“பிரிவைப்போல பெருந்துன்பம் பிறிதில்லை. இறப்பு அதனினும் சிறிது. இறப்புக்கு பொறுப்பேற்றுக்கொள்ள தென்திசைத் தேவன் இருக்கிறான். பிரிவுக்கு மானுடரே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்” – ஏன் தெய்வங்கள் இல்லையா என்ன? அடர்ந்திறங்கிய முற்றிருளிலும் துளி ஒளி தொலைவுக்கும் நீட்டி முனம்பில் ஒற்றைக் காலில் நிற்கிறாள் ஒரு கன்னி. ஆம், இறப்பு என்பது இல்லாதொழிதல், பிரிவு என்பது இன்மையை அளைதல். இருந்து கொண்டே இன்மையைக் காட்டும் நீலத்தின் முன் நிலையாக நிற்க யாரால் இயலும், என் குமரி அன்னையைத் தவிர. இறத்தல் ஒரு விடுதலை, பிரிவை விட எளிது. அதற்கு ஓர் தேவன், பரிவார தேவன் போதும். பிரிவை ஓர் ஆண் தாங்குவானா என்ன? அதற்கு முழுமுதல் தேவி அல்லவா வேண்டும். இழத்தலின் திசையில் தானே அவளும் நின்றாக வேண்டும்.
வெண்முரசில் குமரி அன்னை வரும் பகுதிகள் என்னை உவகை கொள்ள வைப்பவை. முன்பு கிராதத்தில் ‘மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது’, என அவளின் தவம் பேசப்பட்டது. இன்று மாமலரில் அவளது காத்திருப்பு பேசப்படுகிறது. முடிவே அற்ற காத்திருப்பு. நெய்தல் நில முனையில் அவள் காத்திருந்ததால் தானோ, ஊரடங்கியபின்னும் எங்கோ தொலைதூரத்தில், மயிலாடும் மலையில் இருக்கும் ஒற்றை மரத்தின் ஓரிலை தரை சேரும் நுண்ணொலியைக் கேட்டிருந்தவளை நெய்தல் திணையில் சேர்த்தனர் நம்முன்னோர்!!
குமரி அம்மனின் தொன்மத்தின் படி பாணாசுரன் என்னும் அசுரன் ஓர் கன்னித் தெய்வத்தால் மட்டுமே மரணமடைய முடியும் என்பதால் அன்னையின் திருமணத்தை ‘சதி’யால் நிறுத்துகிறார் நாரதர். அவுணனின் மரணத்திற்குப் பிறகும் தன் தவத்தைத் தொடர்கிறாள் அன்னை. இதில் ஒரு முக்கியமான குறிப்பு அந்த அசுரன் ஒரு கணனியால் மட்டுமே மரணமடைய இயலும் என்பது. அன்னையென்று கனிந்த ஒருத்தியால் ஓர் உயிரைக் கொல்ல இயலாது அல்லவா? முன்பு ரக்தபீஜனைக் கொல்ல அன்னையால் ஆகவில்லை என்பதை நினைவுகூரலாம். அப்படி இருக்க தேவயானி எப்படி கன்னியுடன் ஒப்புமை இடப்படுகிறாள்? அவள் கனிந்திருக்கிறாள், காதலில். அன்னையென ஆக விழைகிறாள். ஆயினும் தன்னிலை உணர்கையில் அவளிடும் தீச்சொல் கசனை முற்றாக அழித்து விடுகிறது. அவன் கனவுக்குள் இங்கு வந்த காரணம் முற்றழிந்து, அவனை ஒரு வெற்றுக் காலமாக, கலமாக ஆக்குகிறது. இது கன்னிக்கு மட்டுமே சாத்தியம்.
அருணாச்சலம் மகராஜன்