப்புக்கு முறைப்பு, மௌத்திற்கு மௌனம் என்று உலகம் முழுவதும் போர் நடந்துக்கொண்டு இருக்கிறது. போர் என்று சொன்னது ஒன்றை ஒன்று அழித்துவிடுவதைப்பற்றிச் சொல்லவில்லை ஒன்றை ஒன்று எதிர்த்து முரண்பட்டு நிற்கும் நிலையைச்சொல்கின்றேன்.
பிரயாகையில் நடக்கும்போர் எண்ணத்திற்கு எண்ணம் என்று நடக்கிறது. எல்லோரும் எண்ணங்களால் போர் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கணிகன் அஸ்தினபுரிக்குள் வந்தது விதியின் ஆரம்ப புள்ளி என்றால், கண்ணன் அஸ்தினபுரிக்கு வந்தது விதியின் முடிவுப்புள்ளி. இரண்டுப்புள்ளிகள் கிடைத்துவிட்டது, விதி தனது நீளம் என்ன என்பதை இனி அளந்துப்பார்க்கும். மேலிருந்து நின்றுப்பார்க்கும் தெய்வங்கள் இதழ் விரியும்.
கண்ணன் அஸ்தினபுரிக்கு வந்தற்கு அவன் வாழ்க்கை காரணம். கணிகன் அஸ்தினபுரிக்கு வந்ததற்கும் அவன் வாழ்க்கைதான் காரணம். கண்ணன் ஒருவனே ஒரு குலமாக இருப்பவன். ஆயிரம் கன்றுகளை நாவுநீட்டி நக்கும் ஒற்றைப்பசுவாக இருப்பவன் அதனால் வந்தான். கணிகன் ஒரே ஒருவயிறு உடைவன் ஆனல் வயிறே உடம்பாக இருக்கும் பாம்பானவன் அதானால் வந்தான்.
ஆயிரம் ஆண்டுக்கு முன் லட்சோப லட்சம் சிற்பிகள் உண்ணாமல் உறங்காமல் குருதியை, அறிவை, ஆற்றலை பிசைந்துக்கட்டிய ஆலயமாக இருந்தால் என்ன?. கணிகன் என்னும் சிறுவிதை முளைக்கவேண்டும் என்றால் அந்த கோபுரத்தில் விரிசல் உண்டாக்கி அது முளைத்துக்கொண்டே இருக்கும். நமக்குதான் அது அஸ்தினாபுரம் என்னும் கோபுரம். கணிகன்போன்ற சிறுசெடிக்கு அதுதான் வாழ்வாராத மண்தொட்டி. கண்ணன் சொல்வதுபோல அதன் வேர் பற்றிக்கொள்ள கிடைத்த கையளவு மண். கணிகன் என்னும் விதையும் பாலையில் தப்பி பிழைத்த வீரிய விதைதான். எல்லா மனிதனும் கோடி கோடி விந்தின் வென்ற ஒரு விந்துதானே! அந்த ஒரு உயிர் அணுவுக்குள் இருக்கிறது மற்ற கோடி உயிர் அணுக்களின் சக்தி.
தன்னை பீடமாக்கி ஒரு குலத்தையே உயர்த்தி கோபுரமாக்க நினைக்கும் கண்ணனும், ஒரு கோபுரத்தையே மண்தொட்டியாக்கி தான்முளைக்க நினைக்கும் கணிகனும் எண்ணத்தின் முரண்களால் எங்கு எங்கு நிற்கிறார்கள் என்பது ஜெகாட்டும் எண்ணத்தின் யுத்தக்காட்சி.
