Monday, February 16, 2015

அடிகள்



அன்புள்ள ஜெ,

பித்தில் விழுவதும், மீள்வதும் உங்களுக்கு புதிதல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் இதை நீங்கள் எங்களிடம் சொல்வது இதுவே இரண்டாவது முறை. நீலம் மலர்ந்த நாட்கள் நினைவில் இருக்கிறது. அந்த புனைவு அதைக் கோரியதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வெண்முகில் நகரும் அதையே கோரியது எவ்வாறு? இவ்வாறு புனைவின் மூலம் இத்தகைய பித்தில் சென்று சேரத் தான் வேண்டுமா? இது உங்களை மீறியதா? 

இந்த பத்து நாட்கள் உங்களுக்குத் தந்த அக வாழ்வும், அதில் நீங்கள் வாழ்ந்த காலம் தந்த அனுபவுமும் உங்களுக்கு பயனுள்ளதாயிருக்கலாம். ஆனால் இது தேவையா? இவ்வாறெல்லாம் நிகழ்ந்தால் தான் நல்ல புனைவினைக் கொடுக்க முடியும் என்று நினைகிறீர்களா? உங்கள் குடும்பத்தினர் இதை எவ்வாறு எதிர்கொண்டார்கள். ஏனோ தெரியவில்லை ஒரு அச்சம் வந்தது. 

ஆனால் உங்களின் அடியை நம் அலக்கிய (நன்றி: ஒத்திசைவு ராமசாமி) வாசகர்கள் எதிர்கொண்ட விதம் என்னைப் புளங்காகிதம் அடைய வைத்தது. எதிர்காலத்தில் இப்படி ஓர் நிலை மீண்டும் வந்தால் இவர்கள் இயங்கும் தளத்தில் இரு வார்த்தைகள் எழுதிப் போடுங்கள். தானாக உங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்