Friday, December 12, 2014

இடும்பி எனும் அரக்கி



[இடும்பி கோயில் மணாலி]

அன்புள்ள ஜெயமோகன் சார்,வணக்கம்!
காட்டு வாழ்க்கையில் தன் பிள்ளைகள் மீதான குந்தியின் அன்னியோன்னியம்
நெகிழ்வைத்தருகிறது.அரக்கர் குலப் பெண்கள் என்றால் எனக்கிருந்த கற்பனையை இடும்பியின் மூலம் உடைத்திருக்கிறீர்கள்.அதென்னவோ,உங்கள் எழுத்தில் வரும் அத்தனை பெண்களும் மோகம் கொள்ள வைக்கிறார்கள்.
இரண்டு நாளாக இந்த சூர்ணன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
பீமனிடம் பாசம்,அர்சுனனிடம் பயம்,தருமனிடம் எகத்தாளம்.....!
சூர்ணன் எந்த காலத்திற்குமான இளைய தலைமுறையின் பிரதிநிதி.அவர்களுக்கே உண்டான சேட்டை,துணிச்சல்,பெண்கள் மீதான காதல் - கலாட்டா....அதேநேரம்,அறத்தின் மீதான் நையாண்டி.இதுதான் சூர்ணனின் படைப்பு உத்தி என எண்ணுகிறேன்.தருமன் அறத்தின் பிம்பமாய் இருப்பது,சூது கவ்வாத ஆதிமனிதனின் கண்களுக்குத் தெரிகிறது.எனினும் அறத்தின் மீது எழும் விட்டேத்தி பாவனை, ‘வேடிக்கையான மனிதன்’ ‘விசித்திரமானவன்..’என்று
தருமனை சூர்ணன் நக்கலடிப்பதில் வெளிப்படுகிறது.
கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்தே,அறத்தின் நிலையும்,இளைய தலைமுறையின் செயலும் முரண்களின் இணையாகத்தான் பயணிக்கிறதோ?
      எம்.எஸ்.ராஜேந்திரன் - திருவண்ணாமலை.


அன்புள்ள ராஜேந்திரன்

இடும்பியும் கடோத்கஜனும் மூலமகாபாரதத்திலேயே பண்பும் அன்பும் நிறைந்தவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். அவளுடைய நற்பண்புகளால் கவரப்பட்டே குந்தி அவளை தன் மகன் மணக்க ஒத்துக்கொள்கிறாள். அவளை வட இந்தியாவில் தெய்வமாக வழிபடுகிறார்கள். தென்னிந்தியாவின் புராணக் கதைசொல்லலில் இடும்பி ‘அரக்கி’ ஆகிவிடுவாள்

ஜெ