இனிய ஜெயம்,
வன மக்களுக்கு கடவுள் வழிபாடும், நீத்தார் வழிபாடும் இருப்பதன் தொடர்சியாக தெற்கு திசை நோக்கிய நம்பிக்கையும் இருக்கிறது.
இன்றைய பீமன் இடும்பன் சமர் மூதாதை திசையான தெற்கு எல்லையில் நடக்கிறதுபீமனின் யுத்த முறை இடும்பன் உடன் சமர் புரிகையில் முற்றிலும் கூர்மை அடைந்துவிட்டது. இனி துரியன் படுகளம் வரை 'எதிரின் பலவீனம்' நோக்கிய பீமனின் நகர்வே அவனுக்கு முதன்மை வெற்றியை ஈட்டி தரும் என்று புரிகிறது.
மரங்களில் மட்டுமே பெரும்பாலும் வசித்துப் பழகிய இடும்பனுக்கு கைகள் பலமாகவும் ,கால்கள் பலவீனமாகவும் இருப்பது இயல்பு. அந்த பலவீனத்தை பீமன் கணிப்பது எவரும் செய்யக் கூடியதே. ஆனால் மரக் கிளைகளில் அவற்றின் அடி மரம் மட்டுமே இடும்பனின் எடையை தாங்கும் வல்லமை கொண்டவை என்று மந்திகள் பீமனுக்கு உரைக்கும்போது , முற்றிலும் ஆச்சர்யம் அடைந்துவிட்டேன் மந்திகளுக்கும் பீமனுக்குமான நட்பு இதுவரை வேறு நிலை. இப்போது வேறு நிலை. மண்ணின் மைந்தனான இடும்பனை வீட்டு இடும்பி போலவே மந்திகளும் வந்தேறி பீமனால் அந்தக் கணம் முற்றிலும் 'வசீகரிக்கப் பட்டு' விட்டன.
சில சொற்களில் வந்தாலும் இடும்பியின் நிலை கலங்க வைத்து விட்டது. இடும்பனுக்கும் அழுது, பீமனுக்கும் அழுது,... எக் குலம் ஆகிலும் அக் குலக் கொழுந்தின் வேருக்கு நீர் பெண்களின் கண்ணீர்தான் போலும்.
ஷன்முகவேலின் இன்றைய ஓவியத்தில் அவர் பார்வையாளர்களை 'அமரச் செய்த' கோணம் அற்ப்புதம். நானும் எதோ ஒரு மந்திக் கூட்டத்துடன் அவர்களிடயே உயரத்து மரக் கிளையில் அமர்ந்து அந்தத் திடலைப் பார்த்தேன்.
அவரது ஓவியங்களில் எது சித்தரிக்கப்படும் 'மையமோ' அதில் ஒளி விழும்வை [அல்லது இருள் கவியும்] கோணமும், அந்த மையம் காட்டப் படும் பார்வைக் கோணத்தில் அம் மையத்துக்கு கூடும் அழுத்தமும், என்ன சொல்ல அந்த உணர்வை வகுத்துரைக்க இயலவில்லை.
சண்முகவேல் எப்போதும் அற்ப்புதம் புரிகிறார்.
கடலூர் சீனு