இனிய ஜெயம்,
வெண் முரசு முழுவதும் எத்தக்கையவன் சத்ரியன், அவன் ஏன் எக் கணத்திலும் சத்ரிய குணங்களை விடக்கூடாது, [திரௌபதி கேட்கும் கதையில் நாயகன் அரசை கூட துறக்கிறான் தனது சத்ரிய குணத்தை மட்டும் விட்டுத்தர ஒப்ப வில்லை] எனும் விவாதம் இடை இடையே வருகிறது.
இதை தொட்டு யோசிக்க அர்ஜுனனின் சத்ரிய நிலை காரணமாக அவன் அடையும் இக்கட்டு புரிகிறது. திருதுராஷ்ற்றரர் இன்று நாடிழந்த அவன் நோக்கில் மற்றொரு சத்ரியராக மட்டுமே தெரிவது இயல்பே.
அதுபோல மூத்தார் வழிபாடு அவர்களது சொல் இதன் மீது சத்ரிய குலம் கொண்டிருக்கும் விழுமியங்களும் புரிந்துகொள்ள முடிகிறது. தர்மன் அதில் துவங்கி இன்னும் தீவிரமாக நூல்களின் நெறி கொண்டு இந்த சத்ரிய குணத்தில் 'அறத்தின்' சாரத்தை அதிகரிக்க விழைகிறான்.
'என் விண்ணுலகப் பயணத்திலும் கூட அனேகமாக நான் தனியனாக செல்வேன் ' எனும் வரி வருகையில் கலங்கி விட்டேன். அறம் வழி நிற்ப்பவன் விண்ணக வழித் துணைக்கு மூதாதைகளோ புத்ரர்கள் கூட ஏஞ்ச மாட்டார்கள். சூர்ணன் கூட கிண்டல் செய்யும் நிலை.என்ன நிலை இது?
என் நிலையிலும் அறம் பிறழாத சத்ரியன் என்ற தர்மனின் கனவும், அறம் சில தருணங்களில் சத்ரியனுக்கு தளை எனும் அர்ஜுனனின் யதார்த்தமும் விவாதித்து ஒன்றை
ஒன்று முட்டி செயலற்று நிற்கும் கணம்.
இந்த உறைந்த கணத்தில் அர்ஜுனன் கிருஷ்ணனை நினைத்துக் கொள்வது அழகு. ஆம் கிருஷ்ணன் முட்டி நிற்கும் தடைகள் என ஏதும் இல்லை.
சூர்ணன் மார்பை மறைத்து உடை உடுத்தும் இடும்பியை கண்டு திகைத்து கூவுகிறான்.சத்ரியர்கள் கடைபிடிக்கும் அறத்தை அவன் இவ்வாறுதான் நோக்குகிறான் போலும்.
கடலூர் சீனு