Thursday, February 12, 2015

காமப்பெருநதி



அவள் தன் கைகளை விரித்து ஏற்று கொள்ளும் இடத்தில் தருமன் அடைக்கலமாகி பின் நடப்பது ஒரு மலர்ச்சி. ஆழ் நதி பயணத்தின் பயத்தில் நிற்கையில் உள்ளே இழுத்து சென்று வேறு உலகை காட்டி மீண்டு வருகையில் முதல் வேரை நிலை நிறுத்தி விட்டாள். பெண் தொடா ஆணின் அக தடுமாற்றம் நன்றாக வந்து இருந்தது. அவன் கைகளை எடுத்து இடை கோர்த்து தொடங்கினாள். தருமனோடு நடந்த இரவுகள் நதி தன்னோடு ஒரு நிலை கல்லை பெயர்த்தெடுத்து வார்த்து கரை ஒதுக்கிய நிகழ்வு. உலகம் மறந்து தன்னை மறந்து தூங்கியவனை சிசிரன் எழுப்பும் போது நீர் மேல் வந்து வான் கண்ட புது தாமரை அவன். 

ஆனால் பீமனோடு நடந்த நிகழ்வு ஒரு அபராமான கனவு. யோசித்து பார்க்க இயலா வர்ணனை. மல்லாந்து நீந்தும் போதும் ஆற்றிடை குறையில் படுத்து கிடக்கும் போதும் அவள் தன் உடல் மறந்து இருப்பதாய் அழகாக காட்டி இருந்துதீர்கள். possessiveness கேள்வி போல இடும்பி பற்றி அவள் கேட்டது கூட அவளை சம தள தரையில் பெண் மட்டுமாக நிறுத்தி பின் மீண்டும் தன் கூட்டுக்கு திரும்ப விழையும் பறவை போல் காட்டினீர்கள். சரியாக பீமன் கேட்டான் "இதுவல்ல அந்த இடம் என எண்ணுகிறாயா?”.. மீண்டும் கை நீட்டல். அரவணைத்தல். இவன் எடுத்து உண்ணும் ஆள் என்பதால் இடையை வளைத்து கொண்டான். ஆற்றலின் கரைகளை காணுவதற்கு ஏற்ற ஆற்றிடைக்குறை. விண்மீன்களின் துணையோடு வான் நீந்தல். 

அணைப்புக்குள் ஒடுங்கி கருவறை செல்ல தவிப்பது தான் ஆண் காமம் போல. ஒழுக்கம் கொண்டவன் சரி நிகர் துணை கொண்டு நிகழும் மாறுதல்கள், பரவசங்கள், தடுமாற்றங்கள், விண் வாசம் தொட்டு மீண்டு மண் ஊன்றி பிடித்து வளர்வதின் மாற்றம் நன்றாக வந்து சென்றது... 

தந்தைக்கும் அன்னையே. தன்னை கொண்டவனுக்கும் அன்னையே. தன்னை பெற்றவளுக்கும் அன்னையே. மாணிக்கவேல் சொன்னது போல எங்கும் அன்னையாகி தெரிகிறாள் இந்த கருந்தழல் பெண். 

கோட்டை உடைத்து வெல்வது பற்றி வீறு கொண்டு சென்று வென்று , பின் வரும் வெற்றி பற்றி மகிழ்ச்சி இன்றி வெறுமை தொடரும் அர்ஜுனின் இரவுகள் யோசிக்கிறேன். களம் பல கண்ட வீரன். எவ்விதம் போகும் இவனின் நீர் விளையாட்டும் பின் வரும் தன்னுணர் அமைதியும் 

 நீலம் ஒரு கனவின் பித்து எனில் இந்த நதிகளின் பித்து வேறு வகை. பத்து நாள் பித்தின் விழைவு தான் இதுவோ ?

அன்புடன், லிங்கராஜ்