துரியோதனன் தூதாக வந்தபோது முழுவதும் புறக்கணிக்கப்பட்டு முற்றும் முடிந்தவிட்ட ஒரு செயலை கண்ணன் தனது சூழ்ச்சியால் மாற்றி அமைக்கிறான். இந்த இடத்தில் இருந்து நோக்கும்போது கண்ணனுக்கும் சகுனிக்கும் என்ன வேறுமை? எல்லா சூழ்ச்சிகளும் சுயநலத்தின் பீடமே என்று நினைக்க வைக்கின்றது. அறம் என்பது என்ன? என்ற வினா எழுந்து நம்மை பட்டிமன்றத்தில் நிற்கவைத்து இரண்டும் சரியே நின்று நினைக்க வைக்கின்றது. தருமன் போன்றவருக்கு கற்பதற்கு புதியபாடம் ஒன்ற கிடைக்கின்றது. பீமன் போன்றவருக்கும் தனது ஞானத்தில் நின்றுக்கொண்டு பகடி செய்ய ஒருவன் கிடைக்கின்றான். அர்ஜுனன் போன்றவருக்கு அகத்தின் கதவுகளாய் இருக்கும் கண்களை கண்டுக்கண்டு ஏமாற இன்னும் இரண்டு கண்கள் கிடைக்கிறது. அதை திறந்து உள்ளிருப்பது கண்டு திகைக்கிறான் அல்லது என்ன இருக்கிறது என்று அறியாமல் தவிக்கிறான். முன் கண்ட ஒன்று இப்போது கண்ட ஒன்று அல்ல என்று சிந்திக்கிறான். ஜெவின் ஒவ்வொரு கணமும் ஒன்று நினைவுக்கு வந்து ஸ்தம்பிக்கிறான்.
கண்ணன் தூது வந்து மழலைமாற முகத்தோடு, மழலைக்குறிய தெத்துபேச்சோடு புன்னகையும், கண்ணீரும் கலந்து நிற்கும் ஒருவனும், தூது முடிந்து முழுதும் குழந்தையாகிவிட்ட ஒருவனும் நடிக்கவில்லை என்று நினைத்த அர்ஜுனன் இன்று ஏமாறுகின்றான். //அர்ஜுனன் அவன் புன்னகையைநோக்கிவிட்டு விழிகளை திருப்பிக்கொண்டான் // மனிதன் அகம் துளிகணத்தில் நம்பியும்விடுகிறது. பிரிந்தும் விடுகிறது.
மண்ணில் மனிதனாக பிறந்துவிட்டால் தெய்வமும் நடிக்குமோ? நான் நினைப்பதுபோல் கண்ணன் ஒருவனல்லாத இருவன் இல்லை ஜெ சொல்வதுபோல் கண்ணன் ஒருவனுக்குள் இருந்து ஒருவனாக வந்துக்கொண்டு இருக்கும் ஒருவன் // “பீதர்களின் களிப்பெட்டிகளைப்போல அவன் ஒருவனுக்குள்இருந்து ஒருவனாக வந்துகொண்டே இருக்கிறான்.”// ஏன் இந்த நிலை. இதுபோன்ற நிலையில் உள்ள ஒருவனை வெல்ல சகுனிபோன்ற ஒருவன் செய்யும் சூது மட்டும் ஏன் சூது என்று சொல்கின்றோம்.
வேர்வளர கைப்பிடி மண்ணும் இலைவளர நான்கிலை வனமும் தேவை அதற்காக முதுமரங்கள் தீயில் வெந்து அழிவது தவறில்லை என்று கண்ணன் மனநிலையோடு ஒப்பிடும்போது, தனது குலம் (சகோதரி காந்தாரி குலம்) செழிக்க அஸ்தினாபுரம் என்னும் பெரும் கோபுரம் விரிசல்விடட்டும் என்று நினைக்கும் சகுனியும் ஒன்றுதானே!
துரியோதனன் மூலம் பாண்டவர்களை அழிக்க நினைக்கும் சகுனியும், பாண்டவர்கள் மூலம் கௌரவர்களை அழிக்க நினைக்கும் கண்ணனும் ஒருவர்தானே.
கணிகன் திருதராஸ்டிரன் எண்ணத்தில் எறி பயணம் செய்கின்றான் என்றால், கண்ணன் குந்தியின் எண்ணத்தில் ஏறி பயணம் செய்கின்றான்.
