யானை தன் பாகனிடம் ஒரு சிறுவனைப்போல நடந்துகொள்கிறது. அவன் சொல்லும் சிறு சிறு கட்டளைகளுக்கு அடி பணிகிறது. தன் தவறுகளுக்கு அவனளிக்கும் தண்டனைகளை அச்சத்துடன் ஏற்றுக்கொள்கிறது. அவன் கையிலிருக்கும் சிறு அங்குசத்தைக் கண்டு அஞ்சுகிறது. தன்னைப் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலியிலிருந்து விடு பெற முடியாததாய் தன்னைக் காட்டிக்கொள்கிறது. அதே நேரத்தில் அந்த யானை தன் வலிமையையும் ஆற்றலையும் உணர்ந்தே இருக்கிறது. அவற்றை தன் பாகன் பயன்படுத்திக்கொள்ள மனமுவந்து ஒத்துழைக்கிறது. பாகன் தனக்கிழைக்கும் சிறு தவறுகளை அது பொருட்படுத்துவதில்லை. அவன் தனக்களிக்கும் அதிக வேலைகளுக்காக வெறுப்பதில்லை. அப்பாகனுக்காக உழைக்கிறது. அவனுக்காக தான் நேசிக்கும் காட்டை தியாகம் செய்திருக்கிறது.
யானையின் ஆளுமை மிகப் பெரிது. அதே யானை சினம் கொள்ளும் போதுதான் அதன் முழு வலிமையை ஆற்றலை, சினத்தை அறிந்துகொள்கிறோம். அங்குசம் வெறும் சிறு குச்சியென ஆகிவிடுகிறது. இரும்புச் சங்கிலிகள் மெல்லிய நூல்கள் என அறுத்தெறியப் படுகின்றன. இதுவரை பாகனின் கட்டுக்குள் இருந்ததெல்லாம் பாகன்மேல் கொண்டிருக்கும் நேசத்தின்பொருட்டே என்பது தெரியும். அந்த கடும் சினத்தின் தான் நேசித்த பாகனையே மிதித்து கொன்றழிக்கும் அந்த யானை.
தேவயானியும் யானையைப்போன்ற ஆளுமை கொண்டவள். அவள் ஆளுமையின் உயரத்திலிருந்தே அனைவரையும் நோக்குகிறாள். ஆனாலும் யானையின் பார்வை ஒரு பூவிதழையும் தவற விடாது. அவள் சர்மிஷ்டையின் அத்தனை பணிவையும் தாண்டி சர்மிஷ்டமையின் உள்ளத்தில் இருக்கும் எதோ ஒன்று அவளுக்கு உறுத்தலாக இருக்கிறது. அவள் தன்னை வியப்பதை அவள் உள்ளுணர்வு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளின் கூருணர்வின் இதில் ஏதோ பிழை இருக்கிறது என நினக்கிறாள்.
புவி அனைத்தையும் ஆள்பவனின் மகள். அசுரேந்திரனின் குலக்கொடி. நாளை பட்டத்தரசியாக யாரோ ஒரு சக்ரவர்த்தியின் இடம் அமரப்போகிறவள். அவள் தன்முன் வியந்து நிற்கும்போது தருக்கி எழாமல் எது ஒன்று தன்னுள்ளிருந்து மீண்டும் மீண்டும் நிலையழிவு கொள்கிறது?
ஒரு குழந்தையைப்போல் சர்மிஷ்டையின் உள்ளம் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறதா. அப்படியிருந்தால் தேவயானின் மனம் ஏன் நிலையழிவு கொள்கிறது. ஒரு குழந்தையைப்பார்த்து யாராவது எச்சரிக்கையுணர்வு கொள்வார்களா? ஆனால் தேவயானியின் ஆழ்மனம் பின்னர் நஞ்சென திறளப்போகும் சர்மிஷ்டையின் தாழ்வுணர்வை அறிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. மனிதர்கள் தன் உள்ளத்தை, சொற்களாலும் பாவனைகளாலும் மூடி மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர். ஆனால் ஒருவனின் ஆழ்மனது இன்னொருவனின் ஆழ்மனதை எப்படியும் அறிந்துகொள்ளவே செய்கிறது. ஆனால் நம் மேலுள்ளம், நாம் கொள்ளும் விருப்பு வெறுப்புகளின் காரணமாக அதைக் கவனத்தில்கொள்ளத் தவறிவிடுகிறது. தவறான கணிப்புகளை மேற்கொள்கிறது. தேவயானி தன் மனம் சொல்வதையும் மீறி சர்மிஷ்டையை நட்புடன் நடத்துக்கிறாள். அவளின் சிறு தவறுகளை பொறுக்கிறாள். அவளுக்கு ஒரு தோழியாக வழிகாட்டியாக ஒரு குருவாக இருந்து உலகியலை கற்பிக்கிறாள்.
