அன்புள்ள
ஜெயமோகன் அண்ணா,
பயணம் எப்போதும் இனிது. பேருந்தில்- ரயிலில்
ஜன்னல் ஒர இருக்கை கிடைப்பது
- வேடிக்கை பார்த்துக்கொண்டே நீண்ட பயணம் போவது. பயணத்தில்
ஆர்வம் இருக்கும் வரை இளமை இருக்கிறது. பயணத்தில்
முற்றும் ஆர்வம் போய்விட்டால்- எங்கும்
போக வேண்டாம் இங்கேயே இருக்கலாம் என்று
தோன்றிவிட்டால் அதுதான் முதுமை ஏற்பட்டதன்
அடையாளம் என்று எண்ணுகிறேன்.
வெண்முரசு உங்களுடன் மேற்கோள்ளும் நீண்ட பயணம். இந்த பயணத்தின் வாகன
ஒட்டியும் நீங்கள் தான் வாகனமும்
நீங்கள் தான் வழித்துணையும் நீங்கள்
தான். ஆனால்
மூன்றையும் நேரடியாக காணமுடியாது - பயணம் போகும் என்னையும்
நான் காண முடியாது. காணமுடியாது என்பதால் இல்லை என்றும் ஆகாது. வெண்முரசு
உங்கள் எழுத்துக்களின் உச்சம் - உங்கள் படைப்புகளின் சாரம்சங்களின்
ஒட்டுமொத்தமும் இதில் இருப்பது போல்
தோன்றுகிறது. மத்தக
யானையும் -யட்சியும் - அட்டைகள் மீது தாய்மையின் பரிவு
கொள்ளும் தாயும் எத்தனையோ பேர்
- அவர்களது பெயர்களுடன் அல்ல -அவர்களது சூழல்கள்-சம்பவங்களுடன் அல்ல - ஆனால் சாரமாக
- அவர்கள் நம்மில் உள்கிளர்த்தும் ஏதோ
ஒன்றாக வெண்முரசில் தங்கள் இருப்பையும் பதிவு
செய்கிறார்கள். தருமபுரி
நக்ஸலைட் எங்காவது ஒரு கணம் சிக்கக்
கூடும். இந்த
மண்ணில் நின்று மானுடத்தை நோக்கும்
கண்களுக்கு இப்படித்தான் மானுடத்தின் ஒட்டுமொத்தம் அகவடிவாய் தோன்றமுடியும் என்று எண்ணுகிறேன்.
வியாசர் தன்னை நிறுவிக்கொள்ள யுகங்கள்
தோறும் சரியான நபர்களை தேர்ந்தெடுத்துக்
கொள்கிறார். யுகங்கள்
தோறும் புறவுலகம் மாறுபடும் அக உணர்வுகளின் அடிப்படை
தன்மைகள் மாறுவதில்லை என்பது போல் உறுதியுடன்
தகுந்த முறையில் தேறும் அவ்வகையில் வியாசர்
விஷ்ணுவே தான். மின்சாரத்தை
யுகங்களின் ஊடக கடத்தும் நம்
கோனாரின் திறம் வியக்கிறேன்.
வெண்முரசு தமிழ்மொழிக்கு உங்கள் கொடை.
எத்தனை இடங்களில் திருக்குறள் வனநதியின் நீரோட்டத்தில் கலந்து செல்வது
போல் சென்று அங்கங்கே தன்னை கதிரொளியில் மின்னும் நீரசைவு போல்
வெளிப்படுத்துகிறது. போகிறபோக்கில் எத்தனை சொற்களை உருவாக்குகிறீர்கள்?
"பெருந்தன்மை"
"பரந்த மனப்பான்மை" அப்படி இல்லாமல் அதென்ன
"உளவிரிவு"?. இப்போது
உங்களுக்கு ஒரு கடிதம் எழுத
வேண்டும் என்றால் உங்கள் சொற்களைத்
தவிர்த்து எழுதுவது ஒரு சவாலாகவே ஆகிறது.
மாமலர்
வாசிக்கத் தொடங்கியபின் இந்த மாய ஆடியின்
அந்த பக்கம் நீங்களும் இந்த
பக்கம் நானும் - நடுவே ஆடியும் இருந்தன. ஒருசில
நாட்களில் அந்த பக்கம் இருந்த
உங்கள் முகம் மறைந்து விட்டது.
