Saturday, February 21, 2015

சூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பனிரெண்டு)



அன்பு ஜெயமோகன்,
        
   வெண்முகில் நகரத்தின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தில் கதைப்போக்கிலிருந்து சூதர்கள் என்னைத் துண்டித்த சம்பவம் அனிச்சையாக நிகழ்ந்தேறியது. முழவும், யாழும், துடித்தாளமும் எப்படி இருக்கும் என்பதை அறியும் ஆவல் எழுந்தது. இணையத்தில் தேடினேன். முழவு எனபது குறுங்கம்பு கொண்டும், கைவிரல்களைக் கொண்டும் இசைக்கப்படும் தோல்கருவியாகச் சொல்லப்பட்டிருந்தது. மேலும், அச்சொல் தாளக்கருவிகளைச் சுட்டும் பொதுச்சொல்லாகவும் கையாளப்பட்டிருக்கிறது. திருமுறைகளில் பல இடங்களில் முழவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. நவீன காலத்தைக் கொண்டு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் இருமுக முழவாக தபேலாவைச் சொல்ல்லாம். யாழ் நரம்புக்கருவி என்பது நாமறிந்ததே.

”தத்தகி தத்தகி தகதிமி திருநடனம்” எனும் சூதர்களின் குரலில் மறைந்திருக்கும் இசைவடிவை எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என மீண்டும் இணையத்தில் தேடினேன். கொல்லம் நாட்டுப்புற நிகழ்ச்சியான துடித்தாள நிகழ்ச்சிகள் என சில காணொளிகள் கிடைத்தன. அதுதான் துடித்தாளமா என நானறியேன். ஆனால், அவற்றில் பாடியவர்களும் ஆடியவர்களும் சூதர்களாகத் தெரிந்தார்கள். கிட்டத்தட்ட தற்போதைய உடுக்கை போன்ற கருவிகளுக்கு முன்னோடியாக துடியைக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.



முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.