ஆனால் ஒரு நாள் சட்டென்று சர்மிஷ்டைதேவயானியை மிகவும் இழிவுசெய்கிறாள். ஒருவன் செய்யும் ஏதாவது ஒரு செயலை பழிப்பது அச்செயல் முடிகையில் அந்தப் பழியும் போய்விடும். ஆனால் அவள் இழிவுசெய்வது தேவயானியின் பிறப்பை, குலத்தை, குல நெறியை, அவளின் தந்தையை, அதைவிட மேலாக அவர் நின்றிருக்கும் ஆசிரியர் நிலையை. இப்படி வெறும் சொற்களால் மட்டுமல்லாமல் செயலாலும் செய்கிறாள். ஒருவர் உயிருக்காகப் போராடும்போது அவரின் உயிர்காக்க தமக்கு வாய்ப்பிருந்தும் அப்படி செய்யாமல் விடுவது அவர் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாம் அலட்சியம் செய்வதாகும். அப்படி செய்கையில் அவர் வாழ்வை நாம் பழிக்கிறோம், அவர் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை பொருளற்ற ஒன்றென காட்டி இழிவுசெய்கிறோம். தனக்கு உதவிய ஒருவருக்கு இத்தகைய செயலைச் செய்வது அவர் செய்த உதவியையும் சேர்த்து அவமதிப்பதாக ஆகிறது. ஆகவே தேவயானி தான் பெரிதும் அவமதிக்கப்பட்டதாக கருதுவதற்கு அனைத்து நியாயங்களும் உள்ளன. .
தேவயானி இந்த அவமதிப்பில் பெரும்கோபம் கொள்கிறாள். ஒரு பேராளுமைகொண்ட பெண். அந்த ஆளுமையின் காரணமாகவே அவளுக்கு பெரும் கோபம் வருகிறது. மதம்கொண்ட பிடியானையென சினந்து எழுகிறாள். தனக்கு இழைக்கப்பட்ட தவறுக்கு சினம்கொள்ளும் யானையை நீ இவ்வளவுதான் தாண்டனை கொடுக்கவேண்டும் என யார் சொல்ல முடியும்.
யானை ஒருவரை தாக்குவது அவரை திருத்துவதற்காகவோ அல்லது தண்டனையளித்து நீதியைக் காப்பதற்காகவோ அல்ல. தன் சினத்தைத் தீர்த்துக்கொள்வது மட்டுமே அதன் நோக்கம். தன் தந்தை மூலம் அவள் விடும் இரண்டேவரி கொண்ட சொல்லாணையில் சர்மிஷ்டை தான் பிறந்ததிலிருந்து பெற்றிருந்த அரசவாழ்வு, உறவினர்கள் நடுவில் அவள் அடைந்திருந்த முக்கியத்துவம், அவளுக்கு நடக்கவிருந்த திருமணம், பேரரசி என ஆகவேண்டிய எதிர்காலம் போன்ற எல்லாவற்றையும் அழித்துவிடுகிறாள்.
அவளை நேர்விழிகளால் நோக்கி “என் கோரிக்கைகள் இவை. நான் குருநகரியின் அரசன் யயாதியின் பட்டத்தரசியாக அமர்ந்து பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாகவேண்டும். விருஷபர்வனின் மகளாகிய சர்மிஷ்டை என் பணிப்பெண்ணாக என்னுடன் குருநகரிக்கே வரவேண்டும்” என்றாள்.
ஆனாலும் ஒன்றை முற்றழிக்க எவரால்தான் முடியும்? யானை மோதி உடைத்தழித்த சிறு மரங்களின் வேர்களிலிருந்து மீண்டும் புது மரக்கன்றுகள் துளிர்த்தெழலாம். ஊழின் வல்லமையால் அது எப்போதும் நிகழக்கூடியதே
தண்டபாணி துரைவேல்.