"அட என்ன இது?" என்று
பார்த்த போது இந்த பக்கம்
நான் இல்லை - நடுவே ஆடியும்
இல்லை. இப்போது
பயணம் மட்டுமே - அதைதவிர வேறொன்றும் இல்லை. முதலில்
வெண்முரசு வாசிக்கிறேன் என்பேன் இப்போது அது
ஒரு செயலாக இல்லை -அல்லது
அனிச்சை செயல் போல் ஆகிவிட்டது
- அது நிகழ்கிறது.
மாமலர்
இதுவரை வாசித்ததன் வாயிலாக - சொல் உங்கள் ஜெமோ
உனக்கு இதில் இதுவரை என்ன
சொன்னதாக கருதுகிறாய் ? - என்று யாரேனும் கேட்டால்
என் பதில் -
"நிறைய
சொல்ல முடியும். என்றாலும்
கொஞ்சம் சொல்கிறேன்.
பெண்களின்
மீது அன்பு, பரிவு, நேசம்
கொள்ளச் சொல்கிறாரா ? - அப்படி சொல்கிறார் என்று
சொல்லி விட முடியாது.
பெண்களை
கடவுளாக போற்றி வணங்குங்கள் என்று
சொல்கிறாரா ? - அப்படி சொல்கிறார் என்று
சொல்லி விட முடியாது.
பெண்கள்
பேராற்றல் அவர்கள் இன்றி ஓரணுவும்
அசையாது . பரிவு-பச்சாதாபமெல்லாம் அவர்களிடம் இருந்து உங்களுக்குத்தான் தேவை என்று சொல்கிறாரா ? - அப்படி
சொல்கிறார் என்று சொல்லி விட
முடியாது.
பெண்களிடம்
நியாமாக-நீதியுடன் நடந்து கொள்ளுங்கள் என்று
சொல்கிறாரா ? - அப்படி சொல்கிறார் என்று
சொல்லி விட முடியாது.
ஆனால் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி
அப்படித்தான் சொல்கிறார் என்று சொல்வேன். நேரடியாக எதையும் அவர் சொல்லவில்லை
ஆனால் எந்த விளைவை உருவாக்க
இவையெல்லாம் சொல்லப்படுமோ அந்த விளைவை உருவாக்குகிறார்.
ஒரு
மாய சமையல்காரன் இந்த உணவு மிகவும்
சுவையானது என்றும் சொல்லாமல் இது
பசி தீர்க்கும் என்றும் சொல்லாமல் - வெறும்
சமையல் குறிப்புகள் மட்டுமே சொல்லி - நா
சுவையும் உணர்ந்து பசியும் மறைந்தது போல்.
- இது
என் கருத்து எனினும் உண்மையில்
மூதன்னையர் என்னுள் உருவாக்கியதோ என்று அய்யம் கொள்கிறேன்.
வெண்முரசு
பல்லாயிரம் பல்லாயிரம் மக்களால் வாசிக்கப்படும். "மகாபாரதம்
படிக்கப்போகிறாயா? வெண்முரசு படி" அது அப்படித்தான் ஆகும். சிவபெருமான்
ஆதியோகியாக சுருங்குவதா? என்பது போல மகாபாரதம்
வெண்முரசாக சுருங்குவதா? என்றெல்லாம்
சொல்பவர்களுக்கு நான் கூற விளைவது
"இது உலகளாவிய தன்மை உடைத்து என்று ஒன்றை உணர்ந்து இன்று உலகளாவிய
மானுட நோக்கில் விரிவடைய அதை முன்வைத்தல் 'சுருங்குதல்' எனக் காண்பது என்ன
மடமை? மகாபாரதம் என்றால் அது வெண்முரசு
தான். அது
அப்படித்தான். இது எதிர்காலத்தில் ஆங்கிலம் கொண்டு உலகின் கரங்கள் சேரும் ஏராளமான உள்ளங்களை கைப்பற்றும். நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு இலுமினாட்டி - அலுமினிய நாட்காட்டி என்றெல்லாம் புனைந்து மகிழ்ந்து கொள்ளுங்கள் காழ்ப்பியல் அறிஞர்காள் !. - என்பதே.
அன்புடன்
விக்ரம்
கோவை