அதுவும் சரி, இதுவும் சரி இரண்டுமே அவர் அவர் திசையில் நிற்கும் ஞாயம். பொது ஞாயம் இல்லையா?
குந்தியின் எண்ணம், பாண்டவர்கள் எண்ணம், திருதராஸ்டிரன் எண்ணனம், கௌரவர்கள் எண்ணம், கண்ணன் எண்ணனம், சகுனி எண்ணனம், கணிகன் எண்ணம் அனைத்திற்கும் அப்பால் அஸ்தினாபுரி என்ற எண்ணத்தில் நிற்கும் விதுரனின் எண்ணம் இத்தனை எண்ணங்களோடு போராடும் கண்ணின் எண்ணம். ஒருவனுக்குள் இருந்து ஒருவனாக வந்துக்கொண்டே இருக்கும் காட்சியின் அடையாளம். இந்த அற்புதத்தை நீக்கிவிட்டு கண்ணின் எண்ணம் என்ற ஒற்றை தளத்தில் அவனை வைத்துப்பார்த்தால் அவன் வெறும் சூழ்ச்சிக்காரன் மட்டும்தானா? விதுரர் சொல்வதுபோல //விதுரர்பெருமூச்சுடன் “அவன் சூதுநிறைந்தவன் என அறிந்திருக்கிறேன். இங்கு அந்த சூதை நாம் ஏற்கலாகாது.//
முடிவாக கண்ணனை நாம் எங்கு வைத்துக்கொள்வது. சுயநலக்காரன் சூதுகாரன் கம்சனின் மருகனாக இருப்பதாலும் குருதியிலேயே கொலைகாரன், கொஞ்சலும் கோபமும் கொண்ட சொல்காரன் என்று மட்டுமா?. கண்ணன் யார்? கண்ணன் சொல் பதிலாகின்றது.
விதுரர் “அநீதி வீரனின் படைக்கலம் அல்ல….”
கண்ணன் “நீதி என்றால் உங்களுடன் அரசியல்சொற்களில் சதுரங்கமாடுவதா என்ன? நான் அதற்காகவந்தவன் அல்ல. நான் ஒரு கூர்வாள். என் இலக்குக்கு நடுவே நிற்கும் எதுவும்வெட்டுப்பட்டாகவேண்டும்…. விலகுங்கள். இல்லையேல் தீராப்பழியுடன் உங்கள் வாழ்நாள் முடியும்”
இதுவரை நடந்த அரசுகள் எல்லாம் நீதி என்பது அரசியல்சொற்களில் இருந்தால்போதும் என்று இருக்க, அதை அரசியலாக்கும் செயலில் ஈடுப்பட்டவன் கண்ணன். அன்புள்ள ஜெ கண்டேன் குருசேத்திர கண்ணனை.
கணிகன் நீதி சொல்கிறது “எதிரிகளை நமக்குக் காட்டிக்கொடுக்கும் அவர்களின் மனிதர்களைவென்றபின் அழித்துவிடவேண்டும்”
சகுனியின் நீதி “மக்கள்…அவர்களை ஆள்பவன் வெல்கிறான். ஆட்படுபவன் அதனால் அவமதிக்கப்பட்டுஅழிகிறான்” என்றார் சகுனி. “அவர்களை வெறுப்பவன் அவர்களை வதைக்கத்தொடங்குவான். அவர்களைவழிபடுபவன் அவர்களால் ஆட்டிப்படைக்கப்படுவான். அவர்களை புரிந்துகொள். அவர்களிடமிருந்துவிலகியே இரு”
வள்ளுவர் நீதி -
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்,
சொல்லிய வண்ணம் செயல்.
சொல்லிய வண்ணம் செயல்.
கண்ணன் சொல்பவன் இல்லை செய்கிறான். செயலுக்கு அப்பாலும் இருக்கிறான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.